இந்தியாவில் இந்து மதம் மிகத் தொன்மையானது. இந்து மதத்தில் வைணவ மதமும், சைவ மதமும் மிகவும் புகழ் பெற்றவை. வைணவ மதத்தை போற்றும் வகையில் 12 ஆழ்வார்களும், சைவ சமயத்தை போற்றும் வகையில் 63 நாயன்மார்களும் தம்முடைய பக்தி பாடல்களால் தமிழ் இலக்கியத்தை பெருமைபடுத்தி உள்ளார்கள்.
சைவ சமயத்தின் தலைமைக் கடவுளாக சிவபெருமானும் வைணவ மதத்தின் கருப்பொருளாக திருமாலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் தொழப்பட்டு வருகிறார்கள்.சைவ திருக்கோவில்களில் கடவுளுக்கு சேவை செய்பவர்களை குருக்கள் என்றும் வைணவ திருக்கோவில்களில் கடவுளுக்கு சேவை செய்பவர்களை அர்ச்சகர்கள் என்றும் அழைக்கிறோம். அவர்கள் பல கடினமான சமய நெறி ஒழுக்கங்களை பின்பற்றி திருக்கோவில்களில் தம்முடைய பணிகளை செய்து வருகின்றார்கள்.
அவர்கள் இல்லையென்றால் ஆலயங்களில் தினசரி பூஜைகள், ஹோமங்கள், வைபவங்கள் போன்றவை நடைபெற சாத்தியமில்லை. ஆனாலும், அவர்களின் அன்றாட வாழ்க்கை மிகுந்த சிரமங்களை கொண்டு அவல நிலையில் உள்ளது ஆன்மீக உணர்வு கொண்டவர்களுக்கு இது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவர்களுக்கு அவர்களின் தொழிலில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லை. தங்களின் வேலைக்காக எந்த நேரத்திலும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். விடியற்காலையில் தொடங்கும் அவர்களின் பணி இரவு நேரத்திலும் வெகு நேரம் வரை தொடருகின்றது.கோவில் திருவிழா நாட்களில் அவர்களுக்கு உண்ணக் கூட நேரம் கிடைப்பதில்லை.
பெரும்பாலான திருக்கோவில் பணியாளர்கள் சம்பளம் எதுவும் இல்லாமல் பணிபுரிகின்றனர். சிலருக்கு மட்டும் மாத சம்பளமாக மிக குறைந்த தொகை வழங்கப்படுகிறது.அதைக் கொண்டு தற்போதைய விலைவாசியில் குடும்பம் நடத்துவது மிகவும் கடினமே.அவர்களுக்கு ஆலய நிர்வாகத்திலிருந்து எந்தவிதமான ஆதரவும் கிடைப்பதில்லை. அவர்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் எந்த ஒரு ஏற்பாடும் இல்லாதது வேதனைக்குரியது.
ஆலய நிர்வாகம், அரசியல் பிரமுகர்கள் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் அன்றாடம் அவர்களுக்கு மிரட்டல்கள் அதிகமாக வருகின்றன. பாதுகாப்பு எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் ஒடுக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.
இறைப்பணி என்ற பெயரில் எந்த விதமான விடுமுறையும் கிடைக்காத நிலை உள்ளது. எந்தவொரு காரணத்திற்காகவும் அவர்களுக்கு ஓய்வோ,விடுப்போ கிடைப்பதில்லை. அரசாங்க அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு பெறும் போது கிடைக்கும் காப்பீடு, கிராஜுவிடி போன்றவை இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு என்று எந்தவித சமூக நல திட்டமும் நடைமுறையில் கிடையாது. குறிப்பிட்ட வேலை நேரம் என்று இல்லாமல் அவர்கள் முழுமையாக தங்கள் வாழ்க்கையை ஆலய பணிக்கு அர்ப்பணிக்கிறார்கள் என்பதே உண்மை.
அரசு அலுவலக பணியாளர்களைப் போல், அவர்களுக்கு ஒரு நேர்மையான பணிஅமர்ப்பு முறை இல்லை.அதனால், வேலை வாய்ப்புகளிலும் சிக்கல்கள் உள்ளன. இவர்களின் பணியில் எந்த விதமான சமூக பாதுகாப்பும் இல்லை. எனவே,அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
நிலையான வருமானமில்லாத காரணத்தினால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளுவதிலும், குடும்பம் நடத்துவதிலும் பல சவால்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும், தம் பணியை தொடர்ந்து செய்து வரும் இவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு அறநிலைத்துறை மூலம் எந்தவித மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை. கிடைக்கும் வருமானம் மிகக் குறைவாக இருப்பதால், அவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்பில் உள்ளது.
அனைத்து ஆலயங்களும் பெரும் வருவாயைப் பெறுகின்றன. ஆனால் அந்த வருவாயிலிருந்து இவர்களுக்கு மிகக் குறைவாகவே மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது. ஆலயங்களில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் என எதுவும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் இதே நிலை தொடரும் அபாயம் உள்ளது.
அவர்களின் தற்போதைய அவல நிலை மாற:
- அவர்களின் வாழ்வாதாரத்திற்கான தேவையான குறைந்த பட்ச மாத சம்பளத்தை அவர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
- அரசு அல்லது ஆலய நிர்வாகம் அவர்களின் குடும்பத்தின் மருத்துவ செலவுகளை ஏற்க வேண்டும்.
- சமூக பாதுகாப்பு வழங்க முறையான அரசானைகளை பிறப்பிக்க வேண்டும்.
- அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிடி போன்ற நலன்கள் கிடைக்கும் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
- கோவில் பணியாளர் நியமன முறையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
- அவர்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியில் உறுதிசெய்ய, அரசாங்கம், ஆலய நிர்வாகம், மற்றும் பொதுமக்கள்முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
- அவர்களின் சமூக நிலையை உயர்த்தும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவைகள் செயலாக்கம் பெறும் நாளில் நாட்டில் ஆன்மீகமும் அறமும் சிறக்க அவர்களின் பங்கு இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Leave a comment
Upload