ஹாய் மதன்
ஹாய் மதன்

20190208200904607.png


ஹாய் மதன் கேள்விகளுக்கு

www.vikatakavi.in/haimadhan


கே.எஸ். ராமநாதன், சென்னை.

கேள்வி: எனக்கு வருகிற கனவுகள் வித்தியாசமாக இருக்கிறது. சம்பந்தமே இல்லாத பங்களாக்கள், அகண்ட ஆற்றில் குளிப்பது போல.. (எனக்கு நீச்சலே தெரியாது) என் கனவுகளைப்பற்றி சொல்லுங்கள்?

பதில்: உங்கள் மனதுக்குள் இன்னொரு மனம் உண்டு. ஆழ்மனம். ‘சப்கான்ஷியஸ்’ என்று அழைக்கிறார்கள். ஆழ்மனம் தூங்காது. தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருக்கும். குழந்தைப் பருவத்தில் நீங்கள்
பார்த்த பங்களா, ஆறு கூட ஆழ்மனதில் பதிந்திருக்கும். அதனையெல்லாம் கச்சாப்பொருட்களாகப் பயன்படுத்தி ‘எடிட்’ செய்து - அவைதான் கனவுகளாக வெளிப்படுகின்றன. சில கனவுகள் மறந்துவிடும். சில
தூக்கத்திலிருந்து எழுந்த பிறகும் நினைவிருக்கும். பாலைவனத்தில் நடந்து செல்கிறேன். அங்கே திடீரென்று திருச்சி மலைக்கோட்டை இருந்தது. இப்படி ஒரு கனவு எனக்கு வந்ததுண்டு!



பத்மா ராகவன், திருச்சி
கேள்வி: சீனாவில் ‘ஜீன்’ ஆய்வுகள் நடத்தப்படுவது பற்றி பல செய்திகள் வருகிறது.. ‘ஜீன்’ மூலம் மீண்டும் ராட்சதர்களை உருவாக்கிவிடுவார்களா?

பதில்: க்ளோனிங் அப்படித்தான் செய்கிறார்கள். இதுவரை அப்படி உருவாக்கப்பட்டது ஆடு ஒன்றுதான். ஜீனை வைத்து இன்னொருவரை தயார் செய்யலாம். ராட்சசனை உருவாக்க ஒரு ராட்சசனின் ஜீன் தேவைப்படும். கிடைப்பாரா?!


20190208204339540.jpg
கே.பி.வசந்தன், விருத்தாசலம்
கேள்வி: சிம்ம ராசி, மேஷ ராசி, கன்னி ராசி என்று நட்சத்திர கூட்டத்தை வர்ணிக்கிறார்கள்.. இது நம்பத் தகுந்ததுதானா?

பதில்: நம் முன்னோர்கள் கண்டுபிடித்தது அது. அதேசமயம் அந்தந்த நட்சத்திரக் கூட்டத்தை கோடுகளால் இணைத்தால் சிம்மம், ஆடு, கன்னி எல்லாம் வருகிறதே. அது எப்படி?!


20190208204506558.png
இரா.சம்பந்தன், குத்தாலம்.
கேள்வி: கருவில் ஆண், பெண் என்கிற தோற்றம் எப்போது நடக்கிறது?

பதில்: நாலைந்து வாரங்களில். ஆரம்பத்தில் ஆண், பெண் எதுவும் கிடையாது. பிறகு க்ளைடோரிஸ் என்று ஒன்று உருவாகிறது. அதுவளர்ந்தால் ஆண்குறி. இல்லையெனில் பெண். இது ஒரே ஒரு உதாரணம்தான். மற்றபடி விரைகள் தாடி, மார்பில் முடி போன்றவைகளும் ஆண் என்றால் வரும்.


20190208204610857.jpg
கே.பி. வித்யாவதி, ஆற்காடு
கேள்வி: மனிதன் நாகரிகமானது எந்த கட்டத்தில்? நெருப்பு கண்டுபிடித்தபோதுதானா?

பதில்: உண்மைதான். நெருப்பு ஒரு பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியது. மனிதன் அதை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்திருக்க வேண்டும். காட்டுத்தீயில் வெந்த உயிரினங்களை அவன் சாப்பிட்டபோது அவற்றின் சுவை கூடுதலாக இருந்ததை மனிதன் கண்டுபிடித்திருக்க வேண்டும். பிறகு சிக்கிமுக்கிக் கல்லை வைத்து தீயை உண்டுபண்ண முடியும் என்று கண்டுபிடித்த மனிதன் ஒரு ஜீனியஸ்!


2019020820502403.jpg
மதுமதி, செங்கல்பட்டு
கேள்வி: புத்த மதம் எத்தனை காலம் இந்தியாவில் நீடித்தது? அதன் மறைவுஎதனால் ஏற்பட்டது? சாதி பிரிவுகளை வற்புறுத்தும் இந்து மதம் தலைதூக்கியது எதனால்?

பதில்: சில நூற்றாண்டுகள்தான். அசோகர் போன்ற மன்னர்கள் அதற்குvஆதரவு தந்தார்கள். புத்தமதம் பரவியது. இதெல்லாம் கி.மு.வில்தான். கி.பி.vபிறந்தவுடன் மெள்ள மெள்ள இந்து மதம் தலைதூக்க முனைந்தது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் போன்றவர்கள் தோன்றி இந்து மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதத்தில் இருந்த நல்ல விஷயங்களையெல்லாம் இந்து மதத்தில் சேர்த்துக் கொண்டார்கள். இந்து மதம் மேலும் பிரபலமடைந்தது. மன்னர்கள் ஆதரவும் போய்விட்டது. அரசர்கள் சைவ, வைணவ மதங்களை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். புத்தமதத்தின் புகழ் குறைந்துபோனது.


20190208204743379.jpg
பி.ஜகன்னாதன், சென்னை
கேள்வி: ஹம்பியின் அழிவை பார்த்தேன். கலங்கினேன்! விஜயநகரப் பேரரசு கிருஷ்ணதேவராயர் இல்லாவிட்டால்...?

பதில்: ஹம்பி ஒரு அற்புதமான, சிதிலமடைந்த சின்னம்தான். விந்திய மலைக்குத் தெற்கே ஆட்சிபுரிந்த பாமினி சுல்தான்கள் இணைந்து பெரும் படையுடன் வந்து ஹம்பியை அழித்தார்கள். பல மாதங்கள் அங்கே தங்கி சிலைகளைத் தேர்ந்தெடுத்து உடைத்தார்கள். விக்கிரக ஆராதனையை அவர்கள் ஒப்புக்கொள்ளாததுதான் காரணம். இருப்பினும் சற்று கற்பனையுடன் பார்த்தால் ஹம்பி எவ்வளவு அழகாக, கம்பீரமாக இருந்திருக்க வேண்டும் என்பது புரியும். கிருஷ்ணதேவராயர் விஜயநகர மன்னர்களிலேயே பெரும் புகழ்பெற்றவர் என்பதில் சந்தேகமில்லை.



பாரதி சேகர், பெங்களூரு
கேள்வி : மனிதர்களுக்கு மட்டும் ஏன் வித விதமான நோய்கள்? மனிதனுக்கு மட்டும் வியாதிகளிலிருந்து விலக்கு அளிக்கபட்டால்...?

பதில்: பிறகு மரணத்துக்குக் காரணம் சொல்ல முடியாது!


20190208204827845.jpg
பி.எஸ்.கீதன், கோவை
கேள்வி : இறந்த பிறகு எங்கு செல்வோம் (ஆத்மா) என்ற யோசிக்கும் அளவுக்கு, ஆராய்ச்சிகள் செய்யும் அளவுக்கு எங்கிருந்து வந்து பிறந்தோம், எந்த உலகத்தில் என்னவாக இருந்தோம் என்றெல்லாம் சிந்திப்பது
இல்லையே. ஏன்?

பதில்: ஞானிகள் எல்லாம் அதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒருமுறைதான் பிறக்கிறோமா, அல்லது பலமுறை பிறந்திருக்கிறோமா போன்ற கேள்விகளுக்கு பதில் கிடையாது.
எல்லாமே மர்மம்தான். ஒருவேளை போன ஜன்மத்து நினைவு எல்லாம் கூடவே வந்தால் மனிதன் பைத்தியம் பிடித்து அலைவானோ?!



வை.ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை.
கேள்வி : மனிதன் மாதிரி விலங்குகள், பறவைகளுக்கு மன நலம் பாதிக்கப்படுமா?

பதில்: பாதிக்கப்படும். நாய்க்கு ரேபிஸ் நோய் வந்தால் அதன் மனநலம் பாதிக்கப்படுகிறதே?! தவிர, மருந்துகளும் நாம் விழுங்கும் மாத்திரைகள்தான். ஒருமுறை நான் யானைக்கு தரப்படும் ஆண்ட்டிபயாட்டிக் மாத்திரை ஒன்றைப் பார்த்தேன். நாம் சாப்பிடும் அதே மாத்திரைதான். சைஸ்தான் பொரி உருண்டை அளவுக்கு இருந்தது!



கே.ஆர். உதயகுமார், சென்னை-1.
கேள்வி : இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் கூட்டணியைப் பார்த்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?

பதில்: கூட்டணியில் யார் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்து!



பாலாஜி, கடலூர்
கேள்வி : ‘ஒட்டு கேட்டது’, ‘காதில் விழுந்தது’ இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும் என்ன?

பதில்: ஒட்டுக் கேட்க நாம் மெனக்கெட வேண்டும். காதில் விழுந்தது போகிற போக்கில் நிகழ்வது இரண்டிலுமே ரகசியங்கள் வெளிப்படுகின்றன.