தொடர்கள்
ஆன்மீகம்
கோவில் கட்ட வேண்டும் ! தந்தையின் கனவை நனவாக்கிய மகன்கள் ! - ராம்

20250115064152777.jpeg

(நாச்சியப்பன் - மெல்லிசை மன்னருடன்..)

2005ம் ஆண்டு உருவான ஆசை அது.

கோயம்புத்தூர், எடையூர்பாளையம், பூம்புகார் நகர்.

ஹாங்காங்கில் நாச்சியப்பன் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு ஒரு கனவு இருந்தது. கோவை பூம்புகார் நகரில் ஒரு பெருமாள் கோவில் கட்டும் கனவு.

ஒரு மூலதனத்திற்காக வாங்கிய நிலம் தான் எனினும் ஒரு சமயத்தில் அதில் கோவில் கட்டினால் எப்படி இருக்கும் என்ற கனவு அவர் உயிர் நீக்கும் வரை நடைபெறவில்லை.

அவரது மகன்கள் தங்கள் பங்குகிற்கு அதை நிறைவேற்ற இருபது ஆண்டு காலம் பிடித்திருக்கிறது.

ஶ்ரீ கற்பக ஶ்ரீநிவாச பெருமாள் அறக்கட்டளையின் சார்பில் அது 10ந்தேதி பிப் 2025ல் நிறைவேறியிருக்கிறது.

இன்று நாச்சியப்பன் அவர்கள் இல்லை. ஆனால் அவரது குடும்பத்தினர் 2020ல் தங்களுடைய பங்காக அந்த இடத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலம் கொடுத்து, அஷ்டபந்தன மருந்து சேவையையும் ஏற்றுக் கொண்டு தந்தையின் கனவை நிறைவேற்றியிருக்கின்றனர்.

2020ல் கோவிட் வந்து கோவில் கட்ட தடை வந்தாலும், இந்த கோவில் டிரஸ்டியினர் மிகுந்த பிரயாசைப்பட்டு கோவில் கட்டியிருக்கின்றனர்.

20250115064454239.jpeg

எட்டாந்தேதி பிப்ரவரி ஹோமம் மற்றும் யாகசாலையுடன் துவங்கிய விழா 10ந்தேதி 9.15 மணி முதல் 10.15 வரை கும்பாபிஷேகத்துடன் இனிதே நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடந்தது திருக்கல்யாணம்.

ஶ்ரீ கற்பக ஶ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தன்று திரு.நாச்சியப்பனின் மகன்கள் திருப்பதி, செந்தில், ராஜா தங்கள் தந்தையாரைப் பற்றி பெருமையுடன் நினைவு கூர்கின்றனர்.

20250115064525242.jpeg

(திருப்பதி, ராஜா, செந்தில்)

அப்பாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் மிகுந்த பக்தி மான். தமிழ் ஆர்வலர். கவிஞர். நிறைய எழுதுவார். புதுக்கோட்டையருகே கற்பக விநாயகர் கோவிலைக் கட்டியிருக்கிறார். இன்றும் எங்கள் குடும்பம் அதை நிர்வகித்து வருகிறது. பல கோவில்களுக்கு அஷ்டபந்தன சேவை செய்து வந்திருக்கிறார். இந்த கோவிலிலும் அஷ்ட பந்தன மருந்து நாங்கள் தான் செய்து வருகிறோம்.

அஷ்டபந்தன மருந்தே ஒரு சுவாரஸ்யமான பலருக்கு தெரியாத விஷயம்.

ஆதார பீடத்தில் சுவாமி மூர்த்திகள் ஆடாமல் அசையாமல் இருக்கவும், பூச்சி மற்ற ஜீவராசிகள் நுழையாமல் இருக்கவும் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இது தயாரிக்கப்படுகிறது.

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

அப்பா இதுவரை 36,000 கவிதைகள் பல்வேறு விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடும் படியான ஒன்று பெருமாளைப் பற்றி பாடிய அந்தாதி. எங்களுக்கு தெரிந்து இதுவரை அப்பா மட்டுமே இப்படி அந்தாதி எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறோம். அதை மியூசிக்கல் சிடியாகவும் தயாரித்திருக்கிறார். அந்த ஒலித்தட்டை வெளியிட்டது எம்.எஸ்.வி அவர்கள்.

20250115064636262.jpeg

பல பெருமாள் கோவில்களுக்கு நிறையா கைங்கர்யம் செய்திருக்கிறார். இதனாலெல்லாம் தானோ என்னவோ 2005ல் அவருக்கு இந்த கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

பல கோவில்களில் அஷ்ட பந்தன மருந்து சேவை செய்வதும் அவருடைய பல ஆசைகளில் ஒன்று. மயிலாப்பூரில் ஒரு கோவிலும் செய்திருக்கிறார்.

எங்கள் குடும்பத்தின் சார்பில் பல கோவில்களுக்கு செய்திருக்கிறோம். அந்த நினைவுகள் எல்லாம் இந்த கும்பாபிஷேகத்தின் போது எங்களுக்கு நினைவில் வருகிறது. அப்பா இருந்திருந்தால் இந்த தருணத்தில் எப்படி மகிழ்ந்திருப்பார் என்று நினைக்கையில், அவரை மிஸ் செய்தாலும், அவர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று நினைக்கிறோம்.

ஶ்ரீ கற்பக ஶ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேத்தின் நிறைவு நாளில் அப்பாவின் கனவை நிறைவேற்றி விட்ட சந்தோஷம் கிடைத்திருப்பது பெருமாளின் பரிபூரண அனுக்கிரகம் தான்.

20250115131809242.jpeg

இதை மிக சிறப்பாக நடத்தி முடித்த அறக்கட்டளையை சார்ந்த அனைவருக்கும் மிகுந்த நன்றி.

2025011513183679.jpeg

கோவில் கட்டுவதால் என்ன நன்மை அல்லது கட்ட உதவிசெய்வதால் என்ன நன்மை என்பதை ஒரு குரல் வழிச் செய்தியாக இங்கே.......

இப்படி ஒரு கோவில் எங்கேயேனும் கட்ட ஒரு சிறு உதவி செய்ய தோன்றுகிறதா ???

ஜெர்மனியில் நூரம்பர்க் எனும் இடத்தில் ஒரு பெருங்கோவில் எழும்பிக் கொண்டிருக்கிறது.

விகடகவியில் விரைவில் அந்த செய்தி வெளிவரும்...காத்திருங்கள்.