ஷெர்லக்
மோடியின் இடது கை அதிர்ச்சி! - ஷெர்லக்

20190208193312585.png

“வருக, ஷெர்லக்! பேப்பரில் வராத உள்குத்து செய்திகளை கூறுக! விஜயகாந்த் கட்சிக்கு என்னதான் பிரச்னை!”

“பாஸ்! எப்படியாவது, அவர்கள் கேட்பதை கொடுத்தாவது கூட்டணியில் சேர்க்குமாறு பா.ஜ.க. மேலிடம் சொல்லிவிட்டது! சீக்கிரமே அ.தி.மு.க. கூட்டணியுடன் உடன்பாடு ஏற்பட்டு விடும்! விஜயகாந்த் கேட்பது என்ன தெரியுமா? ஐந்து எம்.பி. சீட் மட்டுமல்ல - மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தால் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி. அதுமட்டுமல்ல.. இடைத் தேர்தல் நடக்கும் 21 இடங்களில் ஐந்து எம்.எல்.ஏ.க்களுக்கு சீட்!”

“விஜயகாந்த் சரியான தலைவர்தான்!”

“சுதீஷ், பிரேமலதா, விஜயபிரபாஸ்கர் இவர்கள் மூவருக்குமே ஸீட் பெறும் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு! துரைமுருகனை சந்தித்த தே.மு.தி.க. பிரமுகர்கள் அதிருப்தியாளர்கள் என்று கூட பேச்சு! கூட்டணி அமைந்த பிறகு இவர் கட்சி உடையலாம்!”

“சரிதான்.. தி.மு.க.வினர் உற்சாகமாக இருப்பது போல தெரிகிறதே..?”

“நிஜம்தான்! பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் சென்னையில் நடந்த அதே சமயம், விருதுநகரில் தி.மு.க. தென்மண்டல மாநாடு நடந்தது. இது ஒரு செண்டிமெண்ட்டான மாநாடு என்கிறார்கள். 2004-ல் தேர்தலுக்கு முன்பு விருதுநகரில் தென்மண்டல மாநாடு நடந்தது. அந்த தேர்தலில் தி.மு.க. 40க்கு 40 வெற்றி! ஆகவே அதே போல இப்போது தென்மண்டல மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு போவதற்கு முன்பு கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். கலைஞர் சமாதி 40/40 என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது!”

20190208205501628.png

“ஓ! அ.தி.மு.க வட்டாரத்திலும் திருப்தியாகத்தானே இருப்பார்கள்?”

“ஒரேடியாக அப்படி சொல்ல முடியாது! பிரதமர் வரும்போது கூட்டணி தலைவர்கள் அத்தனை பேரும் விமான நிலையத்திற்கு போய் அவரை வரவேற்பதாக இருந்தது. விஜயகாந்த் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் அப்படி நடக்கவில்லை. கூட்ட மேடையில்தான் கூட்டணி தலைவர்கள் அறிமுகம் நடந்தது. விழா ஆரம்பத்திலேயே அ.தி.மு.க. தலைவர்களுக்கு ஒரு அதிர்ச்சி!”

“என்ன அது?”

“மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் போட்டு அஞ்சலி செய்யப்பட்டது அல்லவா? பிரதமர் மோடி இடது கையால் பூக்களை அள்ளி படத்திற்கு போட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்!”

“பிரதமர் இடதுகை பழக்கம் உள்ளவரா?”

“அது தெரியவில்லை! இப்படி இடது கையால் மலர் அஞ்சலி செய்தது அ.தி.மு.க. தலைவர்களுக்கு அ திர்ச்சிதான்! தவிர, கூட்டணியை எப்படி அழைப்பது என்கிற கருத்து வேறுபாடு நீடிக்கிறது. பா.ஜ.க.வினர் தேசிய ஜனநாயக கூட்டணி என்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அணி என்கிறார்கள் இவர்கள்! தவிர, உள்ளூர் பா.ஜ.க. தலைவர்களுக்கு மதிப்பு தரப்படவில்லை! பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. விஜயகாந்த், ஜி.கே.வாசன் படங்கள் நீக்கப்பட்டதால் தமிழிசை படமும், பியூஷ் கோயல் படமும் வைத்தார்கள்!”

20190208203203654.jpg

“இவை எல்லாம் சாதாரணமான விஷயங்கள்!”

“அது உங்களுக்கு! அ.தி.மு.க. கட்சியினரை பொறுத்தவரையில் எல்லா மாவட்டங்களிலும் அதிருப்தி. மோதல் நீறுபூத்த நெருப்பு போல இருக்கிறது! பாதி இடங்கள் கூட்டணிக்கு போய்விட்டது! மீதியில் பாதி கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு! இது கட்சியில் தேர்தலின்போது நெருக்கடி ஏற்படுத்தும்!”

“வாரிசுகளின் ஆதிக்கம் தி.மு.க.விலும் இருக்கிறதே?”

“உண்மை! ஆற்காடு வீராசாமி கூட தன் மகனுக்கு மத்திய சென்னை கேட்கிறார்! தயாநிதி மாறன் வடசென்னைக்கு மாறலாம்! சரி, பாஸ் மைத்ரேயன் ஞாபகம் இருக்கிறதா?”

“ஏன் இல்லை! எப்படி இருக்கிறார் அந்த ராஜ்யசபா அ.தி.மு.க. எம்.பி.?”

“அவர் ராஜ்யசபா பதவி காலம் முடிகிறது! அவர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்! அவர் மத்திய சென்னையில் நிற்க ஸீட் கேட்கிறார்! கிடைக்குமா? பா.ஜ.க.விற்கு வேண்டியவர்! அவர்கள் நிர்பந்தத்தால் கிடைக்கலாம்!”

-எழுந்தார் ஷெர்லக். அவர் சொன்ன கடைசி தகவல்.

* ஜெயலலிதா, கலைஞர் இல்லாமல் வெற்றிடம் இருப்பது உண்மை. தவிர, தேர்தல் பிரசாரங்களில் சினிமா நடிகர்கள் இந்த முறை இருக்க மாட்டார்கள் என்கிற நிலை! இதை சுட்டிக்காட்டி சில திரைப்பட பிரமுகர்கள், டி.ராஜேந்தர், விஷால், இன்னும் அரசியலில் அக்கறை உள்ள நடிகர்கள் அத்தனை பேரும் ஏன் ஒன்றுசேரக் கூடாது என்று நினைக்கிறார்கள். நடிகர்கள் அணி ஒன்று உருவாகலாம்! அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் அல்லது குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவு தரலாம்!