உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் நிலம், நீர், நெருப்பு காற்று மற்றும் ஆகாயம் ஆகிய இந்த ஐந்து வகையான இயற்கை சக்திகள் அத்தியாவசியமானது. இவை 'பஞ்ச பூதங்கள்' அழைக்கப்படுகின்றன. பொதுவாக ஐந்து என்ற எண் சிவ பெருமானுடனும், மனிதர்களின் வாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்புடையது. தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாக விளங்குகின்றன. அவை…
நிலம்-காஞ்சிபுரம்-ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
நீர்-திருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
காற்று-திருக்காளத்தி-காளத்தீஸ்வரர் திருக்கோயில்
ஆகாயம்-சிதம்பரம்-நடராஜர் திருக்கோயில்
நெருப்பு-திருவண்ணாமலை-அண்ணாமலையார் திருக்கோயில்
நிலம்-காஞ்சிபுரம்-ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்:
பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். இங்குள்ள லிங்கம் பிருத்வி (மணல்) லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இங்குச் சிவபெருமான் ஏகாம்பரநாதர் என்றும் ஏகாம்பரேஸ்வரர் என்றும் வழிபடப்படுகிறார். இக்கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் உண்டு. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.
ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்குப் பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமாஸ்கந்த வடிவில் இருக்கிறார்.
அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கித் திரும்பியிருக்கிறாள். இதனைச் சிவனது "திருமணக்கோலம்' என்கிறார்கள். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் ஒரு; ஆம்ரம் மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளைக் கொண்ட கனிகளைத் தருகிறது.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்த போது இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 237 வது தேவாரத்தலம் ஆகும். திருக்குறிப்புத்தொண்டர், கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் போன்ற நாயன்மார்களின் அவதாரத் தலம் மற்றும் சாக்கிய நாயனாரின் முக்தித்தலமாகும்.
இத்தலத்துச் சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்குப் பெருமளவில் வருகின்றனர். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்துப் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
ஸ்தல விருட்சம் - மா மரம்
ஸ்தல தீர்த்தம் - சிவகங்கை (குளம்), கம்பாநதி
நீர்-திருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்:
திருவானைக்காவல் - பஞ்சபூத ஸ்தலங்களில் அப்பு ஸ்தலம், அதாவது நீர்த்தலம் ஆகும். காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில் ஸ்ரீரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது. மூலவரான ஜம்புகேஸ்வரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். காவிரியின் நீர்மட்டமும் லிங்கம் இருக்கும் இடத்தின் நீர்மட்டமும் ஒன்று என கூறப்படுகிறது. முற்றிய கோடையில், காவிரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
சிவபெருமானின் கட்டளைக்காக அம்பாள், பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்து, காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டார். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது.
பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவபெருமானை வேண்டி இங்குத் தவமிருந்த போது, அவருக்குக் காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதையானது வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேல் மரமாக வளர்ந்து,அவரது சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி "ஜம்புகேஸ்வரர்' எனப் பெயர் பெற்றார்.
இங்கு உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போலப் பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்லச் சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும்.
இக்கோயிலில் வழிபாடு செய்பவர்களுக்கு ஞானமும் புத்திசாலித்தனமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்தல விருட்சம் - வெண்நாவல்
ஸ்தல தீர்த்தம் - நவ தீர்த்தங்கள், காவிரி தீர்த்தம், இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
காற்று-திருக்காளத்தி-காளத்தீஸ்வரர் திருக்கோயில்:
பஞ்சபூத தலங்களில் காற்று தலமாகப் போற்றப்படுகிறது ஸ்ரீ காளஹஸ்தி. இக்கோயில் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் ஸ்ரீ காளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இங்குக் காளத்தி நாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
காற்றின் கடவுளான வாயு தேவன், சர்வவல்லமையுள்ளவரைப் போலவே பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு வரம் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபோது சிவபெருமான் வாயு லிங்கமாக வெளிப்பட்டதாகவும், பின்னர் சிவபெருமான் வெண்மையான லிங்கமாகக் காட்சியளித்தார், இது கற்பூர லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது வாயு (காற்று)தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியன போன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புற உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம்.
ஸ்ரீ காளஹஸ்தி தென்னகத்தின் கைலாசம் என்று அழைக்கப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.
இக்கோவிலில் ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
ஸ்தல விருட்சம் - மகிழம்
ஸ்தல தீர்த்தம் - பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு
ஆகாயம்-சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்:
பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குச் சிவபெருமான் லிங்கத்தைக் காட்டிலும் மானுட மூர்த்தியால் குறிப்பிடப்படும் ஒரே கோவில் இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்குப் பிரதானம். திருச்சிற்றம்பலம், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என அழைக்கப்படுகின்றது. முற்காலத்தில் இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிவபெருமான், இங்கு சிவகாமியம்மை சமேத நடராஜராக நடனமாடும் நிலையில் காட்சியளிக்கிறார். மூலவர் இருக்கும் இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது.
சிதம்பர ரகசியம்: சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம் வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படுகிறது. இதனுள்ளே உருவம் எதுவும் இல்லாமல் தங்கத்தால் ஆன வில்வ தளமாலை மட்டும் ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். இறைவன் இங்கு ஆரம்பமும், முடிவும் இல்லாத ஆகாய ரூபத்தில் இருக்கின்றார் அவரை நாம் உணரத்தான் முடியும் என்பதே இதன் ரகசியம்.
தேவார திருப்பதிகங்களைக் கண்டெடுத்த தலம் இது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானைத் தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்பாள் சன்னதியில் உள்ளது. உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் இங்கு நடைபெறும் சிறப்பு வாய்ந்த அர்த்தஜாம பூஜையில் கலந்து கொள்வதாக ஐதீகம். நடராஜப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், பாவங்கள் நீங்கி, நம் துன்பங்கள் அனைத்தும் தீரும்.
ஸ்தல விருட்சம் - தில்லை மரம்
ஸ்தல தீர்த்தம் - சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
நெருப்பு-திருவண்ணாமலை-அண்ணாமலையார் திருக்கோயில்:
பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. சிவபெருமான் இங்கு அக்னி ரூபமாகக் காட்சி அளிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்ததால் மலையைச் சிவனாக வணங்குகின்றனர். நெருப்பு ஸ்தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை எனச் சிறப்புப் பெற்ற தலம்.
அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை. *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலத்தில் வழிபட்டால் வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும்.
ஸ்தல விருட்சம் - மகிழமரம்
ஸ்தல தீர்த்தம் - பிரம்மதீர்த்தம், சிவகங்கை
பஞ்ச பூத ஸ்தலங்களைத் தரிசித்து சிவபெருமானின் பேரருளைப் பெற்று பேரின்பம் அடைவோம்!!
Leave a comment
Upload