தாயின் காலடியில் சுவனம்
---------------------------------
மெளலவி வி.எஸ். முஹம்மது முஸம்மில் அல்புகாரி
நாம் இன்று நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதன் நிலவில் குடியிருக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் தொழில் நுட்ப உலகில் நாம் இருக்கிறோம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதுப்புது கண்டுபிடிப்புகளும், ஒய்யாரக் கட்டிடங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் பெருகிக் கொண்டே செல்கின்றன. இன்றைய உலகில் எல்லாம் கண்டு பிடித்து விட்டார்கள், ஆனால் மனிதனை மறந்து விட்டார்கள். நாம் வாழத் தேவையான அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனால் நம்மோடு வாழ்பவர்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். உறவு முறைகள் தூரமாக்கப்பட்டுவிட்டன.
தந்தை மகன் உறவுகள் இன்று முகநூலில், வாட்ஸ் அப்பிலும் மட்டுமே இருக்கின்றன. இதன் விளைவாக இன்று தமிழகத்தில் இருக்கும் முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. எல்லா முதியோர் இல்லங்களிலும் இட நெருக்கடி ஏற்படும் அளவிற்கு மகன்களால் கைவிடப் பட்ட வயோதிகப் பெற்றோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இரக்கமில்லாத பிள்ளை, அன்பைத் தொலைத்த மருமகள், அக்கறையற்ற உறவினர்கள் என்ற தொடர் பிரச்னைகளால் அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் ‘ஆதரவற்றவர்’ என்ற அடைமொழியோடு முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகி விடுகின்றனர்.
தன்னை ஈன்றெடுத்து பராமரித்து வளர்த்த தனது பெற்றோரை, தனக்கு எல்லா வசதிகள் வந்ததும் கைவிடுகின்ற ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுங்கோலர்கள்? இதை விட நன்றி கொல்லுதல் எதுவும் இருக்க முடியாது. எந்தப் பெறோர்கள் தனது மகனுக்காக நெஞ்சுருகி பிரார்திப்பார்களோ அவர்களே தனது மகன் செய்த அட்டூழியத்தால் மனம் பொறுக்க முடியாமல் செய்யும் சாபம் எவ்வளவு கொடுமையானது.
இஸ்லாம் பெற்றோரைப் பேணுதல் குறித்து அதிகம் வலியுறுத்தியுள்ளது. பெருமானார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘தாயின் காலடியில் தான் சுவர்க்கம் உள்ளது.’
பெற்ற தாயை நோவினைப் படுத்தி விட்டு எவ்வளவு பெரிய ஆன்மிகவாதியாக ஒருவர் இருந்த போதிலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், இறைவனின் பார்வையில் அவர் மாபெரும் பாதகம் செய்தவராவர். அவனது தாய் அவரை மன்னிக்காத வரை இறைவன் அவர் மீது தனது கருணைப் பார்வையை பார்க்க மாட்டான்.
மேலும் நபிகள்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைவனின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்தில் உள்ளது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.’
இயல்பிலேயே வயது முதிர்ந்ததும் நமது பெற்றோர்கள் பாதி குழந்தைகளாகி விடுகின்றனர். அதனால் அவர்கள் நமது வெறுப்பைச் சம்பாதிக்கலாம். அந்த நிலையிலும் கூட அவர்கள் மனம் புண்படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என இறைவன் வலியுறுத்துகிறான். அவர்களைப் பார்த்து ‘ச்சீ’ என்று கூட கூறக்கூடாது என திருமறை கட்டளையிடுகிறது.
ஒருவருக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தால், அவர் இறை வழியில் போர் செய்வதை விட அவருக்கு தனது பெற்றோரை கவனிப்பது சிறந்ததாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். இறைவன் தனக்கு அடுத்தபடியாக தன் அடியார்களை நன்றி செலுத்துமாறு கூறியது பெற்றோர்களைத் தான் என இறைவன் கூறுகின்றான்.
‘நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது பற்றி போதித்தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 31:14)
நம் பெற்றோர்களே நாம் சுவனம் செல்வதற்கான பாதை. அவர்கள் மனம் புண் படாதவாறு அவர்களிடம் நடந்து, அவர்களின் திருப்தியை பெற முயற்சிக்க வேண்டும். நம் கண் முன்னே ஆதரவற்று நிற்கும் தங்களது பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு நாம் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.
நபி ஸல் அவர்கள் நவின்றார்கள்: ‘முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவனுடைய மூக்கு மண்ணோடு மண்ணாகட்டும்!’
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு ஆற்றுவதற்காக மேடையில் ஏறும்போது மூன்று முறை ‘ஆமீன்’ (இறைவா...! இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!) என்று கூறினார்கள். தோழர்களுக்கோ வியப்பு. கேட்டும் விடுகிறார்கள். நபியே..! இறைத்தூதரே...! திடீரென நீங்கள் இவ்வாறு கூறக் காரணம் என்ன? என்று வினவியபோது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
‘என்னிடம் வானவர் தலைவர் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் வந்து மூன்று பிரார்த்தனை புரிந்தார்கள். நான் ஆமீன் என்று அந்தப் பிரார்த்தனைக்கு பதிலளித்தேன் என்று கூறிவிட்டு அந்த மூன்று பிரார்த்தனைகளையும் கூறினார்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ உயிருடன் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவனம் செல்லாதவன் நாசமடைவதாக..! என்று ஜிப்ரயீல்(அலை) பிரார்த்திக்க நான் ஆமீன் என்று கூறினேன். அதுபோல இந்த ரமளான் மாதத்தை அடைந்தும் பாவமன்னிப்புப் பெறாதவர் நாசமடைவதாக என்று கூறிய போதும் நான் ஆமீன் என்று கூறினேன். நபியாகிய என் பெயர் மொழியும்போது என்மீது வாழ்த்துச் சொல்லாதவர் மீதும் நாசம் உண்டாவதாக என்று பிரார்த்தித்தபோதும் நான் ஆமீன் என்று கூறினேன்’ என்று சொன்னார்கள்.
வாருங்கள் நம் பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவன பாக்கியத்தை அடைவோம்.
Leave a comment
Upload