தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 111 - பரணீதரன்

அடுத்ததாக இல் பொருள் உவமை அணி அணியை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன்.

இந்த உலகில் (பூ உலகில்) இல்லாத ஒரு பொருளை உவமையாக கூறுவது இல் பொருள் உவமை அணி என்பது பெரியோர் வாக்கு.

எடுத்துக்காட்டு

20250226100340860.png

அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை

வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - திருக்குறள்

கூறிய பொருள் - அன்பு இல்லாத ஒரு உயிரின் வாழ்க்கை யாருமே இல்லாத வறண்ட பாலைவனத்தில் உள்ள காய்ந்த மரம் தளிர் விடுவதை போன்றது அதனால் யாருக்கும் உபயோகம் இல்லை.

இல் பொருள் (பூ உலகில் இல்லாத பொருள்) - காய்ந்த மரம் தளிர் விடுவது (பட்ட மரம் தளிர்ப்பது) இந்த உலகில் இல்லாதது.

20250226100356462.png

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ் - திருக்குறள்

கூறிய பொருள் - குழந்தையை பெற்றவர்களுக்கு, அமிழ்தத்தை விடவும் இனிமையானது என்னவென்றால் தன்னுடைய குழந்தை சிறு கைகளால் பிசைந்த கூழாகும்.

இல் பொருள் (பூ உலகில் இல்லாத பொருள்) - அமிழ்தம் என்றும் அமுதம் என்றும் கூறப்படும் அமிர்தம் ஆகும் இது தேவ லோகத்திற்கு உரிய உணவாகும். பொதுவாக பூவுலகில் கிடைக்காது.

சிறப்புச் செய்தி - பொதுவாக அமிர்தத்தை, அமுதம் என்று தான் கூறுவோம். இங்கு திருவள்ளுவர் அமிழ்தம் என்று கூறுவதற்கு காரணம் உள்ளது. தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை (ழ்) நாம் உச்சரிக்கும் பொழுது, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பையை தூண்டி அமுதத்தை உருவாக்கி நீண்ட நாள் நம்மை வாழ வைக்கும் என்று சித்த மருத்துவம் மற்றும் சில இலக்கண நூல்கள் கூறுகின்றன. இதற்காகவே சங்கம் வைத்து ஆராய்ச்சி செய்து தமிழை வளர்த்தார்கள் என்ற குறிப்புகளும் பல இலக்கியங்களில் உள்ளன. இதனாலே அமிழ்தம் என்று கூறி சிறப்பு ழகரத்தை திருவள்ளுவர் இந்த குறளில் வைத்துள்ளார்.

20250226100411599.png

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் - திருக்குறள்

கூறிய பொருள் - யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் எதையும் செய்யக்கூடிய தேவர்களை போலவே கயவர்களும் நினைத்ததை செய்து முடிக்க கூடியவர்கள்.

இல் பொருள் (பூ உலகில் இல்லாத பொருள்) - தேவர்கள் பொதுவாக பூலகத்தில் இருப்பதில்லை. அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இடமான தேவலோகத்தில் இருப்பார்கள். அதனால் இந்த குறட்பாவை வஞ்சப்புகழ்ச்சி அணிக்கும், இல் பொருள் உவமை அணிக்கும் பொதுவாக நம்மால் பயன்படுத்த முடியும்.

20250226100427126.png

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே முனிவிலர்

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கு என முயலா நோன் தாள்

பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே - புறநானூறு

கூறிய பொருள் - இவர்களால் தான் இந்த உலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திரனிடம் இருக்கக்கூடிய அமிழ்தமே கிடைத்தாலும், அது இனியது என்று சுயநலத்துடன் தான் மட்டுமே உண்ணாமல் அனைவருக்கும் கொடுத்து பிறகு உண்ணுவார்கள். பிறரிடம் கோபம், வெறுப்பு போன்றவற்றை காட்ட மாட்டார்கள். சோம்பலுடன் இருக்க மாட்டார்கள். பிறர் அஞ்சுகின்ற காரியங்களுக்கு இவர்களும் அஞ்சுவார்கள். அதாவது தீமை செயல்களை செய்ய மாட்டார்கள். உலகம் போற்றுகின்ற நன்மையான செயல்களை செய்வதற்கு உயிரையும் கொடுப்பார்கள். பழி சொல் தரக்கூடிய செயல்களை, இந்த உலகத்தையே விலையாக கொடுத்தாலும் செய்ய மாட்டார்கள். செய்யும் செயல்களை சோர்வு என்பது இல்லாமல் செய்வார்கள். இங்கே சோர்வு என்பது சோம்பேறித்தனத்தை குறிக்காது. உடல் மிகுந்த சோறு வடிவதை குறிக்கும். இப்படிப்பட்ட நற்குணங்களை பெற்றவர்கள், திடமான முயற்சியை உடையவராகவும், தனக்காக வாழாமல் பிறருக்காக வாழக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களாலேயே இந்த உலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த பாடலில் இதனாலேயே உலகம் இயங்குகிறது என்பது முதலில் வந்தாலும், அதை நாம் கடைசியில் வைத்து பார்த்தால் பொருள் நன்றாக புரியும்.

இல் பொருள் (பூ உலகில் இல்லாத பொருள்) - இந்திரன் தேவ லோகத்தை சேர்ந்தவர். அவர் பூவுலகத்தில் வாழ்வதில்லை. அமிழ்தம் தேவலோகத்தை சேர்ந்தது. பூவுலகில் கிடைக்காது. இந்த செய்யுளை எழுதிய பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியும் அமிர்தத்தை அமிழ்தம் என்று திருவள்ளுவரைப் போலவே அழைக்கிறார்.

20250226100443145.png

கொடுத்தனன்பலிக்குத்தன்னைக்குமரனென்றறிந்துகுன்ற

மெடுத்தவன்‌றிதிபன்னான்‌கினிடையுவாவின்‌றாகென்று

தொடுத்தநூன்முனிவரோடுஞ்சொல்லினன்‌சுடர்கடம்மி

லடுத்ததிங்கென்னையென்னவன்றதுவாயதன்றே, - வில்லி பாரதம்

கூறிய பொருள் - குமரனாகிய அரவான், தன்னை பலி கொடுப்பதற்கு ஒத்துக் கொண்டான் என்பதை அறிந்து கொண்ட கோவர்தன கிரியை தூக்கிய கிருஷ்ண பரமாத்மா, பதிநான்காம் திதியாகிய சதுர்தசியில் இன்று தான் அமாவாசை என்று பல நூல்களை கற்ற முனிவர்களிடம் கூறினார். இதைப் பார்த்த சுடர்களாகிய சூரியனும் சந்திரனும் அன்றைய தினம் எப்படி அமாவாசை ஆகியது என்று ஆராய்ச்சி செய்ய ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அதனால் அன்றைய தினம் அமாவாசை ஆகியது.

இல் பொருள் (பூ உலகில் இல்லாத பொருள்) - பொதுவாக சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து வர மாட்டார்கள். பூவுலக நடைமுறையில் இது கிடையாது. வானத்தில் இது இயல்பாக நடந்தால் கூட, நம்முடைய பூமியில் இது நடைமுறையில் இல்லை.

இதேபோல சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள், கண்ணகியும் - கோவலனும் சேர்ந்து வரும்பொழுது சூரியனும் சந்திரனும் சேர்ந்து வருவதாக செய்யுள் இயற்றியுள்ளார். இதுவும் இவ்வுலகத்தின் நடைமுறையில் கிடையாது.

வடமொழி இலக்கியங்களிலும் இல் பொருள் உவமை அணிக்கு இதே போன்று பல சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக வில்லிபாரதத்தில் நாம் பார்த்த இதே பொருள் வேதவியாசர் இயற்றிய மகாபாரதத்திலும் உள்ளது. பொதுவாக கதையின் நாயகனை, சூரியனுக்கும், சந்திரனுக்கும், அக்னிக்கும், வாயுவிற்கும், பல்வேறு தேவர்களுக்கும், பல்வேறு கடவுளருக்கும் உவமையாக வடமொழியில் கூறுவார்கள்.

இத்தோடு இல் பொருள் உவமை அணி முடிந்து விட்டது. அடுத்த வாரம் வேறொரு அணியை பார்ப்போம் என்று கூறி விடை பெற்றார் பரணிதரன்.