தொடர்கள்
ஆன்மீகம்
சனீஸ்வரர் கோயில்களும்..!! சனிப்பெயர்ச்சியும்..!!! - ஆரூர் சுந்தரசேகர்.

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!

சனி பகவான், நீதி நேர்மைக்கான கிரகம். சனி என்ற பெயரைக் கேட்டாலே ஒரு சிலருக்கு அச்சமாக இருக்கும். நவக்கிரகங்களில் இவர் ஒருவரே ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். அதனால் சனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு, "சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை" சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்கவும் முடியாது. ஆனால் சனி பகவான் கடந்தகால கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனுக்கேற்ப நன்மை, தீமைகளை வழங்கக்கூடியவர்.
சனிபகவான், சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக ஜனனமானவர். இரும்பு உலோகம், கருப்பு வஸ்திரம், கசப்பான சுவை, மேற்கு திசை இவரது உகந்த அம்சங்கள். காக்கையை வாகனமாகக் கொண்டவர். இவருக்கு விருப்பமான மலர்கள் கருங்குவளை மற்றும் நீல நிற சங்கு புஷ்பம். தினமும் காக்கைக்கு அன்னமிடுவதும், உளுந்து தானம் செய்வதும், மேலும் சனிக்கிழமைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் வீரியத்தைக் குறைக்கும்.
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்கச் சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, சனி பகவானின் சந்நிதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றித் தீபமிட்டு, எள்ளன்னம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்கலாம். அவரை மனமுருகச் சனி கவசம், சனீஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். மாதத்தில் ஒரு முறை நல்லெண்ணெய், கருப்பு வஸ்திரம், கருப்பு உளுந்து ஆகியவற்றைத் தட்சணையுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தானம் செய்யச் சனி பகவானின் தோஷ வீரியம் குறையும்.
நவகிரகங்களில் சனி மட்டுமே ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசிக்க இரண்டரை வருடம் எடுத்துக் கொள்கிறது. இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!


சனி தேவன், மந்தாகரன், சாயாபுத்ரன், ரவிபுத்ரன்,மந்தன், மகேசன், ஜடாதரன், ஆயுள் காரகன் இவ்வாறு பல்வேறு பெயர்களில் சனீஸ்வரன் அழைக்கப்படுகிறார். சனி பகவான் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் வல்லமை பெற்றவர். பெரும்பாலான கோயில்களில் சனி பகவானுக்குத் தனி சந்நிதி இருந்தாலும், அவருக்கென தனிக் கோயில்களும் பல இடங்களில் இருக்கின்றன.

சனீஸ்வரரை வணங்க முக்கியமான சில கோயில்கள்:

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!


திருநள்ளாறு - மங்கள சனீஸ்வரர் கோயில்-தர்பாரண்யேஸ்வரர் கோவில், நள மஹாராஜா சனி தோஷத்திலிருந்து விடுபட்ட தலம். நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்கு உரிய முக்கிய பரிகார தலமாகப் போற்றப்படுகின்றது.
பொழிச்சலூர் - வட திருநள்ளாறு-சென்னை அருகே அகஸ்தீஸ்வரர் ஆலயம், சனீஸ்வர பகவானே இத்தல இறைவனைப் பூஜித்து இங்குள்ள நள்ளார் தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். இங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவானால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும்.
திருவாதவூர் - மதுரை மாவட்டம்- திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் தனி சந்நிதியில் அருள்கிறார். இத்தலத்து ஈசனை வழிபடச் சனி பாதிப்பிலிருந்து தப்பலாம்.
திருக்கோடிக்காவல் - பால சனி கோயில்-சனி பகவான் குழந்தை வடிவில் காட்சி தரும் அபூர்வ ஸ்தலம்.
குச்சனூர் - சனீஸ்வரர் கோயில்-தேனி மாவட்டத்தில் சனி பகவான், சுயம்புவான மூலவராக அருள் செய்யும் கோயில்.இவர் முன் வினை கர்த்தாக்களை அழித்து கஷ்டங்களைப் போக்கி, நன்மைகள் அருள்கின்றார்.
குத்தாலம் - பாதாள சனீஸ்வரர்- சனி பகவான் சுயம்பு மூர்த்தியாகப் பாதாளத்தில் இருந்து தோன்றி வழிபட்ட ஸ்தலம் குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் சனி பகவான் கையில் அமிர்த கலசத்தோடு இருப்பது சிறப்பாகும். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால், நம்முடைய பாபம், சனிக் கிரகத்தின் தோஷம் போன்றவை பாதாளத்திற்கே போய்விடுமாம்.
விளங்குளம் - ஆதார ப்ருஹத் சனீஸ்வரர் கோவில்-சனி பகவான் தனது மனைவிகளுடன் திருமண வடிவில் காட்சி தரும்.

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!

ஏரிக்குப்பம் - திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு யந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது.
சோழவந்தான் - சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களின் சங்கடங்கள் தீர்க்கும் மங்கள சனியாக அருள்பாலிப்பவர் சோழவந்தான் படித்துறை சனீஸ்வரர். சனிதசை நடப்பவர்கள் இங்கு வந்து பகவானைத் தரிசித்து விளக்கேற்றி வழிபட்டால் சனியின் பார்வையால் விளையும் கெடுபலன்கள் உடனே நீங்கி நல்ல பலன்கள் பெருகுகின்றன.
எட்டியதாலி - அஷ்டம சனி பரிகார ஸ்தலம்-அகஸ்தீஸ்வரர் கோயில், இங்கு ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைந்துள்ளது. இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
கூறைநாடு - மயிலாடுதுறையில் உள்ள கூறைநாடு புனுகீஸ்வரர் கோயிலில், சனி பகவானுக்குத் தனி விமானம், தனி கும்பம், தனிச் சந்நிதி உண்டு. இவர், இங்குச் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருகிறார்.
இலைத்தூர் - மதுநாதகசாமி கோவில்-அபயஹஸ்த நிலையில் சனி பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். இங்குச் சனிபகவான் தன்னை வலம் வரும் பக்தர்களுக்கு அனைத்துத் தோஷங்களையும் நீக்கி காக்கிறார்.
ஸ்ரீவைகுண்டம் - திருநெல்வேலி நவகைலாயங்களில் ஒன்று, சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனி பகவானால் ஏற்படும் திருமணத் தடைகள் விலகி, மனம்போல மாங்கல்யம் கிடைக்கும்.

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!


திருக்கொள்ளிக்காடு - சூரியானாருக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் அமைந்துள்ளது. இங்குப் பொங்கு சனி பகவான் தனிச்சந்நிதியில் கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை என காட்சி தருகிறார். தன்னைத் தரிசிக்கிற பக்தர்களுக்கு, சகல செல்வங்களையும் நோய் நொடியில்லாத, நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்கி வருகிறார்.
அறையணிநல்லூர் - திருக்கோவிலூர் அருகே அறையணிநாதர் கோயிலின் பிரகாரத்தில் சனிபகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்து ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார்.
குருமந்தூர் - ஈரோடு மாவட்டம் திருநள்ளாறு போலவே சிறப்பு வழிபாடு செய்யப்படும் ஸ்தலம். இவரும் அனைத்து சனி தோஷங்களையும் நீக்கி அருள்கிறார்.
கொடுமுடி - பவானி அருகே கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் சனிபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்கிறார். இங்குச் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம்; சனிபகவான் அருள் கிட்டும்.
ஸ்ரீவாஞ்சியம் - காசிக்கு நிகரான இத்தலத்தில் குப்த கங்கையில் நீராடி, எமதீர்த்தத்திலும் நீராடி, இங்கு அருளும் ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டார் சனிபகவான். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி ஈசனையும், யமதர்ம ராஜனையும் வணங்கினால், சனிபகவானின் அருள் நமக்குக் கிட்டும்.
கோவியலூர் - விழுப்புரம் அருகே உள்ள கோவியலூர் வாலீஸ்வரர் கோயிலில் சனிபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்கினால் சனி பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!


மொரட்டாண்டி - விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயரப் பஞ்சலோக விக்ரகமாய் ஒரு கரத்தில் வில், மறுகரத்தில் அம்பு, மற்ற இரு கரங்கள் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள்கிறார்.
வழுவூர் - இக் கோயில் சனீஸ்வரருக்குச் சாப நிவர்த்தி ஆன ஸ்தலம். இங்குச் சனி பகவான், கையில் வில்லுடன் தனிச்சந்நிதியில் அற்புதமாகக் காட்சி தருகிறார்.
ஆம்பூர் - ஆஞ்சநேயர் கோவில்-சனி பகவான் ஹனுமான் காலடியில் காட்சி தரும் ஸ்தலம். சனிதோஷம் உள்ள எவரும் இத்தலம் வந்து பெரிய ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றால், தொல்லைகள் நீங்கி சுகம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பூந்தமல்லி - வைத்தீஸ்வரன் கோயிலில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனி பாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து விடுபடலாம்.
தேப்பெருமாநல்லூர் - ஸ்ரீ வேதாந்த நாயகி அம்மன் கோயிலில் சனி பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. காக்கை வாகனத்தில், சனி பகவான் மேற்கு திசை நோக்கிக் காட்சியளிக்கிறார். இவர் சிவபெருமானைப் பிடிப்பதற்கு முன்பு, ஸ்ரீ வேதாந்த நாயகி அம்மனின் அருள் வேண்டி அவரின் ஆசியைப் பெற்றிருந்த அற்புதமான திருக்கோலம். இந்த சனி பகவானை மனதார வணங்கி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!

சனிப்பெயர்ச்சி:
திருக்கணிதப்படி 2025 - மார்ச் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. சுக்ல பிரதமையும் சனிக்கிழமை ரேவதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் 6-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ இருக்கின்றது.

சனீஸ்வர மூல மந்திரம் : "ஓம் ஷம் ஷனேஸ்கர்யாய நமஹ"
சனீஸ்வர மகா மந்திரம் : “நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம் சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
சனீஸ்வர காயத்ரி மந்திரம் : “ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த: ப்ரசோதயாத்”
சனீஸ்வர பீஜ மந்திரம் : "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ"

Shaneeswarar temples..!! Shani Peyarchi..!!!

மேற்கண்ட சனீஸ்வர மந்திரங்களைச் சொல்லி அவரால் நமக்கு ஏற்படும் ஏழரைச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச்சனி போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, சனீஸ்வரரின் அருளைப் பெறுவோம்!!