[சித்திரம் - தேவா]
மன்னித்தல் என்பது சரியான செயலா? மன்னித்தல் எளிதா? அதனால் பயனேதும் உண்டா? இந்தக் கேள்விகள் நம் மனதில் அவ்வப்போது எழத்தான் செய்கிறது.
உண்மையில், பிறரை மன்னித்தல் என்னும் செயல் அவர்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல...... மாறாக, அது நமக்கே நன்மை தரும் அருமருந்து என்பதை முதலில் உணர்வோம்.
நமக்கு இழைக்கப்பட்ட துன்பம் நம் மனதை உறுத்திக் கொண்டேயிருக்கும். அதன் வருத்தமும் கோபமும் ரணமாகவே மாறித் துயரம் தருவது. அந்த ரணங்களை ஆற்றி மீண்டும் நலம்பெற, நமக்குத் தீங்கிழைத்தவர்களை மனதார மன்னித்து விடுதலே சரி!
நம்மைக் காயப்படுத்தியவர்கள், தன் தவறுகளை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கோருவது பெரும்பாலும் நடப்பதில்லை. அவர்கள் நம்மை காயப்படுத்தி விட்டதாக உணர்ந்திருக்கக் கூட மாட்டார்கள். அவர்களின் மனோபாவமும் இயல்பும் சுடுசொல்லை மட்டுமே கொட்டுவதாகவோ துரோக சிந்தனையை மட்டுமே வெளிப்படுத்துவதாகவோ இருக்கலாம்.
ஆனால் நமக்கோ, அவர்களால் உண்டான உளைச்சலும் அவமானங்களும் உள்மனதில் நிரந்தர வலியாக இருந்து கொண்டிருக்கும்.
நமக்கு நடந்துவிட்டதில் நமக்கான படிப்பினையை மட்டும் ஏற்றுக்கொண்டு, மன்னித்து விடுதலே நம்மை மீட்டுக் கொள்வதற்கான வழி!
கைகளில் அள்ளிய நீர் விரலிடுக்குகளின் வழியே கசிந்து விலகுவது போல, மன்னித்தலால் மனதின் பாரமும் கசிந்து இல்லாமலாகிறது. வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையையே கூட இது மாற்றிவிட வல்லது.
மன்னித்தல் என்பது மனப்பூர்வமாக எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவாகும். நமக்குத் தவறிழைத்த எதிராளி நாம் மன்னிக்க தகுதியானவராக இல்லாமல் கூட இருக்கலாம். எனினும், மன்னிப்பதால் நம் மனதின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வருத்தமும் குரோதமும் நீங்கிவிடும். அதன் கசடுகளும் பாரமும் மறைந்து நிர்மலமாக ஆகிவிடும்.
மன்னித்தல் எளிதான காரியம் அல்லதான். ஆனாலும் நமக்கு அது நன்மை பயக்குமாதலால் அதை முயன்று மேற்கொள்ளத் தான் வேண்டும்.
பிறர்பால் ஏற்பட்ட கசப்புணர்விலிருந்தும் விரோதத்தில் இருந்தும் விடுபடல் என்பது நிம்மதியை மீண்டும் கொண்டு சேர்க்கவல்லது.
நம் வீட்டில் உபயோகமற்ற பொருட்கள் அடைந்து கிடக்கும் ஓர் அறையை தீர்மானத்தோடு இறங்கி சுத்தம்செய்து, அவற்றை நீக்கும் செயல் போன்றதே மன்னித்தலாகும். ஒட்டடைகளும் அழுக்கும் நீங்கி சுத்தமான அந்த அறை போன்றே நம் மனமும் நிர்மலமாகிவிடும்.
மன்னிப்பதால் நாம் பிறருடைய செயல்பாட்டினை அங்கீகரித்ததாக ஆகிவிடுவதில்லை. அது நம் அமைதியை கருத்தில் கொண்டு கடந்து செல்லுதல் மட்டுமே!
மன்னிக்கப்பட்டவர் அயலார் என்றால், அவர்களோடு மேற்கொண்டு உறவாடுதலையும் வியாபாரத் தொடர்புகளையும் மீண்டும் தொடர வேண்டியதில்லை.
சிக்கல் எங்கு வருமென்றால், நாம் மன்னித்த நபர் நமது நெருங்கிய உறவாக இருக்கையில் தான்! மீண்டும் சகஜமாக பெருமுயற்சி தேவைப்படும். உறவின் நெருக்கத்தைப் பொறுத்து இயைவை சரிசெய்து கொள்ளவேண்டும்.
நமது நேற்றைய சுமையை குறைத்துக் கொண்டும் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டும் நிகழ்காலத்தை முழு மனதுடன் வாழ்வதை மன்னித்தல் சாத்தியப் படுத்துகிறது.
மன்னித்தலால் மன அழுத்தம், தூக்கமின்மை, இரத்த அழுத்தம் போன்ற உபாதைகளும் குறையும்.
அறியாமல் செய்யப்பட்ட தவறுகளால் உண்டான மனஸ்தாபங்கள் மன்னிப்பதால் விலகி, உறவை மீண்டும் துளிர்க்கச் செய்வதும் சாத்தியம் தான்.
மன்னித்தல் நமது பலவீனம் அல்ல. உண்மையில் அதற்கே வலுவான மனத்திடம் தேவை. ஒரு வகையில் அது விடுதலை. ஏமாற்றமும் பழி உணர்ச்சியும் அவமானமும் கோபமும் நம்மைச் சுற்றி மதில்களாக எழுப்பப்பட்டு விட்ட சிறையினின்று நிரந்தரமான விடுதலை தருவது.
ஒருவரை மன்னிப்பதால் அவரையும் அவருடைய செயலையும் அங்கீகரிக்கிறோம் என்பதில்லை. அவருடனான உறவில் உண்டான முறிவை செப்பனிட முயல்கிறோம் என்பதுமில்லை. நாம் மன்னித்ததால் எதிராளியும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்பதுமில்லை.
அவ்வளவு ஏன்…. நாம் மன்னித்து விட்டோம் என்பதே அவருக்கு தெரிய வேண்டியதுகூட இல்லை.
நமது கணினியில் உபயோகமற்ற பழைய கோப்புகளையும் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் காலாவதியான சமாச்சாரங்களையும் நீக்குவதால், மேலும் புது கோப்புகளுக்காக இடம் மிஞ்சுகிறது. கணினியின் வேகமும் கூடுகிறது. அவ்வாறே, ஒருவரால் மண்டிவிட்ட கசப்பையும் வலியையும் மனத்திலிருந்து நீக்குதல் நம் இயக்கத்தை மேலும் சீராக்கும்.
மன்னிப்பதால் மனஅழுத்தங்கள் விலகி மன உளைச்சலும் நீங்கி நம் சிந்தை புத்துணர்வுடன் செயல்படும்.
மன்னிப்பதும் மறப்பதும் சேர்ந்து சொல்லப்பட்டாலும், நாம் மன்னித்தலோடு நிறுத்திக் கொள்ளலாம். நடந்ததை மறக்க வேண்டிய கட்டாயமில்லை. நாம் அனுபவித்த ஏமாற்றத்தினாலுண்டான ‘புத்தி கொள்முதல்’ மறக்கப்படாமல் மனதின் ஏதோவோர் ஓரத்தில் இருக்கட்டும்.
அந்த சம்பவம் போல பிறிதோர் சூழல் எதிர்ப்படும்போது நமக்கு அதுவே எச்சரிக்கை மணியை அடிக்கும்.
பிறரை மன்னிப்பதை பற்றி இதுகாறும் விவாதித்தோம். நம்மை நாமே மன்னித்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
என்றோ நாம் அறியாத பிராயத்திலோ, புத்தித் தடுமாற்றத்திலோ, விளைவுகளை யோசிக்காத முட்டாள்தனத்தாலோ அல்லது சந்தர்ப்ப வசத்தாலோ சில தவறுகள் செய்திருப்போம் தான். அதற்கான கண்டனங்களை எதிர் கொண்டும் இருப்போம். அல்லது, பிறர் யாருமே அறியாமல் அந்த சம்பவமும் கடந்து மன உறுத்தல் மட்டும் எஞ்சியிருக்கும்.
அவ்வப்போது நம் மனசாட்சி விழித்துக் கொண்டு நம்மைக் குடையும். இதனால் நமது சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் குறைந்து, நாம் தன்னிரக்கத்தால் துன்பம் கொள்ளவேண்டி வரும். பிறரோடு நாம் பழகும் விதத்திலும், நம் புரிதலிலும் இது இடைப்பட்டு குழப்பவும் செய்யும்.
இதற்கு என்ன செய்யலாம்? நம் ஆழ்மனத்தில் பாசி படர்ந்ததுபோல் பரவிக்கிடக்கும் குற்ற உணர்வை எப்படி அகற்றலாம்?
உதாரணத்திற்கு நாம் ஒரு நண்பனின் துன்பத்திற்கு காரணமாக இருந்த குற்ற உணர்ச்சி நம் மனதை அரிப்பதாக்க் கொள்வோம்.
நேரம் ஒதுக்கி, நாமே அந்த சம்பவத்தை வேறொருவனாக விலகிநின்று நேர்மறையாக ஆராயலாம். அதனால் உண்டான இன்னல்களைச் சரிப்படுத்த ஏதும் வழிவகை இருந்தால், எப்பாடு பட்டேனும் அதை மேற்கொள்ளலாம். அல்லது அந்த நண்பனை அணுகி மனதார மன்னிப்பும் கேட்கலாம்..
இப்படியாக நம் மனப்பாரத்தை குறைக்கலாம்.
எதுவும் உதவாத பட்சத்தில், நாம் வணங்கும் இறைவனிடம் பாவ மன்னிப்பை மனமுருகிக் கோரலாம். யாவருக்குமே கடைசி புகலிடம் இறைவன் சன்னதி தானே?
எல்லா சமயங்களும் இதையே சொல்கின்றன. கிருத்துவத்தில் நம் பாவங்களை நடந்ததை நடந்தபடி சொல்லி பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கோரும் ஒரு உன்னதமான மீட்சி உண்டு.
ஆன்மீகத்தில் எல்லா பாவங்களுக்கும் பரிகாரம் உண்டு. எதைச் சொல்லி எதை செய்து பாவம் தீர்ப்பது என்று வந்தால், நாமே சிலவற்றை மேற்கொள்ளலாம்.
ஒரு நல்ல காரியத்திற்கு நம்மாலியன்ற பொருளுதவி மற்றும் சரீர உழைப்பைத் தருதல் என்று சங்கல்பித்துக் கொண்டு அவ்வாறு செய்தலும் மன சாந்தி தரவல்லது.
நமது ஆன்மீகம் சொல்லும் அபராத க்ஷமாபணம் (பிழை பொறுக்க வேண்டுதல்) தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது.
செய்த தவறை உணர்ந்து, மனதார வருந்துதலும் காலப்போக்கில் மன ஆறுதல் தரும். மெல்ல மெல்ல மனமும் நிலைக்கு மீளும்.
பழைய தவறுகளை செய்யாதிருத்தலும் புதிதாக ஏதும் தவறிழைக்காது கவனம் கொள்ளுதலும் பரிகாரங்களே!
‘அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பிழைகளையும் பொறுத்து ஆதரிக்க வேண்டும் கருணைத் தெய்வமே!’ என்று நாம் மன்னிப்புக் கோர அபயம் கிடைக்காமலா போய்விடும்!
Leave a comment
Upload