தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 8. நிருபர் பணியும் ஒரு கல்விக் களமே - மூத்த பத்திரிகையாளர். ஆர்.நடராஜன்

20250114232451342.jpeg

ஒரு பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்ட போது அவன் ஒரு எழுத்தாளர், ஒரு நிருபர் என்று அறிமுகப்படுத்தப்பட்டான்.

சொற்பொழிவு முடித்ததும் கேள்வி நேரத்தில் ஒரு மாணவி கேட்டாள். ‘எழுத்தாளருக்கும் நிருபருக்கும் என்ன வித்தியாசம்?’ அவன் அப்போது சொன்னான், ‘தனக்கு தெரிந்த விஷயங்களைப் பற்றி நன்றாக எழுதுவார் எழுத்தாளர். தெரியாத விஷயங்களைப் பற்றியும் நன்றாக எழுதுவார் நிருபர்’. அது ஒரு கிண்டல் வாசகம்தான், உண்மையல்ல.

தான் எழுதப் போவது எது என்பதை பற்றிய தகவல் ஞானம் ஒரு நிருபருக்குத் தேவை. எழுத்தாளர் அப்படியல்ல. கற்பனையில் மிதந்து சரடு விடலாம். நிருபர் அப்படி செய்ய முடியாது. ஒரு நிருபருக்குப் பொறுப்பு அதிகம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொண்டால் தான் சரியாகச் செய்திக்கட்டுரை எழுத முடியும். வாசகர்களுக்கு எதையும் புரிய வைக்க வேண்டுமென்றால், அவன் அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப கட்டுரைகளுக்கு இது தேவைப்படக் கூடிய அறிவுத் தேடல்.

அதனால் நிருபர் பணியில் இருந்தபோது அவன் கேட்டுத் தெரிந்து கொண்டதும், படித்து தெரிந்து கொண்டதும் அதிகம். அதனால் ஒரு நிருபர் என்றும் மாணவனாக இருக்கிறார். அப்படித்தான் இருக்க வேண்டும். அவன் அப்படியே தான் இருந்தான்.

அவன் நெய்வேலியில் தென்னாற்காடு மாவட்ட நிருபராக பொறுப்பேற்றபோது, பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் எல்லா செயல்பாடுகள் பற்றியும் முடிந்த அளவுக்குத் தெரிந்து கொண்டான். அவன் விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ படித்தவன் அல்ல. ஆங்கில இலக்கியம் படித்தவன், ஆங்கில பேராசிரியராக இருந்தவன். நெய்வேலியில் அவன் விஞ்ஞானம், தொழில்நுட்பம், விவசாயம், அரசு நடைமுறைகள் ஆகிய துறைகளில் தொடக்க காலத்தில் ஒரு மாணவனாகவே இருந்தான். எதையும் தெரிந்து கொள்வதற்கு விஷய ஞானம் உள்ளவர்களை அணுகி தெரிந்து கொள்வதில் அவனுக்கு தயக்கம் இருந்ததில்லை. அப்படி அவன் தெரிந்து கொண்ட விஷயங்கள்: திறந்தவெளி சுரங்கத்தின் செயல்பாடு, மின்சார உற்பத்தியின் வழிமுறைகள், உர தொழிற்சாலையின் இயக்கம், பழுப்பு நிலக்கரியில் இருந்து வீட்டு உபயோகத்திற்கான ‘லீக்கோ’ என்கிற கரிக் கட்டிகளை தயாரித்த தொழில்நுட்பம், இதை அவன் ஒருமுறைக்கு இருமுறையாக தொழிற்சாலைக்கு சென்று தெரிந்து கொண்டான். சந்தேகம் வந்தபோதெல்லாம், சம்பந்தப்பட்ட இன்ஜினியர்களை தொடர்பு கொண்டான்.

மின்சார உற்பத்தி வெவ்வேறு மின்நிலையங்களில் இருந்து எப்படி மின்தடத்திற்கு (Grid) மாற்றப்படுகிறது. அதிலுள்ள நியதிகள் என்ன? நியதி மாறினால் என்ன நடக்கும்? என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். இந்த நடைமுறைகளில் வரும் ஒரு சிக்கலே ‘தெர்மல் ஷாக்’ என்பது. இந்த சிக்கல் ஏற்பட்டால் ஏதாவது ஒரு மின்நிலையத்தில் செயல்பாடு தடைபடும். உற்பத்திக் குறையும். இந்த சிக்கல் அவ்வப்போது வந்தது. அதனால் நெய்வேலி மின்நிலையம் இயக்க முறைகளில் சில தடைகளை சந்தித்தது. இதுபற்றி கட்டுரை எழுதுவதற்காக மின்சாரத்துறை இன்ஜினியர்களிடம் தகவல் கேட்டு கட்டுரையை எழுதியபோதிலும் அந்தக் கட்டுரையை தலைவர் சி.வெங்கட்ராமன் என்பவரிடம் கொடுத்து, சில திருத்தங்களை செய்து கொண்டான். அவை டெக்னிக்கல் வார்த்தைகள் சம்பந்தப்பட்டவை. தவறாக எழுதிவிட்டால் அது அவனுக்கும் அவனது பத்திரிகைக்கும் கௌரவக் குறைவு. எனவே தொழில்நுட்ப கட்டுரைகளையும் ஒரு விஞ்ஞானி போல் தொழில்நுட்ப கலைஞர் போல் எழுதக் கற்றுக்கொண்டான்.

சில சமயம் நெய்வேலியில் ‘Institution of Engineers’ என்ற தேசிய அமைப்பின் துறையில் மாதா மாதம் தொழில்நுட்பம் தொடர்பாக சொற்பொழிவுகள் நிகழும். பிற நிறுவனங்களில் இருந்து நிபுணர்கள் வருவார்கள். அவன் அந்தச் சொற்பொழிகளையும் கேட்டு அடிப்படை, விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொண்டான். தான் எழுதும் விஷயங்கள் பற்றி பூர்ண ஞானம் தனக்குத் தேவை என்பதை உணர்ந்திருந்தான். ஆக என்.எல்.சி. நிறுவனம் அவனுக்கு ஒரு உயர்கல்விக் கூடமாகவும் அமைந்திருந்தது.

அந்த மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அதிகம். சர்க்கரை ஆலைகளும் இருந்தன. அதனால் அவன் கரும்பு விவசாயம் பற்றிய தகவல்களையும், சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளையும் தெரிந்து கொண்டான். கரும்பு விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள அவன் விவசாயிகளையும் ஆலை நிர்வாகிகளையும் தொழிற் சங்கத்தினரையும் சந்தித்துப் பேசி வந்தான். அது அங்குள்ள ஊழியர்களை பற்றியும், கரும்பின் அரவைத் திறன் பற்றியும், ஒரு டன் கரும்பில் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு சர்க்கரை எடுக்கப்படுகிறது? என்பதையும் புள்ளி விபரங்களுடன் தெரிந்து கொண்டான்.

ஒரு மாவட்டத்தின் நிர்வாகம் எப்படி இருக்கும்? கலெக்டர், போலீஸ் அதிகாரி உறவு எப்படி? அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி எப்படிச் செயல்படுகிறார்? என்பதையும் நீதிமன்றங்களில் வழக்குகள் எப்படி நடைபெறுகின்றன என்பதையும், ஒரு நீதிபதி தன் தீர்ப்பில் என்னென்ன சொற்களை பயன்படுத்துகிறார் என்பதையும், அந்தந்த இடங்களில் தெரிந்து கொண்டான்.

அதே போல் மாவட்ட காவல்துறைத் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள்? மாநில தலைமையின் நேரடி நிர்வாகத்தில் வரும் உளவுத்துறையினரின் பணி, மத்திய அரசாங்கத்தின் உறவுதுறை எப்படி செயல்படுகிறது என்தையெல்லாம் அவன் நிருபர் பணியில் இருந்தபோது தெரிந்து கொண்டான். இதெல்லாம் அவன் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் படித்து தெரிந்து கொள்ளாதது. ஆனாலும் கல்லூரியில், பல்கலைக்கழக்ததில் படித்த காலத்தில் தன் ஆசிரியரிடமிருந்து அவன் பெற்ற பயிற்சி, நிருபர் பணியில் இருந்தபோது பெரிதும் உதவியது.

பழனியாண்டவர் இந்திய பண்பாட்டுக் கல்லூரியில் அவன் பி.ஏ. படித்தபோது, கல்லூரி முதல்வர் பேராசிரியர் சரவண ஆறுமுக முதலியார் மொழிபெயர்ப்பு வகுப்புக்கு வருவார். ஹிண்டு தலையங்கத்தை அப்படியே டிக்டேட் செய்வார். அதை மாணவர்கள் எழுதிக் கொண்ட பிறகு பேனாவை மூடி வைத்துவிட வேண்டும். அடுத்த அரை மணி நேரம், அல்லது முக்கால் மணி நேரம் அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். சில அரிய சொற்களுக்கு அர்த்தம் சொல்வார். ஆனால் எதையும் மாணவன் அப்போது நோட்டுப் புத்தகத்தில் எழுதக்கூடாது. கேட்பதை உள்வாங்கி, மனதில் பதித்துக் கொண்டு, அடுத்த ஒருமணி நேரம் மொழிபெயர்ப்யோ, இலக்கிய கட்டுரையோ, பொதுக்கட்டுரையோ எழுத வேண்டும். கேட்பதை குறிப்பெழுதிக் கொள்ளாமல் எழுதும் மனப்பயிற்சி அவனுக்கு நிருபர் பணியில் இருந்த போது பெரிதும் உதவியது.

நிருபர் பணியில் இருந்தபோது பல கருத்தரங்குகளில், நிருபர் கூட்டங்களில் சுருக்கெழுத்து குறிப்பேட்டைத் தொடாமல், பேனாவை திறக்காமல், மேடையில் பேசப்படுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். காதில் விழுவதெல்லாம் மனதில் பதியும். அவனைப் பார்ப்பவர்கள், ‘இப்படி சிரத்தையில்லாம் இருக்கிறானே?’ என்று நினைக்கக்கூடும். ஆனால் அவன், கேட்டதையெல்லாம் ஒன்று விடாமல் எழுதும் திறமையைப் பெற்றிருந்தான்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், ஒன்று கல்லூரி மாணவர் பருவத்தில் அவன் பெற்றிருந்த மனவளப் பயிற்சி. மற்றது பல துறையினரிடம் அவன் முயன்று கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல் அறிவு. ஒரு நிருபரின் வெற்றிக்கு உதவக் கூடியவை இந்த இரண்டும் தான்.