‘அன்பே சிவம்’ என்று திருமூலர் உன்னை தப்பிதமாக வர்ணித்து விட்டார் போலும். இதில் சிவம் என்பதை எல்லாத் தெய்வத்திற்குமான குறியீடாகப் பார்க்கும் இவனுக்கு, நீ உணர்ச்சியற்ற சவம் என்றே தோன்றுகிறது. இரக்கமற்ற இறைவன். கருணையே இல்லாத நீயெல்லாம் ஒரு கடவுள்!
அன்றாடம் எத்தனை பாலியல் கொடுமைகள், இயற்கைச் சீற்றங்கள், கோர விபத்துக்கள், கொலை கொள்ளைகள்.. இவைதான் உன் அன்பின் வெளிப்பாடா? ‘எல்லாம் அவன் செயல்’ என்ற தர்க்கத்தின்படி இத்தனை அராஜகங்களுக்கும் நீதானே பொறுப்பேற்க வேண்டும். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற கூற்று உண்மையெனில், எண்ணற்ற வியாதிகளுக்கும், பரிதாபமான ஊனங்களுக்கும், தாங்கவொண்ணா வறுமைக்கும், வாட்டி வதைக்கும் முதுமைக்கும் இன்னபிற அல்லல்களுக்கும் நீயேயல்லவா முழுமுதற்காரணம்.
மனிதர்களைப் படைத்த நீ அவர்கள் மனதில் காம எண்ணங்களை ஏன் விதைத்தாய்? அவை இனப்பெருக்கத்திற்காக என வாதாடலாம். அதற்கு, குறிப்பிட்ட பருவத்தில் தன் துணை மீது மட்டும் மானுடர்க்கு கலவி இச்சை ஏற்படும்படி மரபணுக்களை, நரம்பு மண்டலத்தை வடிவமைத்திருக்கலாமே.. மனித உடலில் அதற்கேற்ப வேதியியல் மாற்றங்களை உன்னால் செய்திருக்க முடியும்தானே.. அனைத்தையும் உருவாக்கி, பரிபாலிக்கும் சர்வேஸ்வரன் அல்லவா.. அப்படி நீ செய்யத் தவறியதால்தான் பாழாய்ப்போன சிற்றின்ப ஆசைகள் மக்களை, குறிப்பாக ஆடவரை ஆட்டிப் படைக்கின்றன. அளவுக்கதிகமான பெண்ணாசைதானே இத்துணை வக்கிரச் செயல்களுக்குத் தொடக்கப் புள்ளியாய் அமைகிறது.. உன் ஆணினப் படைப்பில் ஏற்பட்ட கோளாறுக்கு எத்தனையெத்தனை மகளிர் தொடர்ந்து பலிகடாவாகி வருகின்றனர்..
பெண்டிரை நுகர்பொருளாக மட்டுமே துய்க்க நினைக்கும் கீழ்த்தரமான ஜந்துக்களை நீ உடனுக்குடன் தண்டித்திருக்க வேண்டாமா? அப்போதுதானே மற்றோர்க்கும் எச்சரிக்கை மணி ஒலித்திருக்கும். ‘தெய்வமும் அன்றே கொல்லும்’ என்று நிரூபித்திருக்க வேண்டும்.
யாருக்காவது அப்படியொரு துரித தண்டனை கொடுப்பாய் என்ற நம்பிக்கையில் பல்லாண்டுகளாக காத்திருந்து ஏமாந்தான் இவன். தற்போது விரக்தியின் விளிம்பிற்குப் போய் இத்தனை அட்டூழியங்களுக்கும் மூலகர்த்தாவான உன்னையே தண்டிப்பது எனத் தீர்மானித்து விட்டான்.
“ஆய்வாளர் அய்யா.. இந்தக் கொலைக்கு யார் காரணம்.. என்ன நோக்கம்னு நினைக்கிறீர்கள்..”
“ஹலோ மிஸ்டர்.. நீங்க ‘தினப்புரளி’ நிருபர் தானே..”
“ஆமாம்.. எப்படி கண்டுபிடித்தீர்கள்..”
“இன்ஸ்பெக்டர் சார்னு சொல்லாம தூய தமிழ்ல எழுதற மாதிரி பேசறீங்களே.. ஏற்கெனவே ஒரு பிரஸ் மீட்ல உங்களை பார்த்திருக்கேன்..”
“அது சரி.. என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே..”
“ஒருத்தர் மர்மமான முறையில இறந்து போயிருக்கார்.. தடயங்களை சேகரிச்சிட்டிருக்கோம்.. இப்போதைக்கு அவ்வளவுதான்..”
“அந்த உடலை பார்த்தவுடனே எதாவது முடிவுக்கு வந்திருப்பீர்களே.. ”
“பாதி சடலம் நெருப்புல வெந்து போயிருந்தது.. ”
“சமையல் எரிவாயு உருளை வெடித்திருக்குமோ..”
“இல்ல.. கிச்சன்ல சிலிண்டர் பத்திரமாதான் இருக்கு.. பாடி உட்கார்ந்த மேனிக்கு விரைச்சு போய் கிடந்துது.. முதுகுல வரிவரியா ரத்த தழும்புங்க..”
“யாரையாவது சந்தேகப்படுகிறீர்களா.. விசாரணை எப்போது தொடங்கும்..”
“உங்களை மாதிரி பத்திரிகைகாரங்களுக்கு இதுக்கு மேல தீனி போட முடியாது.. ஆளை விடுங்க...எனக்கு நேரமாச்சு..”
“அய்யா.. பிரேத பரிசோதனை அறிக்கை என்ன சொல்லியிருக்கு.. அதை மட்டுமாவது....”
“இன்னும் ‘அடாப்ஸி’ பண்ணலே.. சம்பவம் நடந்த எடத்துல ஃபாரன்ஸிக் ஆளுங்களோட வேலை பாக்கியிருக்கு..”
“மோப்ப நாயெல்லாம் வந்து பார்த்ததாமே.. அதிலிருந்து எதாவது துப்பு கிடைத்திருக்குமேய்யா..”
“அதுங்க அவரோட அறையை விட்டு வெளியே போயிட்டு திரும்ப உள்ளுக்குள்ளயே சுத்தி சுத்தி வந்துதுங்க.. அவ்வளவுதான்.. ஓக்கே.. நான் கமிஷ்னரை பார்க்க போகணும்..”
“கடைசியா ஒரேயொரு வினா.. யார் யாரை விசாரிக்கலாம்னு திட்டம்..”
“செத்துப் போனவர் ஒண்டிக்கட்டையாம்.. சாப்பாடு செஞ்சு போடறதுக்காக ஒருத்தர் கூடவே இருந்திருக்கார்.. அந்தாளை சில கேள்விகள் கேட்கப் போறோம்..”
“... ‘சென்னை முகப்பேரில் மர்ம மரணம். சமையல்காரர் மீது காவல்துறை சந்தேகம்’ என்று தலைப்புச்செய்தி போட்டுக்கொள்ளலாமாய்யா..”
“அது உங்க வழக்கம்தானே.. நான் எதுவும் சொல்ல விரும்பலே..”
மனிதர்கள் அனுபவிக்கும் கஷ்டநஷ்டங்களுக்கு முற்பிறவிப்பயன், தலைவிதி போன்ற காரணம் சொல்லி நீ தப்பிக்க முடியாது. அப்படியெனில் உன்னைவிட ஊழ்வினையே உயர்ந்தது என்பதாகிறது. கர்மாவைக் கட்டுப்படுத்த முடியாத நீயென்ன கடவுள். பிறகெப்படி ‘எல்லாம் வல்ல’ என்ற உரிச்சொல் உனக்கு உரித்தாகும்? எவராயிருப்பினும் கர்மவினைகளை அனுபவித்தேயாக வேண்டுமெனில், எதற்காக உன்னைத் தொழ வேண்டும்; மெய்வருத்தி சடங்குகளைச் செய்ய வேண்டும்?
இவன் நாத்திகவாதியோ இறை மறுப்பாளனோ அல்ல; எந்தக் கழகத்தையும் சார்ந்தவனுமல்ல.
உன் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ள பக்த கோடிகளில் ஒருவன்தான். இவன் போகாத தலமில்லை; தொழாத தெய்வமுமில்லை. சம்பிரதாயங்களை கேள்வி கேட்காமல் பின்பற்றுபவன். நீயே இவனிடம் 'கடவுள் என்றெதுவுமில்லை எல்லாம் வெற்றுக் கற்பனை' என்றுரைத்தாலும், அதை ஏற்க விரும்பாதவன்.
இருப்பினும், பல்லாண்டுகளாக உலக நடப்புகளைப் பார்க்கும் போது உன் இருப்பைப் பற்றிய இலேசான சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இவனையொத்த பல ஆத்திகர்களை அவநம்பிக்கைவாதிகளாக மாற்றிய பெருமை உனக்குண்டு.
“உங்க பேரு என்ன.. ”
“இன்ஸ்பெக்டர் ஸாரே.. எண்டே பேரு கோபால நம்பீஸன்..”
“செத்து போனவர்கிட்ட எத்தனை வருஷமா சமையக்காரரா இருக்கீங்க..”
“ஒரு நாலஞ்சு வருஷம்.. ஆயாளுக்கு எல்லா ஸஹாயமும் நானாக்கும் செய்தது..”
“அவர் ஏன் தனியா இருந்தாரு.. குடும்பம் எங்க..”
“சரியா தெரியலைய்.. விவாஹமாயி ரெண்டு பெண் குட்டிகள்னு சொல்லியிருக்கு.. பார்யா ஏதோ ஹோம்ல இருக்காம்.. அதைப்பத்தி கேட்டாலே பேச்சை மாத்திடும்..”
“உங்களுக்கு எவ்ளோ சம்பளம் .. எதாவது குறை வெச்சிருக்காரா..”
“அதையேன் கேக்கறீங்க.. பேசின பணத்தை லேசுல குடுக்காது.. ரெண்டு மாசமா பாக்கி.. முக்கியமா..லீவே கொடுக்காது.. ‘ஊருக்கு போயி என்னடா பண்ண போறே’ன்னு சொல்லிட்டேயிருக்கும்.. என்னை வீட்டுக்காவலா வெச்சுட்டு, இவரு மட்டும் அடிக்கடி டூர் போயிட்டேருப்பாரு.. எனக்கு மேலுக்கு சுகமில்லேன்னா கூட டாக்டர்கிட்ட கூட்டி போகாது.. ஏதேதோ மாத்திரையை போட்டுக்க சொல்லும்..”
“அவருக்கு வருமானம் எப்படி.. எதாவது தொழில் பண்ணிட்டிருந்தாரா..”
“அந்த காலத்துல தஞ்சாவூர் தமிழ் யூனிவர்ஸிட்டியில ரீடரா இருந்துதாம்.. பின்னே வேலையை உதறிட்டு, வந்த பணத்தை சின்னளவுல கொடுக்கல் வாங்கல்னு ஆரம்பிச்சது.. அதுலயே ருசி கண்டு இப்போ பெரிய ஃபைனான்ஸ் பிஸினஸ் பண்ணிட்டிருந்தாரு.. நல்ல ஸம்பாத்தியம்.. ‘அநியாய வட்டி வாங்கறது பாவம்தான்’னு அடிக்கடி புலம்பிட்டேயிருக்கும்..”
“அவருக்கு தொழில் ரீதியா போட்டின்னு யாராவது இருந்தாங்களா..”
“கந்து வட்டிக்காரங்க நிறைய பேரோட விவாதம் நடக்கும்.. ஒரு மார்வாடி கூட போன்ல வாக்குவாதம் பண்ணுவாரு.. ஆயாளும் வந்து அப்பப்போ சண்டை போட்டிருக்கு..”
“அப்படியா.. அவர் பேரு என்ன.. கடைசியா எப்ப வந்தாரு..”
“ஞாபகமில்ல ஸாரே.. இருவது இருவத்தஞ்சு திவஸங்களுக்கு முன்னாடி அது இங்க ஆக்ரோஷமா சத்தம் போட்டுட்டிருந்தது..”
“ஓக்கே. உங்க முதலாளியோட சுபாவம்.. ஆளு பழகறதுக்கு எப்படி..”
“நாம பேசின வார்த்தைகளை வெச்சே நம்மளை மடக்கும்.. யானையாட்டம் ஞாபகமா பழிவாங்கற குணமும் உண்டு.. சமீபத்துல புதியதா ஒரு வழக்கம் தொடங்கியிருக்கு..”
“என்னது...”
"சீட்டுக்கட்டுலே ஒவ்வொரு கார்டையும் இன்னொண்ணோட கோபுரம் மாதிரி சேர்த்து வரிசையா வைக்கும்.. பின்னே அதை ஊதித்தள்ளி ஒவ்வொண்ணா விழறதை பார்த்துட்டேயிருக்கும்..”
“சிறுபிள்ளதனமாயிருக்கு... அதை விடுங்க.. சம்பவம் நடந்த அன்னிக்கி நீங்க இல்லையா..”
“போன வாரந்தான் அபூர்வமா அவரே என்னை ‘ஊருக்கு போய்க்கோடா’ன்னு அனுப்பி வெச்சது..”
“அப்படியா.. ஆச்சர்யமாயிருக்கே..”
“ரொம்ப மாசத்துக்கப்பறம் நாட்டுக்கு போயிருந்தேன்.. இங்க பால்காரன் என்னோட ஸ்நேஹம்.. அன்னிக்கி காலம்பர ரூமுக்குள்ளருந்து ஒரே நெடியும் புகையுமாயிட்டு வருதுன்னு ஃபோன் செஞ்சுது.. உடனே வர முடியலைய்.. ரெண்டு பஸ் மாறி வரதுக்கு தாமஸமாயி..”
“கீழே ஹவுஸ்ஓனர் தான் எங்களுக்கு தகவல் சொன்னாரு.. அது சரி.. இப்ப மட்டும் உங்களுக்கு எப்படி லீவு கிடைச்சுது..”
“அதான் சொன்னேனே.. அவரே தான் பணமும் கொடுத்து போகச் சொன்னது..”
“என் கண்ணை பார்த்து பேசுங்க.. உண்மையிலேயே நீங்க சென்னையை விட்டு போனீங்களா..”
“எந்தா.. இன்ஸ்பெக்டர் ஸாரே.. என்னையே சந்தேகபடறீங்களோ..”
சின்னஞ்சிறு குழந்தைகள் அனுதினமும் பல்வேறு விதங்களில் உயிர் இழக்கின்றனவே. ஆழ்துளை கிணற்றில் விழுந்து, நீச்சல் குளத்தில் மூழ்கி, பள்ளி வாகனம் ஏறி, புதைமணலில் சிக்கி..எத்தனை ரகமான சாவுகள்.. அந்தப் பிஞ்சு மழலைகள் என்ன பாவம் செய்தன.. அவர்களது அவலக்குரலைக் கண்டும் கேளாமல் இருக்கிறாயோ.. ஆன்மாவின் பிறப்புச் சுழற்சியில் மனிதப் பிறவிக்கென மிச்சமிருந்த சொற்ப காலத்திற்காக அவர்கள் பிறந்த சில மாதங்களிலேயே இறக்க வேண்டியதாகிறது என சிசு மரணங்களுக்கு சிலர் சாக்கு சொன்னாலும், மனம் ஒப்பவில்லை.
அது போகட்டும்.. நிறைய சாலை விபத்துக்கள் உன்னை தரிசிக்க வரும்போது அல்லது வணங்கிவிட்டு திரும்புகையில் ஏற்படுகின்றன.. உனது மலைக்கோவில் பாதைகளில்தான் அவ்வப்போது நிலச்சரிவுகளால் உயிர்கள் பலியாகின்றன.. வழிபாட்டுத் தலங்களில் ஏற்படும் நெரிசலில் சிக்கி மாண்டவர்கள் பலருண்டு.. இவையெல்லாம் பக்தர்களுக்கு நீயளிக்கும் அன்புப் பரிசா ஆண்டவரே.. என்னே உனது தனிப்பெருங்கருணை..!
“ஹலோ டாடி.. ஸ்டேஷன்லதான் நீங்க போலீஸ், இன்ஸ்பெக்டர்.. அதெல்லாம்.. இது நம்ம வீடு.. யூனிஃபார்மை கழட்டியாச்சுன்னா நீங்க என்னோட செல்ல அப்பா...”
“சரிடா.. இங்க உங்களோட ராஜ்ஜியம் தான்.. தெரியும்.. அம்மா எங்க..”
“மம்மிக்கு பயங்கர தலைவலியாம்.. மாத்திரை போட்டு தூங்கறாங்க.. உங்களுக்கு ஸ்விக்கில சாப்பாடு ஆர்டர் பண்ணட்டுமா..”
“வேணாம்டா.. நான் பார்த்துக்கறேன்..”
“ஏன் டென்ஷனா இருக்கீங்க டாடி.. நான் ஒரு மொக்க ஜோக் சொல்லறேன்..கேளுங்க..”
“எனக்கு அந்த மொகப்பேர் மேட்டர்தான் மனசுல ஓடிட்டேயிருக்கு..”
“இந்தாங்க.. சூடா காபி குடிங்க.. ரிலாக்ஸ்.. இந்த மாதிரி நிறைய கேஸ் பார்த்திருப்பீங்களே..”
“இது ரொம்ப சவாலா தான்டா இருக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வரல்ல.. அதுசரி.. நீ ஆபீஸ் போகலியா.. நைட் ஷிஃப்டா..”
“இல்ல டாடி.. பேப்பர் போட்டுட்டேன்.. போன வாரமே உங்ககிட்ட சொன்னேனே..”
“வேற வேலைக்கு ட்ரை பண்ணனுமா..”
“கவலைபடாதீங்க.. ‘ரெஸ்யூம்’ மெயில் பண்ணியாச்சு.. கிடைச்சடும்.. இப்ப ‘அவெஞ்சர்ஸ்’ படம் போறேன்.. வரீங்களா.. வேற லெவல்ல இருக்காம் மூவி..”
“இல்லடா.. நான் திரும்ப எஸ்பி ஆபீஸ்க்கு போகணும்..”
“அந்த கேஸ்ல யாரையோ விசாரணை பண்ணனும்னு சொல்லிட்டிருந்தீங்களே டாடி..”
“சமையல்காரரை விசாரிச்சாச்சு.. அவன் மாசக்கணக்கா லீவே எடுக்கலயாம்.. ஊருக்கு போக முடியலன்னு வெறியில இருந்திருக்கான்..”
“ஹலோ.. ஊபர் டிரைவரா.. என்ன.. அட்ரஸ் தெரியலயா.. கூகுள் பண்ணி பாருங்க.. இல்லே, நான் டெக்ஸ்ட் பண்றேன்..”
“என்னடா சொல்றே.. எப்ப பாரு காதுல அதை மாட்டிகிட்டு.. நீ யார்கிட்ட பேசறேன்னே புரியமாட்டேங்குது..”
“டாடி.. கூல்.. உங்க மேட்டருக்கு வரேன்.. லீவு போடலேன்னா அவ்ளோ காண்டு ஆயிடுவாங்களா..”
“சொல்ல முடியாது.. எங்க டிபார்ட்மெண்ட்லயே ‘வீக்லி ஆஃப்’ கிடைக்காததனால குடும்பத்தை கவனிக்க முடியாம, விரக்தியில ஆபீஸர்ஸை சுட்டுத்தள்ளின கேஸ் எல்லாம் இருக்கு.. மிலிட்டரியிலயும் அடிக்கடி நடக்கும்.. ஆனா சம்பவம் நடந்தன்னிக்கி அந்தாளு இங்க இல்லயாம்.. அதான் சந்தேகமாயிருக்கு.. உண்மையிலேயே கேரளா போனானாங்கறதை கண்டுபிடிக்கனும்.. அவன் பேசினதுலருந்து இன்னொரு ‘லீட்’ கிடைச்சுது..”
“என்னது..”
“செத்துப் போனவருக்கு தொழில் ரீதியா ஒரு இந்திக்காரன் எதிரின்னு தெரிஞ்சுது.. வட்டி பிஸினஸ்ல அடிக்கடி ரெண்டு பேரும் முட்டிப்பாங்களாம்.. அந்தாளை விசாரிக்கணும்..”
“ஓக்கே டாடி.. டாக்ஸி வந்தாச்சு.. நான் கெளம்பறேன்..”
‘நம்பினோர் கெடுவதில்லை’ என்ற முதுமொழியைப் பொய்ப்பித்தவன் நீ. உன்னிடம் அதீத பக்தி கொண்டவர்களும், உன்னை அறவே நிராகரித்தவர்களும் ஒரே மாதிரி சுக துக்கங்களைத்தான் அனுபவிக்கின்றனர். பிறகெப்படி உன்னைச் சார்ந்திருக்க வேண்டும், பின்பற்ற வேண்டுமென்ற சிந்தனை வலுப்பெறும்? வணங்கினாலும் வசைபாடினாலும் நடப்பது நடந்தே தீருமெனில் உன் இருப்பிற்கு என்ன பிரத்யேக மகிமை.. பழுத்த நாத்திகவாதியையும் பகவானே கதியென்றிருந்தவரையும் சமகாலத்தில் சக்கர நாற்காலியோடு முடக்கிப் போட்ட உன் திருவிளையாடலை என்னவென்று சொல்வது...
பூவுலகில் நடக்கும் அராஜகங்களைக் கண்டும் காணாமல் மெளனியாக இருந்து வரும் உன்னை பல காலம் தளராத நம்பிக்கையோடு பொறுத்துப் பார்த்தான் இவன். கலியுகத்தில் அநியாயங்கள் தலைதூக்கும் போது கல்கியாய் வருவாய் என்றன புராணங்கள். இதற்கு மேலுமா கலி முற்ற வேண்டும்? அக்கிரமக்காரர்களை அழிக்க நீ அடுத்த அவதாரம் எடுப்பதாயில்லை; இத்தனைக்கும் மூலாதாரமான உன்னை ஒழித்துக்கட்ட இவன் யத்தனமாகி விட்டான்.
“உங்க பேரு என்ன..”
“இன்ஸ்பெக்டர் ஸாப்.. நம்பள் பேர் பி.அமர்சந்த்.. பான் புரோக்கர் பிஸினஸ் பண்றான்..”
“என்ன ஸேட்டு.. அந்த காலத்து தமிழ் சினிமாவுல வர மாதிரி பேசறீங்க..”
“பப்பா சொல்றதை கேட்டு கேட்டு அப்டியே பளக்கம் ஆயிடிச்சி..”
“அப்படியா.. எங்க இருக்கீங்க..”
“செளகார்பேட் நாராயண் முத்லி தெரு.. முன்னாடி கடை.. பின்னாலே வீடு..”
“சரி.. எத்தனை வருஷமா இந்த தொழில் பண்றீங்க..”
“மூணு ஜென்ரேஷனா நம்பிள்க்கி அடகு வியாபாரம் தான்.. வட்டிக்கி ஃபைனான்ஸும் பண்றான்...”
“மொகப்பேர்ல ஒருத்தர் ரெண்டு நாளைக்கு முன்னாடி செத்து போயிட்டாரே.. ”
“தெர்யும் ஸாப்.. நம்ம ஜிக்ரி தோஸ்த்துதான்.. ஒரு வாட்டி அவரை தங்கசாலையில ஜெயின் மந்திர் இருக்கு பாருங்கோ.. அங்கே கூட்டிட்டு போனான்.. ”
“அதெல்லாம் ஓக்கே.. வியாபார ரீதியா அவருக்கும் உங்களுக்கும் போட்டி பொறாமை இருந்துதாமே...”
“அப்பப்போ லேவாதேவி விஷயத்துல லடாய் வரும்..”
“என்ன மாதிரி பிரச்னை உங்க ரெண்டு பேருக்கும்..”
“இன்ட்ரஸ்ட் ரேட் சமாசாரத்துலே.. அப்பறம்.. அடிக்கடி செக் குடுத்துட்டு இஸ்டாப் பேமென்ட் பண்ணிடுவார்..”
“வேறென்ன தகராறு உங்களுக்குள்ளே..”
“நம்ம ரெகுலர் பார்ட்டிஸை அவர் பக்கம் இழுக்க கோஷிஷ்.. ட்ரை பண்ணுவார்..”
“அதாவது உங்களோட கஸ்டமர்ஸை அவர் வளைச்சு போட்டார்னு சொல்றீங்க..”
“ஜி.. அதேதான் ஸாப்..”
“அதனாலதான் அவர் வீட்டுக்கு போய் பயங்கரமா சண்டை போட்டு வந்தீங்களா..”
“எப்போ.. நம்பள் போவே இல்லியே..”
“நல்லா நடிக்கிறீங்களே.. போன வாரம் ஆவேசமா கொலை மிரட்டல் விடற மாதிரி கத்தியிருக்கீங்க..”
“அது எப்பவோ ஃபப்ரவரி மாசம் நடந்துது ஸாப்.. அந்த சமயத்துலே நம்பள்க்கி குஸ்ஸா.. கோபம் அதிகமாச்சி.. ஒரக்க பேசினான்.. மத்தபடி கொலை அளவுக்கெல்லாம் போக மாட்டான்..”
“நீங்க செய்யலேன்னா என்ன.. ஆளை வெச்சு தீர்த்துக் கட்டியிருப்பீங்க..”
“அரே பக்வான்.. மஹாவீர் மேலே சத்யமா ஒண்ணும் பண்ணலே.. நம்பள் அஹிம்ஸா பாலிஸி ஃபாலோ பண்றாங்கோ..”
“அவரு உங்க தொழிலுக்கு இடஞ்சலா இருந்தாரா இல்லியா.. முதல் எதிரி அவர் தானே..”
“நிம்பள் அனாவசியமா இந்த அமர்சந்த்தை சந்தேகப்படறான் ஸாப்.. அந்தக் கொலைக்கும் நம்பள்க்கும் எந்த சம்பந்தம் இல்லே..”
“அதை நாங்கதான் முடிவு பண்ணனும்..”
எங்கேயும் நீ உயிருடன் அகப்படவில்லையே.. பலவற்றில் பாறாங்கல்லாய் காட்சி கொடுக்கிறாய்.. அல்லது மரச்சிலுவையில் அறையப்பட்ட பதுமையாய்.. இல்லையேல் அரூபமாய்.. ஓரிடத்தில் நெடிதுயர்ந்த நிர்வாணமாய் நிற்கிறாய்.. சிலவற்றில் வெண்கல விக்ரஹமாய் வடிக்கப்பட்டிருக்கிறாய்.. வேறிடங்களில் சமாதியாகவும் இருக்கிறாய்... இன்னபிறவற்றில் சுதையாய், ஸ்படிகமாய், பளிங்குச் சிலையாய் தோற்றமளிக்கிறாய்.. பலகாலம் நீருக்கடியில் அத்தியாய் ஒளிந்து கொள்கிறாய்... எல்லாவிடத்தும் அஃறிணையாய் கிடக்கும் உன்னைத் தண்டிப்பதில் என்ன பலன்.. ரத்தமும் சதையுமாய் உயிர்ப்புடன் நீ வேண்டும் இவனுக்கு.. மரண வேதனையை நீயும் கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டாமா..
ஒரு கட்டத்தில் உன்னை வெளியே தேடிக் கண்டுபிடிப்பது வீண் என்றுணர்ந்தான் இவன். ‘உளன் கண்டாய் நன்னெஞ்சே.. உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்’ என்ற பொய்கையாழ்வாரின் திருவந்தாதி பாசுரம்தான் அதற்கு முதல் வித்தாக அமைந்தது. மேன்மேலும் நிறைய நுால்களை வாசிக்கவும், அதனால் பரந்து யோசிக்கவும் செய்தான். பகவத்கீதையின் பக்தி யோகம் தவிர்த்து வேறு மார்க்கங்கள் மூலமும் பரம்பொருளான உன்னை அடைய சில மிஷன்களும் வழிகாட்டின. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆழ்நிலை தியானமும், அவ்வப்போது ஸத் சங்கங்களும் கைகொடுத்தன.
“இன்ஸ்பெக்டர் அண்ணாச்சி..”
“ஏலே.. இது போலீஸ் ஸ்டேஷன்.. நீ ரைட்டர்.. வெளங்கித்தா.. நம்ம உறவுமுறை எல்லாம் சொந்த ஊர்லதான்.. எத்தனை தரம் சொல்றது ஒனக்கு...”
“மன்னிச்சிடுங்க சார்.. அப்படியே பழக்கமாயிடிச்சி..”
“மொகப்பேர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டை கொண்டா.. திரும்ப பார்க்கணும்..”
“நேத்து முச்சூடும் அதுலதானே மூழ்கி கிடந்தீக.. இந்தாங்க..”
“டாக்டருங்க எழுதினது தெளிவா இல்லய்யா.. முக்காவாசி ஒடம்பு எரிஞ்சு போனதும் காரணம்.. ‘ஃபோர்த் டிகிரி’ தீக்காயமாம்..”
“கொலை பண்ணினவங்களே பாடியை பத்த வெச்சுட்டு போயிருப்பாகளோ..”
“சிலசமயம் அப்படியும் செய்வாங்க.. அடையாளம் தெரியாம இருக்கறதுக்காக..”
“சடலத்தோட முதுகுப்பக்கம் ரத்தக்கிளறியா இருந்துதே சார்.. ”
“சவுக்கால விளாசிருப்பான்னு நெனைச்சேன்.. அடாப்ஸி முடிவுல பெல்ட் அடியா இருக்கலாம்னு போட்டிருக்கு...”
“மறுக்கா அந்த சமையக்காரரையும் வடக்கத்திக்காரனையும் ‘பலமா’ விசாரிச்சு பார்ப்பமா..”
“அது வேஸ்ட்டுய்யா.. வீட்டு சொந்தக்காரருக்கும் மாடியில யார் வந்து போறாங்கன்னே தெரியாதாம்.. கேமராவும் இல்ல. ”
“அப்ப.. குத்தவாளி யாராதான் இருக்கும்..”
“இரு.. மாத்தி யோசிப்போம்.. சம்பவ எடத்துல என்னவெல்லாம் இருந்துதுன்னு லிஸ்ட் போட்டியே.. அதை சொல்லு... ”
“பூசை அறையில எக்கச்சக்கமான சாமி படங்க.. பீரோவுல ஸ்டாம்ப் பேப்பரு, ப்ரோநோட்டு.. கணக்கு வழக்கு எழுதின டைரி.. ரெண்டாயிரம் ரூபா நோட்டு கட்டுங்க.. படுக்கையறை முழுக்க பல்சக்கரம், ஸ்ப்ரிங், பெட்ரோல் கேன், மரக்கட்டை, பருத்தித்துணி, குத்துவிளக்கு, தீப்பெட்டி.. இந்த மாதிரி நுப்பது ஜாமான்ங்க சிதறி கிடந்தது..”
“இதெல்லாம் எதுக்குன்னு தெரியலையே..”
“அலமாரியில ஏராளமா புஸ்தகங்க வேற இருந்துது சார்..”
“என்ன மாதிரி புக்ஸ்யா..”
“சீறாப்புராணம், திருமந்திரம், பழைய ஏற்பாடு, ஸஹஜ் தீபம், தம்மபதம், குருநானக் போதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், சீவக சிந்தாமணின்னு கலந்து கட்டியா ஏகப்பட்டது.. இங்க்லீஷ்ல ஒண்ணு.. அதை நீங்களே வாசிங்க...”
“The Rube Goldberg Machine..”
“எதாவது வாஷிங்மெஷின் சம்பந்தப்பட்டதோ..”
“இல்லய்யா.. ஒரு படத்துல குள்ள கமல் வில்லனை கொல்றதுக்கு யூஸ் பண்ணுவாரே.. ஒவ்வொரு பொருளும் அடுத்ததை தொட்டு நகர்த்தி தள்ளிவிட்டு கடைசியில அந்தக் கெட்டவன் மேல அம்பு பாயும்.. அந்த மாதிரி டெக்னிக்கை விளக்கற புத்தகம்..”
“அப்பறம்... ஒரு நோட்புக் இன்னிக்கி காலையிலதான் சார் கிடைச்சுது..”
“அதைக் கொண்டா.. எதாவது எழுதியிருக்கா..”
“பக்கம் பக்கமா.. கையெழுத்து தெளிவாயில்ல.. முதல்ல ‘அன்பே சிவம்’னு ரெண்டு வார்த்தைதான் புரியுது..”
‘நான்’ என்ற அகந்தை முற்றிலும் அழிந்தாலொழிய பிரம்மத்தை அடைய முடியாது என்றுணர்ந்து, இப்போதெல்லாம் இவன் தன்மை ஒருமையில் தன்னை விளித்துக் கொள்வதைக் கூடத் தவிர்த்து வருகிறான். இறை ஆராய்ச்சியில் மூழ்கித் திளைத்து ’அஹம் ப்ரம்மாஸ்மி’ தத்துவத்தை ஆழமாகக் கற்றுணர்ந்து தனக்குள் இருக்கும் உன்னை அகக்கண்ணால் பார்க்கத் தொடங்கி விட்டான். இத்தனை வருடங்களாக எதிர்நோக்கியிருந்த உன்னை தனக்குள்ளேயே உயிரோடு கண்டுபிடித்து விட்டான். அதனாலேயே தண்டிக்கத் தயாராகி விட்டான். வித்தியாசமான ஒரு முடிவு உனக்காகக் காத்திருக்கிறது.
உலகில் ஏராளமானோர் துயரங்களை அனுபவித்து வருகையில் இவன் மட்டும் உன்னைக் குறிவைத்து தாக்க வேண்டிய அவசியமென்ன என்று கேட்கலாம். யாராவது ஒருவன் மணி கட்டி தானே ஆக வேண்டும். மதபேதமின்றி அனைத்து கடவுளர்களையும் ஆராதித்தவன் இவன். அபார நம்பிக்கையுடன் உன்னையே பற்றிக்கொண்டு, ஊர்ஊராய் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு நீ அளித்த கொடை நினைவிருக்கிறதா..
இவனது முதல் பெண்ணை பிஞ்சிலேயே தீக்கு இரையாக்கினாய்.. குடந்தை பள்ளிக் கூரையில் பற்றிய நெருப்பு வகுப்பறைக்குள் பரவியதால் ஐந்து வயதுக் குழந்தை வெளியே தப்பிக்க வழியின்றி அலறி ஓடி உடல் கருகி சாகும்படி செய்தாய்.. அதன் பாதிப்பால் இவன் மனைவி புத்தி பேதலித்து மனநலக் காப்பகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரந்தர நோயாளியாகக் கிடக்கிறாள். அத்தனைக்குப் பிறகும் உன் மீதான பக்தி நீர்த்துப் போகாமல், இனியாவது நல்லது நடக்குமென்று காத்திருந்தான்.
தற்போது இளைய மகளை தீயவர்க்கு இரையாக்கி விட்டாய். சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்கும் வெளியூர் விடுதியில் அவளைச் சேர்த்துப் படிக்க வைத்தான் இவன். மேல்நிலைத் தேர்விற்காக கணிப்பொறி பயிற்சிக்கு சென்றவிடத்தில் சகோதரனாய் நினைத்துப் பழகியவர்களே அவளைச் சூறையாடி விட்டனர். பெற்றவளை மணக்கோலத்தில் பார்க்கக் காத்திருந்தான் இவன். அம்மணக் கோலத்தில் பார்த்து விட்டனர் பாவிகள். இவன் வாரிசையும் மற்ற தோழிமார்களையும் நிர்வாணப் படமெடுத்து மிரட்டி தன் இச்சைகளுக்குப் பலிகடாவாக்கியுள்ளனர். இணங்க மறுத்த இளம் குருத்துக்களை வெறி பிடித்த ஓநாய்கள் பெல்ட்டால் அடித்துப் பணிய வைத்துள்ளனர். அந்தச் சுளீர் அடிக்குப் பயந்த பதின்ம வயதுப் பெண்கள் அம்மிருகங்களின் உடற்பசிக்கு தங்களை காவு கொடுத்துள்ளனர். வெளியில் சொல்ல முடியாமல் உடல் வேதனையையும் மனவுளைச்சலையும் மாதக்கணக்கில் அனுபவித்துள்ளனர் போலும். இப்போது தான் ஒவ்வொன்றாக ‘சந்தைக்கு’ வருகின்றன அவ்வூரின் அசிங்கங்கள். அந்த விவகாரத்தில் இவனது பெண்ணின் இயற்பெயர் மட்டும் எப்படியோ வெளியே கசிந்து சமூக ஊடகங்களில் விஷத்தை விட வேகமாகப் பரவி விட்டது.
ஒரு தகப்பனுக்கு இதைவிட உச்சக்கட்ட வேதனை இருக்க முடியுமா..
இத்தனைக்கும் காரணமான உன்னை இனியும் விட்டுவைக்கலாமா.. ‘அதே நாணயத்தில் திருப்பிச் செலுத்து’ என்று ஆங்கில முதுமொழியை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் இவன் உன்னிடமும் அதையே நடைமுறைப்படுத்த விரும்புகிறான். இளையவள் பலநாட்களாய் பெற்றுத் துடித்த பெல்ட் அடிகளை முதலில் காணிக்கையாக உன் முதுகிலும் கொடுக்கவிருக்கிறான்.
பின்னர் கண் மூடி, புலன் அடக்கி, நினைவு துறந்து, மனம் குவித்து அகக்கண்ணில் நீ தென்படும் அற்புதத் தருணத்தில், மூத்த குழந்தை அனுபவித்த கோரமான நெருப்புக்குளியலை இறுதிப் படையலாக உனக்களிக்கவிருக்கிறான். இவன் தியானத்தில் அமர்ந்த சில நிமிடங்களில் ஏற்கெனவே தயாராகவுள்ள ‘டோமினோ எஃபெக்ட்’ எனப்படும் சங்கிலித்தொடர் நிகழ்வுகளால் தீநாக்குகள் மேனியெங்கும் பரவும். தனக்குள்ளே ஒளிந்திருக்கும் உன்னை அக்னிப்பிழம்பாக்கி சுயசம்ஹாரம் செய்யத் திட்டமிட்டுள்ளான்...
Leave a comment
Upload