தொடர்கள்
தொடர்கள்
மூவர்ணக் காதல் (மூன்றாம் பகுதி) சித்ரூபன். படம் : அரஸ்

20250229080410627.jpeg

தமிழகத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ‘கவிதா ஆர்ட்ஸ்’க்கு சுவர் ஓவியங்கள் வரைவதற்கு அழைப்புகள்குவிந்தன. கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் இவர்களை நாடினர். அரசியல் தலைவர்களின் முகங்களைத்தத்ரூபமாக வரைவதில் தாருகேஷ் விற்பன்னன். பரப்புரை வாசகங்களை முப்பரிமாணமாக எழுதுவதில்கலியன் கை தேர்ந்தவன். கட்சிகளின் சின்னங்களையும் இன்னபிறவற்றையும் படிமங்களாகக் காட்டுவதில்வினோத் நிபுணன். ஒரு வருடம் கழித்து மூன்று நண்பர்களும் சென்னையில் கூடியிருந்தனர். ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொள்ள ‘கண்டதும் காதல்’ அனுபவங்களும், திகில் சம்பவங்களும்காத்திருந்தன.

“நான் உயிர் பிழைச்சது துர்கா மாதாவோட கருணையாலதான்..” என்று ஆரம்பித்தான் தாருகேஷ். “டார்ஜிலிங்ல போட்டோ எடுக்கச் சொல்லி பெஞ்ச்ல ஏறினேன். கனிகா மஜும்தார் தள்ளி நிற்கச் சொன்னா..நான் பின்னாடி கவனிக்காம அதலபாதாளத்துல விழுந்துட்டேன்.. பாறையில மோதி உடம்பு திரும்பி பெரியமரத்துல போய் முட்டிச்சு.. கஞ்சன்ஜங்கா சிகரத்தை பார்த்துகிட்டே குப்புற சாய்ஞ்சேன்.. அடர்த்தியா செடிகொடிகள் இருந்த புதர்ல விழுந்ததும் மயக்கமாயிட்டேன்.. கண் முழிச்சு பார்த்தா.. ஹாஸ்பிடல்லஇருக்கேன்.. குழுவா ட்ரெக்கிங் போறவங்க டைகர் ஹில்ஸோட இன்னொரு பக்கத்துல ஏறிவந்திருக்காங்க... நான் விழுந்த சப்தம் கேட்டு அவங்க ஓடிவந்து என்னை எப்படியோ தூக்கிட்டு போய்ஆஸ்பத்திரியில சேர்த்துட்டாங்க.. தோள், கால், இடுப்புனு நிறைய இடத்துல சிராய்ச்சு ரத்தம் வந்திருச்சு..நல்லவேளை தலை தப்பிச்சுது.. எனக்கு முதலுதவி பண்ணி, டிரிப்ஸ் ஏத்தி.. பொழைக்க வெச்சுட்டாங்க..”

“ஹைட்ராபாட் ஜுவுல எனக்கு நடந்தது ரொம்பக் கொடுமை.. மொபைலை எடுக்கப் போயி கூண்டுலகையும் தலையும் மாட்டிக்கிச்சி.. புலி வேகமா வந்து முன்னங்காலை என் கை மேல வெச்சுது.. எனக்கு பிளட்பிரஷர் அதிகமாயி வேர்க்க ஆரம்பிச்சிடுச்சி.. திரும்பிப் பார்த்தா.. தாரா ரெட்டியைக் காணோம்.. கூட்டமாவந்த மார்வாடி பசங்க செக்யூரிட்டி கிட்ட சொல்லி.. ஜூ கீப்பரையும், ரெண்டு அட்டென்டர்ஸையும் கூட்டிட்டுவந்தாங்க.. அவங்க கூண்டுக்கு பின்பக்கமா நுழைஞ்சு புலியோட கவனத்தை திசை திருப்பறதுக்காகஎன்னென்னமோ பண்ணாங்க.. அது என் கையை விட்டு நகரவேயில்லை.. அப்பறம் மாமிசத் துண்டை நாலாபக்கமும் வீசி எறிஞ்சாங்க.. கவுச்சி வாடைக்கு புலி அந்தப் பக்கமா திரும்பிப் போச்சு.. ஒரு வழியா நான்தப்பிச்சேன்.. கையெல்லாம் ரத்தக்காயம்.. அன்னிக்கி என்னை காப்பாத்தினது எங்க வாசவி அம்மன்தான்னுநினைக்கிறேன்..” என்றான் வினோத்.

“நான் காவிரி நதியில ஜல சமாதி ஆகியிருக்க வேண்டியது… திருநகரி பெருமாள் புண்ணியத்துலதப்பிச்சேன்..” என்றவாறே தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டான் கலியன். “ஹொகனேக்கல்ல பரிசல்சவாரி பண்ணிண்டு இருக்கறச்சே வித்யா அய்யருக்கு சிப்ஸ் குடுக்கலாம்னு எழுந்தது தப்பா போச்சு.. தடுமாறிஆத்துல விழுந்துட்டேன்.. நீச்சலும் தெரியாது.. மூக்குல வாயில எல்லாம் ஜலம் போயிடுத்து.. தண்ணிக்குஅடியில விதவிதமா மீனு, பாம்புன்னு எல்லா ஜந்துக்களும் பக்கத்துலயே மிதக்கறது.. மூச்சு திணறஆரம்பிச்சுடுத்து.. கொஞ்ச நேரத்துல ரெண்டு ‘டைவர்ஸ்’ தண்ணியில குதிச்சு டார்ச் லைட் வெளிச்சத்துலதேடிண்டு வந்து.. என்னைக் கொண்டு போய் கரையில போட்டுட்டா.. என்னோட ஃப்ரெண்ட்ஸ், ஆராய்ச்சிபண்ண வந்த பசங்க எல்லாருமா சேர்ந்து நான் முழுங்கின ஜலத்தை வெளியே கொண்டு வரதுக்குபோராடினாங்க.. அன்னிக்கு நடந்ததை இப்ப நினைச்சா கூட உடம்பு நடுங்கறது..”

“அந்தச் சம்பவம் நடந்த அன்னிக்கு பௌர்ணமி. நல்லா நினைவிருக்கு. ராத்திரி முழு நிலா வெளிச்சத்துலஎங்க அம்மாவோட உடம்பைப் பார்த்து கதறி அழுதேன்.. அந்தச் சாவுக்குக் காரணமா இருந்த பூசாரி, ஜமீன்தார், வியாபாரி.. எல்லாரையும் பழிவாங்கணும்கற எண்ணம் ஆழமா பதிஞ்சு போச்சு.. மூணு பேரையும்எதுவும் செய்ய முடியாததால அவங்களைச் சேர்ந்த எல்லார் மேலயும் வெறுப்பு வந்திடுச்சி”

வாசலில் யாரோ அழைத்ததும், தாருகேஷ் போய் “என்ன வேணும்..” என்றான். “என் பேரு சாரதி..டிடெக்டிவ் ஏஜென்ஸி வெச்சிருக்கேன்.. எங்க கம்பெனிக்கு விளம்பரப் பலகை எழுதணும்...”

“உள்ள வாங்க..” பெயின்ட் டப்பாக்களையும், தூரிகைகளையும், வண்ணக்கறை படிந்த துணிகளையும், ஒதுக்கி நாற்காலியைப் பிரித்துப் போட்டான். மூவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

“எல்லாரும் ‘ஃப்ளெக்ஸ்’க்கு மாறிட்டாளே.. இப்பவும் ஸைன் போர்ட் வேணும்னு வந்திருக்கீங்களே..”என்று வியந்தான் கலியன்.

“அதுவும் இருக்கு.. ரெண்டாவது மாடியில எங்க ஆபீசுக்கு வழிகாட்டற மாதிரி சின்னதா போர்டுவெக்கணும்.. இந்தப் பக்கமா வரும் போது உங்க ‘கவிதா ஆர்ட்ஸ்’ கண்ணுல பட்டுது..” என்ற சாரதிஹெல்மெட்டை தரையில் வைத்தான். அடர்ந்த தாடியும் மீசையுமாய் சராசரி உயரத்தில் இருந்தவனுக்குமுப்பத்தைந்து வயதிருக்கும். ஒரு காதில் கடுக்கனும், புறங்கையில் கரும்பச்சை ‘டாட்டூ’வும்அணிந்திருந்தான்.

“என்ன சைஸ்ல போர்டு.. கம்பெனி பேரென்ன..” என்றான் வினோத்.

“ரெண்டடிக்கு ஒரு அடி இருந்தா போதும்.. ‘எஸ்.வி. அசோசியேட்ஸ்’னு எழுதி கீழே அம்புக்குறிபோடணும்.. மூணு போர்டு தேவைப்படும்.. மாடிப்படிகள்ல வெக்கறதுக்கு..” என்றான். “வெளியே என்பார்ட்னர் வத்ஸலாவோட போன்காலுக்காக ரொம்ப நேரமா காத்துட்டிருந்தேன்.. அப்போ நீங்க பேசினதைஎல்லாம் யதேர்ச்சையா கேட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா..இந்த விஷயத்துல உதவலாம்னு தோணிச்சு..”

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “என்ன சொல்றீங்க.. எதுக்கு ஹெல்ப்..” தாருகேஷ்புரியாமல் கேட்டான்.

“உங்களோட பெர்சனல் விஷயத்துல தலையிடறேன்னு நினைக்க வேண்டாம்.. நீங்க மூணு பேரும்ஒவ்வொரு பொண்ணுங்ககிட்ட ஏதோவொரு ஈர்ப்புல இருக்கீங்கன்னு தெரியுது..”

“ஆமா.. ஒருதலைக் காதல்..” சிரித்தபடி சொன்னான் கலியன்.

“ஆபத்தான சமயத்துல அவங்க உங்களையெல்லாம் காப்பாத்தாம போயிட்டாங்கன்னு நீங்க பேசினதைவெச்சு புரிஞ்சுகிட்டேன்.. சரியா..”

“கரெக்ட்.. அந்தச் சம்பவத்துக்கு முன்னாடி ஒரேயொரு தடவைதான் அவங்களை மீட் பண்ணியிருக்கோம்..அந்தப் பொண்ணுங்களோட தொடர்பு வெச்சுக்கணும்னு ஆசை இருந்தது உண்மைதான்..” என்றான்வினோத். “அடுத்த சந்திப்பிலேயே எங்க உயிருக்கு ஆபத்து வரும்னு நினைக்கலை.. அவங்க ஏன்கண்டுக்காம போயிட்டாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு..”

“ஒரு முறைதான் பார்த்திருக்கீங்க.. உங்க முகமே நினைவில இருந்திருக்காது..”

“உண்மைதான்.. ஆனா கண்ணெதிரே ஒரு மனுஷன் உயிருக்கு போராடும் போது முன்னபின்னதெரியாதவங்க கூட உதவிக்கு வருவாங்களே..”

“எப்படியோ.. உங்க கேஸ் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.. என்னோட துப்பறியற புத்திக்கு தீனிகிடைச்சா மாதிரி தோணுது.. அந்த மூணு லேடீஸையும் கண்டுபிடிக்க உதவலாம்னு நினைக்கறேன்..”

“நானே வித்யா அய்யரை எப்படியாவது திரும்பப் பார்த்து நாலு வார்த்தை கேக்கணும்னு நினைச்சுண்டுஇருந்தேன்.. அவளோட டெலிபோன் நம்பரை வாங்கிக்காம போயிட்டேன்..”

“எனக்கும் கனிகா மஜும்தாரை மறுபடியும் சந்திச்சு பேசணும்னு தோணுது.. முதல் தடவை அவங்களைபார்த்ததுமே அழகுல மயங்கிட்டேன்.. மொபைல் நம்பர் கேட்க மறந்து போச்சு..”

“நல்ல வேளையா நான் தாரா ரெட்டியோட செல்போன் நம்பரை வாங்கி வெச்சிருக்கேன்.. நிறைய தடவைஅந்தப் பொண்ணுக்கு கால் பண்ணி பார்த்தேன்.. எங்கேஜ்ட்டாவே இருக்கு..”

“அந்த நம்பர் தர முடியுமா.. அதுலருந்து எதாவது க்ளூ கிடைக்கறதான்னு பார்க்கலாம்..”

வினோத் அவளுடைய எண்ணைச் சொல்லச் சொல்ல சாரதி தன்னுடைய டயரியில் எழுதிக் கொண்டான். “அவங்க போட்டோ இருக்கா.. ‘ஸெல்ஃபி’ ஏதாச்சும் எடுத்துக்கிட்டீங்களா..”

“இல்ல சார்..”

“நான் வித்யாவோட உருவத்தை கோவில்ல ஓவியமா வரைஞ்சேன்.. அது சீர்காழியில எங்காத்துலஇருக்கு..”

“ஊருக்கு போனவுடனே எனக்கு வாட்ஸப்புல அனுப்புங்க.. அதுவும் ஒரு விதத்துல உதவலாம்..” என்றான்சாரதி. “மிஸ்டர் தாருகேஷ்.. நீங்க கனிகாவோட எந்த மொழியில பேசினீங்க.. அவங்க எப்படி பதில்சொன்னாங்க..”

“நான் பெங்காலியில கேட்டேன்.. அவங்களுக்கும் அந்த பாஷை தெரிஞ்சிருக்கு..”

வினோத் “தாரா தெலுங்குல சரளமா பேசிச்சு.. ஆந்திராக்காரின்னு தோணுது..” என்றான்.

“வித்யாவை திருநகரியில பார்த்தப்போ பிராமணத் தமிழ்ல நன்னா பேசினா.. ஐயர் பொண்ணு தான்..சந்தேகமேயில்லை..” என்று கலியன் சொன்னான்.

அப்போது கைபேசியில் வந்த அழைப்பை “ஹலோ பார்ட்னர்.. அப்பறமா கூப்பிடறேன்..” என்றுதுண்டித்தான் சாரதி. “மிஸ்டர் வினோத்.. நீங்க ஹைதராபாத் ஜுவுல தாராவை சந்திச்சது என்னிக்கி..ஞாபகமிருக்கா..”

“தேதி நினைவில்லை.. ஆகஸ்ட் மாசம்.. ‘ரக்ஷா பந்தன்’கறதுனால நிறைய வடநாட்டுப் பசங்க ராக்கிகட்டிட்டு வந்தாங்க..”

“அப்படியா.. மிஸ்டர் கலியன்.. வித்யாவை நீங்க ஹொகனேக்கல்ல பார்த்தது எப்போ..”

“போன வருஷம்.. நாள் நட்சத்திரம் எல்லாம் மறந்து போச்சு.. அன்னிக்கி ராத்திரி சந்திர கிரகணம்ங்கறதுமட்டும் மனசுல பதிஞ்சிருக்கு..”

“சூப்பர்.. மிஸ்டர் தாருகேஷ்.. நீங்க கனிகாவை டார்ஜிலிங்ல மீட் பண்ணதைப் பத்தி சொல்லுங்க..”

“மே மாதம்.. நான் டைகர் ஹில்ஸ்க்கு போற வழியில புத்தரோட சிலையை பல்லக்குல வெச்சு.. காவிடிரஸ்ல துறவிகள் எல்லாம் மந்திரம் சொல்லிட்டே.. ஊர்வலமா வந்தாங்க..”

“புத்த பூர்ணிமாவா இருக்கும்..”

“எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க..” என்றான் வினோத்.

“தடயம் ஏதாச்சும் கிடைக்குமான்னு பார்க்கதான்.. இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்ட்.. ஆபீஸ் ரிட்சிஸ்ட்ரீட்ல இருக்கு..”

“எலக்ட்ரானிக்ஸ் சாமான் எல்லாம் விக்கறாங்களே.. மவுண்ட் ரோட் பக்கத்துல..”

“அதேதான்.. அந்தப் பொண்ணுங்க யாராவது உங்களை கான்டாக்ட் பண்ணாலோ.. அல்லது.. நீங்கஅவங்களை எங்கயாவது பார்த்தாலோ.. உடனே எனக்கு தகவல் சொல்லுங்க..”

தாருகேஷ் “ஓக்கே சார்.. ஸைன் போர்ட் ரெடியானதும் கூப்பிடறேன்..” என்றான்.

“உங்களுக்கு நடந்த சம்பவங்கள் ரொம்ப திகிலா இருக்கு.. வெவ்வேற தினங்களா இருந்தாலும் அந்தமூணுலயும் ஒரு ஒற்றுமை இருக்கு.. என்னன்னு யோசிச்சு வைங்க..” என்ற புதிருடன் விடைபெற்றுச்சென்றான் சாரதி.

“அவங்களை எதிர்கொள்ள கல்விதான் ஒரே ஆயுதம்கறதை புரிஞ்சுகிட்டேன்.. எங்களுக்கு எதைமறுத்தாங்களோ.. அந்தப் படிப்புல கவனம் செலுத்தினேன்.. வெறியோட வாசிச்சு இறுதியாண்டுலமாநிலத்திலயே முதல் மார்க் வாங்கினேன். ரிஸர்வேஷனைப் பயன்படுத்தாம என் திறமையாலயேமுன்னேறினேன்.. டிகிரி முடிச்சதும் கலை பண்பாட்டுத் துறையில நல்ல சம்பளத்தோட வேலைகிடைச்சுது..”

(தொடரும்)