கூட்டணிக் கும்பமேளா
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை போடும் பேலன்ஸ்-ஷீட் அரசியல் கட்சிகளின் கூட்டணி... ஆக கூட்டணி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டபடியால், அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, மக்கள் மறதியை மட்டும் நம்பி தங்கள் கடையை விரிக்கிறார்கள்.
இப்படி உருவாகும் கூட்டணி தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடுகிறது. போன தேர்தலில் ஊழல்வாதியாக உருவகப் படுத்தப்பட்டவர்... அடுத்த தேர்தலில் தேசத் தியாகியாக திகழ்கிறார். மாறி மாறிக் கூட்டணி வைப்பதில் பாமக, மதிமுக, மிகப் பிரபலம். ஆனால் அனைத்துக் கட்சிகளுமே இதை ஒரு புனிதச் சடங்காகச் செய்வதற்கு சங்கோஜப்படுவதே இல்லை. அரசியல் கட்சிகளுக்கு கூச்சமில்லை.... அதை புரிந்துகொள்ளாத மக்களுக்கு மோட்சமில்லை.
அது சரி... அரசியல் கட்சிகளுக்கு அல்வாத் துண்டுகளாக இனிக்கும் இந்தக் கூட்டணிக் கும்பமேளா, மக்களிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப் படுவதே இல்லை. உதாரணமாக விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் அரசியல் சதுரங்க விளையாட்டும், அவ்வப்போது அடிக்கும் அந்தர் பல்டிகளும் பல திருப்புமுனைக் கதைகளுக்கும், செய்திக்கு அலையும் ஊடகங்களுக்கு செமை தீனி. யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் தேமுதிக பகிரங்கமாக நடத்திய பலமுனைப் பேச்சுவார்த்தை மோசமான முன்னுதாரணங்களை தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே ஏற்படுத்தியது என்றே தோன்றுகிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமெரிக்காவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை சந்தித்தார். “தான் விஜயகாந்தின் உடல் நலம் பற்றி மட்டுமே விசாரித்ததாகவும், கூட்டணி பற்றி பேசவில்லை” என்றும் கூறினார். உடனே அவரை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதி செய்ய ரஜினி சந்தித்தார் என்று ஊடகங்கள் தங்கள் ஊகங்களை வெளியிட்டன. ஆனால் அடுத்த நாள் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, ஸ்டாலின் வருகையின் போது அரசியல் பேசப்பட்டதாக கூறினார். தேமுதிகவின் இந்த அணுகுமுறை அதிமுகவுடன் தன்னுடைய கூட்டணி பேரத்தை அதிகரித்துக் கொள்ளுவதற்கான யுக்தி என்பது வெட்ட வெளிச்சம்.
அதன் பிறகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், வேறு சில அமைச்சர்களும் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். புதன்கிழமை மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் தேமுதிக விஜயகாந்த் கலந்து கொள்ளுவார் என்றே எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. கூட்டம் நடக்கும் இடத்தில் மோடி, பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. விஜயகாந்தின் கட் அவுட்டுகள் அங்கு வைக்கப்பட தயாராக இருந்தன. ஆனால் மதியம் அந்த சாரங்கள் அகற்றப்பட்டன.
கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பு வரை சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாஜக தலைவர் பியூஷ் கோயலுடன் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் அதே வேளையில் தேமுதிக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், திமுக சார்பில் துரைமுருகனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த துரைமுருகன், திமுக கூட்டணியில் சேர அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் தங்களது கூட்டணியில் ஏற்கனவே இட பங்கீடு முடிவடைந்து விட்டது என்று கூறி அவர்களைக் கைவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த செய்திகள் பரவிய உடனே மாநாட்டு மேடையில் இருந்த தேமுதிக கொடிகள் அகற்றப்பட்டன.
மோடியின் பொதுக் கூட்டம் முடிந்ததும், அதிமுக அமைச்சர்கள் முன்னிலையில் பியூஷ் கோயலுடன், சுதீஷ் மீண்டும் பேச்சு வார்த்தையை நடத்தினார். ஒரே சமயத்தில் எதிர் எதிர் துருவத்தில் லாப நட்டக் கணக்குகளை தீர்த்துக்கொள்ள பேச்சு வார்த்தை நடத்தும் வித்தையில், தன் முக்கியத்துவத்தை உறுதி செய்யும் சாமர்த்தியத்தில் தேமுதிக தேறிவிட்டது. ஆனால் தன் உண்மை பலத்தை உணராமல் சீட்டுக்கும் நோட்டுக்குமான பேரத்தில் தேமுதிக சறுக்கிவிட்டது, தன் பெருமைகளை சுருக்கிவிட்டது என்பது மக்கள் பார்வை.
1998 அதிமுக, 1999 திமுக, 2004 அதிமுக, 2014 பாமக, தேமுதிக, மீண்டும் 2019 அதிமுக என்று பயணிக்கும் பாஜக வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாமக கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளது. இந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீட்டுக் கணக்குகள் பேசப்படுகிறது. பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா, தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை, கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், தென் சென்னையில் இல.கணேசன், கோவையில் வானதி சீனிவாசன் அல்லது சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் வெற்றி வாய்ப்பு? சென்னைக் கூட்டத்தில் மோடியின் வீர உரையைக் கேட்க நினைத்தவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான் என்பதை மறைக்க முடியாது. மோடியின் ஆவேசமான இந்திப் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப் புல்லரிக்கும் நம் மக்களுக்கு அவர் அதிமுகவை நம்பி இருப்பது போல அதிமுக எம்ஜிஆரின் வாக்குகளை மனதில் வைத்துப் பேசியதாகத்தான் தெரிகிறது..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம்’ என்ற பெயர் சூட்டலும். தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து பயணிகள் விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் இருக்கும் என்பதும்... மேலும், தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் எட்டு மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டதைச் சொல்லி, உலகின் எந்தப் பகுதியில் தமிழர்களுக்கு பிரச்சனை என்றாலும், நானும், மத்திய அரசும் அவர்களைக் காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்ட, பேச்சின் எல்லா முனைப்பும் தமிழகத்தை தாஜா செய்து தாலாட்டுவதாகவே அமைந்திருந்தது.
தமிழகத்தின் மீது மோடிக்கு இருக்கும் நம்பிக்கையின்மையை வெளிப்படையாகவே உணர முடிந்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும், ஐந்து ஆண்டுகளில் மக்களிடம் அழுத்தமான பதிவை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதோ என்று எண்ணத் தோறுகிறது. வரும் மக்களவை தேர்தலில் மத்தியில் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளப் பெற வேண்டிய வெற்றியை விட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்.பி-க்கள் அதிகம் வராமல் தடுக்கப் படவேண்டியது அவசியம் என்பதை அவர் உணந்திருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் போல நியமனத் தலைவர்களை உருவாக்காமல், மக்கள் நேசிக்கும் அடுத்த கட்ட தலைவர்களை முன்னிறுத்துவது பாஜகவை வளர்க்கும்.
கூட்டணி முரண்பாடுகளில் திமுகவின் முரண்பாடுகளைச் சொல்ல ஒரு தனிப் பக்கம் பத்தாது. ஒரு சிரிப்பு சாரி சிறப்பு மலரே போடவெண்டும்...
தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த தொண்டன் சிதைக்கு முன் மயானத்தில் சூளுரைத்த மதிமுக மாவீரன், மங்குனியாக மாற, கொலைகாரன் என்று வர்ணிக்கப்பட்டவர் கொள்கை வீரராக மாற, புலியாகப் பொங்கி எழுந்தவர் எம்பி சீட்டுக்கு எலியாக மாற, நாட்டை விட்டே ஒழிக்கப்பட வேண்டியவர் என்று தூற்றப்பட்டவரின் தூய கரங்களில் நாட்டையே ஒப்படைக்காமல் சாகமாட்டேன் என்று கண்களில் நீர் மல்க சத்தியங்கள் சக்கரைப் பொங்கலாக, செமை காமடி போங்க...
அதுக்கெல்லாம் ஹைலைட்டாக திமுகவின் விசித்திரமான மதச்சார்பு கொள்கை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை.. கிருத்துவமும் இஸ்லாத்தும் மதம் இல்லையா? அவர்கள் கும்பிடுவது சாமி இல்லையா? அதைப் பரப்ப அவர்கள் முயற்சிக்கவில்லையா? அவர்கள் மதத்தில் மூடப் பழக்கங்கள் இல்லையா? அவர்களுக்குள் சாதி பேதங்கள் இல்லையா? காலப் போக்கில் வந்த கொள்கை மாறுபாட்டை ஏற்றுக் கொள்ளும் திராணி இல்லாமல், வெறும் இந்துக்களை மட்டும் புண்படுத்தும் புண்ணிய காரியத்தைச் செய்கிறது திமுக. இந்துக் கடவுள்களை மட்டும் இழிவுபடுத்துகிறது.
சமீபத்தில் ஒரு மாற்று மதத் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் இந்துத் திருமணத்தை இழிவுபடுத்திப் பேசினார். ஆனால் ஐயரை அமர வைத்து அவரின் இல்லத்தில் விசேஷம் நடக்க, ஸ்டாலின் அட்சதை தூவும் காட்சி வாட்ஸாப்பில் வைரலானது. மதத்தை வைத்து பாஜக அரசியல் நடத்துதோ இல்லையோ மதச்சார்பை வைத்து திமுக அரசியல் நடத்துவது இனி மக்களிடம் எடுபடாது என்பது பலரின் கருத்து..
ஆக மதத் தொடர்பு இல்லாத இஸ்லாமிய கிருத்துவ மத அமைப்புகள் திமுக கூட்டணியில் மதவாதத்தை எதிர்க்கிறார்கள்... நான் சொல்றது உங்களுக்கு புரியுதா? ஏன்னா எனக்கே புரியலை.
'கழகத்தை கட்டிக் காத்த கலைஞரிடம் காட்டிய பணிவும் விசுவாசமும் அர்ப்பணிப்பும் இன்னமும் அந்தத் தொண்டர்களிடத்திலும் கட்சி மேல் மட்டத் தலைவர்களிடத்திலும் கட்டுக் குலையாமல் இருப்பதாக ஸ்டாலின் நம்பினால் ஏமாற்றமே' என்று திமுக பிரமுகர் ஒருவரே நம்மிடம் பேசினார்.. திமுக தலைமையைச் சாடினார் என்று தேமுதிக சுதீஷ் ஊடகத்தின் மத்தியில் துரைமுருகன் பற்றி சொல்லியிருப்பதை புறம் தள்ள முடியாது. தன் மகனுக்கு 2014 இல் தொகுதி வழங்காத போது அமைதி காத்த துரைமுருகன் இப்போது மகனுக்கு சீட் கிடைக்காவிட்டால் அமைதி காப்பார் என்று சொல்ல முடியாது. இப்படித்தான் எல்லோரின் மன நிலையும் இருக்கிறது என்று சாம்பிள் பிட்டும் போட்டார்..
காங்கிரஸ் கட்சி இன்னும் மோசம்... ஒரே கட்சிக்குள்ளேயே கிளைக் கழகங்கள் அமைத்துச் செயல்படும் உன்னத முறையைக் கண்டு பிடித்தவர்கள். கூட்டணியில் உள்ள குழறுபடிகள் பற்றிப் பேசும் போது, கூட்டணியை விடுங்கள் ஓரணிக் குழப்பங்களே ஓராயிரம் தேறும். ஒவ்வொரு புதிய தலைக்கும் ஒரு புதிய அணி உருவாகிவிடும் அரசியல் ஜனநாயகம் அதிக பட்ச அறுவடையில் கிடைப்பது காங்கிரஸ் ஸ்டைல்.
காவிரி மேலாண்மை ஆணையம், மேகதாது அணை, புதிய அணை, நதிநீர் இணைக்க எதிர்ப்பு போன்றவைகள் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள்தானே. அதனையெல்லாம் வன்மையாக எதிர்க்கும் திமுக... அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு.
ஊழல் ஊழல் என்று ரபேல் விமானத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் மக்கள் மன்றத்தில் எடுபடாத வாதமாகவே அது போவது மோடியின் அதிர்ஷ்டம். அவரின் தன்னலமற்ற செயல்பாடுகள் மக்களைக் கட்சியை மீறிக் கவர்ந்துள்ளதை மறைக்க முடியாது. புதிய பாரதம் படைக்கும் அவரின் கனவுகள் மக்களின் மாறாத ஏக்கங்களாக மட்டுமே இருந்தது. இப்போதுதான் மாற்றங்கள் மலரத் தொடங்கியுள்ளது. மீண்டும் மோடி... வேண்டும் மோடி என்ற குரல் மக்கள் மன்றத்தில் பலமாக எதிரொலிக்கிறது.
‘ஊழல்’ பிரச்சினையை மையமாக வைத்தே பேசி வரும் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி, எப்படியும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இடம் கிடைக்காததால், கமல்ஹாசன் புதுவை உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும், கமலைப் போலவே தனியாக களம் காண்கிறார். அவருடன் அணி சேர்ந்துள்ள கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கிவிட்டு மீதி உள்ள 39 தொகுதிகளிலும் தினகரன் தனித்தே களம் காண்கிறார். அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அடிமட்ட தொண்டர்களும் தங்கள் ஆதரவில் இருப்பதாகவும், தாங்களே வெற்றிபெறுவோம் என்றும் பரணி பாடுகிறார்.
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை பொறுப்பாளர் சீமான் முழங்க, சமத்துவ மக்கள் கட்சியும் தனித்து போட்டியிடப்போவதாக நேற்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
வரும் ஒன்பதாம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு முழுக்க பத்திகிச்சு தேர்தல் நெருப்பு.. அதில் சூப்பரா வேகுமா கூட்டணிப் பருப்பு... அரசியல் கட்சிகள் கையில் கூட்டணித் துருப்பு... அனால், வெற்றி மட்டும் மக்கள் கை இருப்பு.
Leave a comment
Upload