பள்ளிகளில் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து சென்ற வாரம் எழுதி முடிக்கும் முன்னர், பயணத்தில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டசெய்தி நம்மை வந்தடைகிறது.
அந்த வலி மிகுந்த சம்பவத்தால் சுரக்கும் கண்ணீரின் ஈரம் காயும் முன்னர், அடுத்தொரு அடி விழுந்து நம் உள்மன ரணத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
பள்ளிகள் பாதுகாப்பற்ற தலமாக இருக்கிறதென்ற உண்மை சுடுகையில், இங்கு பயணங்களும் பாதுகாப்பற்றவை என்ற நிதர்சனத்தை ரயிலில் நடந்த நிகழ்ச்சி கன்னத்தில் அறைந்து சொல்கிறது.
கோவை திருப்பதி இண்டர்சிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த வியாழனன்று திருப்பூரில் ஏறினார் அந்தப் பெண். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான அப்பெண் திருப்பூரில் கணவருடன் சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். கணவர் தையற் கலைஞர். நான்கு மாத கர்ப்பிணியான அவர் தன் அம்மா வீடான சித்தூருக்கு செல்ல திருப்பதி எக்ஸ்பிரசில், மகளிர் பெட்டியில் பயணிக்கிறார்.
ஜோலார் பேட்டை வரை அவருடன் பெண்கள் பயணிக்கிறார்கள். ஜோலார்பேட்டை ஸ்டேஷன் வந்து சேர்ந்ததும், உடன் பயணித்த ஆறு பெண்களும் அங்கு இறங்கி விடுகிறார்கள். இவர் தனியே பயணிக்கிறார். வண்டி புறப்பட்ட உடன் அந்த பெட்டியில் 31 வயது இளைஞன் ஏறினார். வேலூரை அடுத்த கே.வி .குப்பத்தைச் சேர்ந்த ஹேமந்ராஜ் என்ற அந்த இளைஞன் ,
தனியே இருக்கும் கர்ப்பிணி பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ள,அப்பெண் தன்னைக் காத்துக் கொள்ள அவனுடன் போராடுகிறார். அப்பெண்ணின் ஆடைகளை இழுத்து ,தலைமுடியை இழுத்து ஹேமந்த் ராஜ் பல்வந்தப்படுத்துகிறார். விடாமல் அப்பெண் போராடுகையில் , ஹேமந்த்ராஜ் அவளை ரயிலில் இருந்து தள்ளி விட்டார்.அடுத்த ஸ்டேஷன் வந்ததும் அவர் இறங்கி ஓடி விடுகிறார்.
நள்ளிரவில் தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்ட பெண் பலத்த காயங்களுடன் அடிபட்டு கிடந்தார் , அந்தப் பக்கம் சென்ற பெண்கள் பார்த்து, ரயில்வே போலீசுக்கு புகார் தந்து, ஆம்புலன்ஸை வரவழைத்து வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க உதவினார்கள். தலையில் அடி ,கை ,வலது காலில் முறிவு, முதுகு தண்டுவடத்தில் பலத்த அடி என்று மிகவும் மோசமான நிலையில் இருந்த அவர்க்கு சிகிச்சை தரப்பட்டது.
எல்லா வலிகளுக்கும் மேலாக அவளது நான்கு மாத கனவு நசிந்து போனது .அவள் ஆசையுடன் சுமந்த கரு கலைந்துப் போனது. சிசுவை அறுவை சிகிச்சை செய்து எடுத்த பின்மேலும் உடல்நிலை மோசமடைய , அரசு மருத்துவமனையில் இருந்து வேலூர் ராணிப்பேட்டையில் இயங்கும் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை மேலும் தொடர்கிறது.
கண்காணிப்பு கேமிராக்கள் உதவியுடன் குற்றவாளி ஹேமந்த் குமாரை அடையாளம் கண்டு , காவல்படை அவனை உடனடியாக கைது செய்தது. ஏற்கனவே குற்றப்பின்னணி உள்ளவன் என்பதும் உறுதியானது .ஒரு கொலை வழக்கில் கைதாகி பெயிலில் வந்தவன் என்பதும்,குண்டர் சட்டத்தில் 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவன் என்பதும் தெரிய வந்துள்ளது . பாலியல் வன்கொடுமை , கொலை முயற்சியுடன் ,கருவில் உள்ள குழந்தையை கொன்ற குற்றத்துக்காக (செக்சன் 18-2) ஹேமந்த்ராஜ் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே இரவில் நடந்து முடிந்த இந்த துயரச்சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய வலைத்தொடர்களில் ஒன்றானது . மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்ட இந்த துறையின் ,பாதுகாப்பை கேள்விக்குள்ளாகும் இது போன்ற சம்பவங்கள் நம்மை அதீத குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.
போன வருடம் கேரளாவின் பெண் என்ஜினீயர் ஒருவர் இதே போல ,ரயில் பயணத்தின் போது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது. தினமும் இலட்சக்கணக்கான பெண்கள் அலுவலக ரீதியாகவும், சொந்த காரணங்களுக்காகவும் தனியாக பயணப்பட வேண்டி உள்ளது. சக பயணிகளால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் நிலைமை இன்னும் மாறவில்லை என்பது கசப்பான உண்மை.
ரயில்வே துறையின் பாதுகாப்பு பிரிவு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். வழக்கமாக பெண்கள் பெட்டியில் ஆயுதம் ஏந்திய காவலர் இருக்க வேண்டும். அன்று அப்பெட்டியில் காவலர் யாரும் இல்லை. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நேரத்தில் 182 என்ற இலவச சேவையை பயன்படுத்தலாம். இந்த எண் சரியாக இயங்கி எல்லோருக்கும் சேவையைத் தர வேண்டும். ஆனால் இந்த இலவச எண்களில் சரியான பதில் கிடைப்பதில்லை.
குறிப்பிட்ட இலவச எண்களை படித்த பெண்களே அறியாமல் இருக்கும் போது, அதிகம் படிக்காத பெண்களுக்கு எப்படி விழிப்புணர்வு இருக்கும் ?
அவசரத்துக்கு காவல் துறையை அழைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் மட்டுமே பாதுகாப்பு சாத்தியம்.
அப்பெண்ணுக்கான சிகிச்சை தொடர்கிறது.முதல்வர் அவருக்கு ரூபாய் 3 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.அவரது மருத்தவச்செலவை தமிழக அரசு ஏற்கும் என்று அறிவித்துள்ளார். வெளிக் காயங்களுக்கு மருந்து போடும் பணியை நாம் சிறப்பாகவே செய்து விடுகிறோம்.
காலத்தால் மறையாத உள்(ள) காயங்களுக்கு யார் மருந்திடுவார் ?
( இந்தக் கட்டுரையை நிறைவு செய்யும் நேரத்தில் செய்தித்தாள் வந்தது . பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு பெண் காவலர்கள் புகார் கொடுக்க , சென்னை போக்குவரத்து இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை அது தாங்கி வந்துள்ளது,)
தினம் ஒரு கதை , முடிவில்லாத தொடர்கதை....!
Leave a comment
Upload