நியாயத்தர்மம் - சிறுகதை - பா அய்யாசாமி
இரட்டைச்சடையில் மின்னலாய் கண்கள், செக்கச்சிவந்த உடல், வயது பதினாறுக்கே உரிய துடிப்பு, குழி விழந்த கன்னங்களில் எதிர்கால கனவுகள் ஏதும் இல்லா கபடமற்ற சிரிப்புடன் ரம்யாவின் போட்டோவை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டபடியே பார்த்துக் கொண்டிருந்தார் நேற்று பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விராலிமலை காவல்துறை உதவி ஆய்வாளர் மோகன்.
ஆசை மகள் சரண்யா எத்தனை துடிப்பான பெண்... சட்டம் படிக்கணும், ஏழைகளுக்கு உதவி் செய்யணும் எனும் கனவுகளோடு பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிந்த தன் ஆசை மகளை, திருச்சி சட்டக்கல்லூரியிலே ஒரு விபத்து என உயிரற்ற சடலமாய், பொட்டலமாய் கட்டிக் கொண்டு வந்து நடுவீட்டில் போட்டதை நினைத்துப் பார்த்தார்.
போலீஸ் வேலையில் இருந்ததினாலும்,சில நல்ல உள்ளங்களின் உதவியாலும் அது விபத்தில்லை என அறிந்துக்கொள்ள முடிந்தது. இல்லையென்றால் விபத்தாகவே வழக்கம்போல் ஜோடிக்கப்பட்டிருக்கும். காரணம் அறிந்துக்கொள்ள முயன்று அங்கே என்ன நடந்தது என்றும், குற்றவாளி யார் என்று அறிந்தும் தன்னால் ஒன்றும் செய்ய இயலாத தனது கையாலாகத்தனத்தை நினைத்து நினைத்து மருகிய நாட்கள் ஏராளம்.
ஏழையின் சொல் எங்கே அம்பலம் ஏறி இருக்கு ? அதற்கு நியாயம் தேடி முயன்று தோற்றுப்போய்,அதிகாரிகளின் அறிவுரையால் அதை கைவிட்ட போதுதான் வேறு வழக்கு ஒன்றில் இவருக்கு அறிமுகமானான் சின்னா என்கிற சின்னதுரை.
சின்னா, அவனின் தொழிலே மிரட்டிக் காசு பார்ப்பதும், கொலை செய்வதும்தான். சிறுவயதிலே தந்தையை இழந்து உடல், பார்வை குறைபாடும் புற்றுநோயும் உள்ள தாயோடு ஏழ்மையில் தைரியமாக வளர்ந்த சின்னா, தாயின் மீது அளவிடமுடியாத அளவிற்கு பாசம் வைத்துள்ளவன். தன் வாழ்க்கையில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிந்தவன்.
ஆகையால் என்ன செய்தாவது சிகிச்சை அளித்து பழைய நிலைக்கு தாயைக் கொண்டு வர வேண்டும், தன்னை அவள் கண்களால் மீண்டும் பார்க்க வேண்டும், உடல் நலமுற வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அவனுக்கு. நியாயமானதுதானே?!
பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்தி பட்டாக்கத்தியை கையில் எடுத்தவன் முதலில் கூலிப்படைக் கும்பலோடு சென்று கூட்டத்தை அச்சுறுத்தி நிலைகுலைய செய்து ஓட விட்டுக் கொண்டிருந்தவன், இரண்டே வருடத்தில் கத்தியை வீசும் தன் கை லாவகத்தால் கொடுத்த வேலையை கச்சிதமாக, சிரத்தையாக அவன் செய்து முடிப்பதால், கொலையாளி பட்டியலில் நகரத்தில் முதல் நிலைக்கு தேறியவன், 'சின்சியர் சின்னா' எனும் அடைமொழியோடு அழைக்கப்பட்டான்.
நகரத்தில் பெரிய துணிக்கடைக் கொண்ட அந்த முதலாளி காசிநாதனை இன்றுப் பார்த்து இரண்டு லட்ச ரூபாய் வாங்கிடணும் என்ற முடிவோடு வீட்டிலிருந்து கிளம்பினான்.
கடையில் கூட்டம் அதிகமாகயிருக்க, தகவல் சொல்லிவிட்டு காத்திருந்தான் சின்னா. காசிநாதனுக்கு சின்னாவைப் பார்த்ததும் லேசாக வியர்த்தது. ஊரே தேடுகிற குற்றவாளி தன் கடையில் வந்து நிற்கின்றான் என்றால் பயம் வருவதும் இயல்புதானே?! தயங்கியபடியே தனது அறையிலிருந்து இறங்கி சைகையால் பின் பக்கம் வரச் சொன்னவர்,என்ன ? என கேட்டார்.
நல்ல கூட்டம், நல்லா தொழில் நடக்குது நடக்கட்டும் என்றவன், எனக்கு இரண்டு லட்சம் தேவைப்படுகிறது வேண்டும் என்றான். நாம ஏன் தரணும் என யோசித்த காசிநாதனைப் பார்த்து, ஏன் தரணும்? அதானே அடுத்து கேட்பீங்க ? என்றான் சின்னா.
இல்லை என்றவர் ஐந்து லட்சமாக தருகிறேன், ஆனால் எனக்காக நீ ஒரு வேலை செய்யணும் என்றார்.
யாரை ? என்று கேட்டான் சின்னா.
தன் பையிலிருந்து எடுத்த ஒரு போட்டோவை அவனிடம் காண்பித்தார், பின்பக்கம் அட்ரெஸ் இருக்கு.
என்றவரை கூர்ந்து கவனித்தவன் கண்டிப்பாக இவனால் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தான்.
சரி என்றவனிடம், என் பெயர் மட்டும் எங்கும் வந்து விடக்கூடாது, கவனம்! என மிரட்டலாய் சொன்னவரை நோக்கி, நாளை டிவி யிலே செய்தியைப் பாருங்க! என சொல்லி சென்றான்.
அவன் சொன்ன மாதிரியே மறுநாள் திருச்சியில் பிரபல தொழிலதிபரின் மகன் சதீஷ் என்கிற வாலிபர் படுகொலை. அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யபட்டார் என்ற செய்தியைப் பார்த்த காசிநாதனின் மனத்திற்கு ஒரு நியாயமான ஆறுதலாக இருந்தது அது அநியாயமாக இருந்தாலும்.
என்னங்க, என் மகனை வெட்டி சாய்ச்சு இருக்கான். அவனை சும்மா விடக் கூடாது. உடனே ஏதாவது செய்யுங்கள் என்ற, தவறே செய்தாலும் தன் மகனை விட்டுக்கொடுக்காத தாயின் ஆசை நியாயமாக இருந்தாலும் அதன் பின் ஒரு அநியாயம் இருப்பதை யோசித்து அமைதிக்காத்தார் தந்தை.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல்நிலையத்திற்கு சரணடைய வந்திருந்தான் சின்னா. அந்த சமயம் உதவி ஆய்வாளர் மோகன் பணியில் இருந்தார். இப்படித்தான் அறிமுகமானார்கள் சின்னாவும்,ஆய்வாளர் மோகனும்.
மேலதிகாரிகளுக்கு தகவல் போய் சேர்ந்த உடனே, திருச்சியின் ஒரு பிரபலத்தின் மகனை கொன்றதால் பல இடங்களிலிருந்தும் அழுத்தம் அதிகமாக வந்துக்கொண்டிருந்தது. அவனை திருச்சி சிறையில் அடைக்குமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு இன்றிரவே அங்கே கொண்டு போய் அடைக்கவேண்டும் என்றும் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் ஒரு குழுவிற்கு ஆணை பிறப்பிக்கபட்டு, போகும் வழியில் நாகமங்கலம் அருகே வேறு ஒரு காவலர் குழுவிற்கு அவனை கை மாற்றிவிட வேண்டும் என்று மேலிடம் உத்திரவு பிறப்பித்து இருந்தது.
உதவி ஆய்வாளர் மோகன் தன் குழுவினரோடு நாகமங்கலம் நோக்கி சின்னாவை அழைத்துக்கொண்டு வாகனத்தில் கிளம்பினார். பாத்திமா நகர் வந்ததும், தேநீர் அருந்தவேண்டும் என சொன்னதும் வாகனம் நிறுத்தப்பட்டது. மோகன் இறங்கி இரண்டு சிகரெட்டுகள் வாங்கி பற்ற வைத்து சின்னாவிடம் நீட்டினார்.
சார் வேண்டாம் சார், என்றான் சின்னா. சின்னா, வாங்கிக்க. நீ எனக்கு அந்த விராலிமலை முருகன் மாதிரிதான் தெரிகிறாய் என்றார் மோகன்.
ஐயா,என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? இல்லை சின்னா, இது வரலாறு என அவனுக்கு ஒரு கதையை சொன்னார்.
விராலிமலையில் சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் ஒரு அடியவர் நிற்கும்போது அருகே மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டுமே என்று சுருட்டு ஒன்றை அவருக்கு கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டதைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் முருகனுக்கு சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் நம்பிக்கை. சுருட்டு நிவேதனம் அங்கு பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் ஒரு குறியீடாக இன்று வரை தொடர்கிறது.
நேற்று நீ செய்தது எனக்கு அன்பின் குறியீடாய் தெரிகிறது, என்னால் வாழ்நாளிலே மறக்க முடியாத ஒன்று என்றவர், சட்டம் படிக்கச் சென்ற தன் மகளின் வாழ்க்கையை கெடுத்ததும் அந்த சதீஷ்தான் என எனக்கு தெரிந்தும் என்னால் ஏதும் செய்ய முடியாதவனாக தவித்து இருந்தேன். நீ சம்பவம் செய்ததன் பின்னணி என்னவோ எனக்குத்தெரியாது. ஆனால் அது அநியாயமானதாக இருந்தாலும் எனக்கு நியாயமானதாக தெரிகிறது என்றவர், இன்று உன்னை நாகமங்கலத்தில் என்கவுண்டர் செய்யப் போவதாக திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஆகையால் நீ தப்பித்து ஓடிவிடு என்றவர் துப்பாக்கியால் கையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
குற்றவாளியை கவனமாக சிறையில் கொண்டு சேர்க்காத உதவி ஆய்வளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து இருந்தனர்.
அவர் செய்த செயல் காவல்பணிக்கு அநியாயமாக இருந்தாலும் அதிலும் ஒரு நியாயம் மறைந்தே இருக்கிறது என்று நினைத்தவர், அநியாயத்திற்கு தண்டனை வழங்கப்பட்டுவிடுகிறது. ஆனால் அதில் ஒரு நியாயம் இருப்பதை யாரும் பார்ப்பதேயில்லை என வருத்தப் பட்டார் மோகனின் துன்பத்தை அறிந்திருந்த மூத்த காவல் ஆய்வாளர்.
Leave a comment
Upload