அர்ச்சர்கள், பட்டர்கள், தீட்சிதர்கள், சிவாச்சாரியார்கள், குருக்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் வாழ்வாதாரம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இருக்காது. ஏதோ சிலர் வசதியாக இருப்பது போல் தெரியும் அவ்வளவுதான். பெரும்பாலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாக இதில் பக்தியுடன் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். நன்கு படித்து இருந்தாலும் கோவில் பணியை இவர்களுக்கு விட மனது வராது. வேறு உத்தியோகத்தில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது கோயில் பணியை விரும்பி செய்வார்கள் இவர்கள்.
50-களில் அல்லது அறுபதுகளில் கோயிலில் அர்ச்சர்களாக இருந்தவருக்கு சம்பளமாக ஆறு மரக்கால் நெல் தந்து கொண்டு இருந்தார்கள். காலப்போக்கில் தான் சம்பளம் காசாக மாறியது. அப்படியெல்லாம் வாரி எல்லாம் தந்ததில்லை. 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை இவர்கள் சம்பளமாக இருக்கும். பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கை தான் இவர்கள் ஜீவாதாரமாக இருந்து வருகிறது. திராவிட மாடல் அரசுக்கு இந்தத் தட்டு காணிக்கை கண்ணை உறுத்தியதோ என்னவோ அதையும் உண்டியல் போட வேண்டும் என்று முதலில் வற்புறுத்தப்பட்டது. அதன் பிறகு அது சர்ச்சையானதும் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கிறார்கள். அது எந்த அளவு உண்மை என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம். கோயில் உண்டியல் வருமானம் என்பது கோயிலில் அர்ச்சர்களின் அணுகு முறையை பொறுத்து இருக்கும். உண்டியலில் நிரம்பும் பணம் அறநிலைத்துறை அதிகாரிகள் வசதிக்கு, ஏசி மற்றும் சொகுசு காராக மாறும். அதுவும் இல்லாது இந்து மத நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தினரும் அரசு ஊழியம் என்பதால் கோவிலில் உட்கார்ந்திருக்கும் அநியாயமும் நடக்கிறது. ஆனால் அர்ச்சகர்கள் அவல நிலை அப்படியே இன்று வரை தொடர்கிறது. கருவறையில் கால் கடுக்க நிற்பதும், அதுவும் அந்த ஈரத் தரையில் அவர்கள் நின்று கொண்டு பக்தர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும்.
பார்த்தசாரதி கோயிலில் பரம்பரையாக அர்ச்சகர்கள் வழி வழியாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தட்டு கலெக்ஷனை தொட அறநிலைதுறை அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை. எனவே அவர்கள் வாழ்வாதாரம் பரவாயில்லை. ஆனால் எல்லா கோயில்களிலும் இதை எதிர்பார்க்க முடியாது. பணம் ஒரு பக்கம் இல்லை என்று சொன்னாலும் அர்ச்சகர்களுக்கு உரிய கௌரவத்தை அதிகாரிகள் தருவதில்லை. எல்லாம் வல்ல பகவான் பார்த்துக் கொள்வார் என்ற நிலையில் அர்ச்சர்கள் பல்லை கடித்துக்கொண்டு பொறுமையாக தங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். கோயிலில் அறநிலைத்துறை கடைநிலை ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட அர்ச்சகர்களுக்கு சம்பளம் குறைவு தான்.
18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் இந்த காலங்களில் ஊர்மக்கள் பெருந்தனக்காரர்கள், ஏகாலி (வண்ணார்), நாவிதர், குருக்கள், பண்டாரம், திண்ணை பள்ளிக்கூடம் நடத்தும் வாத்தியார், புரோகிதர் ஆகியோருக்கு பணமாக தராமல் அரிசி காய்கறிகள் தங்குமிடம் மற்றும் ஆண்டுதோறும் வேட்டி துண்டு இப்படி தந்து அவர்களை ஆதரித்து பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாகரிகம் இந்த பழக்கத்தை முற்றிலும் காணாமல் செய்துவிட்டது. அந்த காலத்தில் அவர்கள் வாழ்வாதாரம் வசதியாக இருந்தது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது இருப்பது போதும் என்ற திருப்தியும் சந்தோஷமும் அவர்களுக்கு அப்போது இருந்தது.
பெரிய பெரிய திருக்கோயில்களில் பணிபுரிபவர்கள் காட்டிலும் கிராமப்புறங்களில் சிறிய சிறிய திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், குருக்களின் நிலைமை பரிதாபம் தான். குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு கோயில்களில் பணி செய்து அவர்கள் வாழ்க்கையை கடக்க வேண்டி இருக்கும். அதேபோல் புராதான கோயில்களுக்கு என்று நிறைய நிலம் இருக்கும் அவை குத்தகைக்கு விடப்பட்டிருக்கும். கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருக்கும். ஆனால் குத்தகைப் பணம் வராது, வாடகை பணமும் வராது, காரணம் இவர்களின் அரசியல் பின்புலம் அப்படி. இதன் விளைவு அந்தக் கோயில்களின் அச்சகர்களின் வருமானம் சொற்ப வருமானமாக போயிருக்கும். கோயில் நிர்வாகம் கோயில் பராமரிப்புக்கு இந்த குத்தகை பணம் கடை வாடகை பணத்தை தான் நம்பி இருக்கும். ஆனால் அவையெல்லாம் கைக்கு வந்தால் தானே. இந்த அநியாயத்தை கோயில் உள்ள பகவானும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ன செய்ய ?
எல்லா தரப்பு மக்களுக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகள் அரசியல் கட்சிகள் அர்ச்சகர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. இதைவிட தமாஷ் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கொஞ்சம் பேருக்கு பயிற்சி தந்து அவர்களை அர்ச்சகராக அரசாங்கம் அங்கீகரித்தது. அப்படி நியமிக்க பட்ட "அர்ச்சகர்களுக்கு" அரசு நிறைய சம்பளம் கொடுத்த தமாஷும் நடந்தது. அவர்களும் ஏதோ பெரிய கனவோடு அர்ச்சகராக போக அங்கு நடப்பது, நிறைய வருமானம், அவர் பழக்க வழக்கங்கள் இவற்றிற்கெல்லாம் இது செட் ஆகாது என்று ஓடியே போய்விட்டார்கள். அரசாங்கத்தின் வறட்டு கொள்கைக்கு இதை விட ஒரு உதாரணம் தேவை இல்லை.
Leave a comment
Upload