அத்தை, நீங்க வைங்க, சிரமப் படாதீங்க உங்களாலே முடியாது நான் செய்துக்கிறேன் என்று மருமகள் மல்லிகா சமையலறையிலிருந்து குரல் கொடுக்க,
ஏன் ? என்னால் முடியும். முடியாது, முடியாதுனு சொல்லி சொல்லியே என்னை முடக்கி வச்சிடலாம்முனு நினைக்கிறியா ? என திருப்பிக் கேட்டாள் அத்தை திலகவதி.
அத்தை நீங்க செய்விங்க, அப்புறம் கையை குடையுது, கால் குடையுதுனு சொல்வீங்க..அதனாலேதான் வேண்டாங்கிறேன் என விளக்கினாள்.எந்த விளக்கமும் அவளுக்கு தேவைப்படவில்லை. பிடிக்காத மருமகள் கைப்பட்டால் குத்தம் கால்பட்டால் குத்தம் என சொல்லும் ரகம் அத்தை.
சே, என்ன சென்மமோ, சோத்தை தின்றோமா, செவனேனு இருந்தோமானு இல்லாமல் இப்படி நாட்டமை பண்ணுது என மல்லலிகா அலுத்துக் கொண்டாள்.
அத்தை தனியாக கிராமத்தில் இருந்தவள், மாமா இறந்த பின்னே ஒரே மகனான சங்கரிடம் வந்து தங்கிவிட்டாள். அத்தைக்கு சொந்தம் என சொல்லிக்கொள்ள இதே ஊரில் ஒரே ஒரு பாசமான தம்பியைத் தவிர வேறு எவருமில்லை.
அவ்வப்போது அவர் வந்து பார்த்துச்செல்வார், அவரிடமும் மல்லிகாவைப் பற்றி இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்வாள், அவரும் அதனைக் கேட்டுக்கொண்டு, உனக்கும் வயசாகிட்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு அமைதியாக இரு எனவும், உனக்கு என யாரு இருக்கா மகன் மருமகளை விட்டால் என அறிவுரைகளை சொன்னாலும், அதெல்லாம் காதில் ஏற்றிக்கொள்ளமாட்டாள். அதுக என்ன சொல்றது ? நாம ஏன் கேட்கணும், என் மகன் சம்பாதிக்கிறான் இவளுக்கு என்ன அதிகாரம் ? என எள்ளும், கொள்ளுமாக கொதித்தாள் அவரிடத்தில்.
செல்போன் ஒன்றினை வாங்கி வந்தவர், இதை வைத்துக்கொள் பக்தி பாடல்களை கேளு என கொடுத்தார், அதை வைத்துக்கொண்டு இரண்டு நாட்களாக பாடல்கள் கேட்டதினால் சற்று வீடு அமைதியாக இருக்கிறது, வேறு ஒன்றும் அதில் இயக்கத் தெரியாததினால், அதை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டு தம்பி வாங்கிக்கொடுத்தார் என வருபவர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள்.
மல்லிகாவின் ஒரே அண்ணன் சிவாவிடமிருந்து போன் வரவும், அவரிடம் தனது மனதிலுள்ள கவலைகளையெல்லாம் சிவாவிடம் கொட்டினாள் மல்லிகா, இதற்கு தீர்வே இல்லையா ? கல்யாணம் ஆன நாள் முதல் ஏச்சும் பேச்சும் கேட்டு கேட்டு அலுத்துப்போய்விட்டது, இப்போ எனக்கும் வயசாகிட்டு, இன்னும் திட்டிக்கொண்டே இருந்தால் எப்படி எனவும், அது போனால்தான் எனக்கு நிம்மதி என தன் தன் அண்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆதங்கமாக..
நாளைக்கு நான் வீட்டிற்கு வருகிறேன், வந்து பேசிக்கொள்ளலாம் என சொல்லி வைத்துவிட்டார். மாலை நேரத்தில் தலையை வாரிவிடவேண்டி அத்தை மல்லிகாவை அழைக்க, அவள் அடுப்படியில் வேலையில் இருந்தபடியே, வரேன் சற்று நேரம் பொறுங்கள் என்றதை காதில் வாங்கமலே,
ரொம்ப கொழுப்பு இதெல்லாம்....என தன் வசையைத் தொடங்கினார்.
பாடம் படித்துக்கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் பெயர்த்தி சுருதி எழுந்து பாட்டியைத் திட்டியபடி, எதற்கெடுத்தாலும் அம்மாவை கூப்புடுறே?! வீட்டு வேலையெல்லாம் யார் செய்வா ? என்றபடி பாட்டியிடம் சொல்லி சூழ்நிலையை சகஜமாக்கியவள், அம்மா நீ வேலையைப் பாரும்மா,நான் பார்த்துக்கிறேன் என்றதைக் கேட்ட மல்லிகா ஆச்சரியமடைந்தாள்.
இவளுக்கே நாமதான் தலைமுடியை பிண்ணனும், அது பாட்டிக்கு செய்துருக்கே என மனதிற்குள் ஆச்சரியமடைந்தாள். பராவாயில்லையே!
என் பெயர்த்தி சமர்த்து. என்னத்தான் இருந்தாலும் அவ அம்மா மாதிரி இல்லாமல் தன் மகனைப் போல எல்லாருக்கும் உதவியாக இருக்கு என பாராட்டினாள் அத்தை. தங்கை வீட்டிற்கு கிளம்பிய சிவாவின் வண்டி அன்று ஏனோ மக்கர் செய்தது, உதைத்து உதைத்து வியர்வையால் சட்டை நனைந்தது, ஒரு வழியாக ஸ்டார்ட் ஆன வண்டி கொஞ்ச தூரம் சென்றியிருக்கும், எரிபொருள் இல்லாமல் நின்று விட, தள்ளிக்கொண்டே வந்து பெட்ரோல் நிரப்பியவன், என்ன ஒரே தடங்கலாக இருக்கே ? என நினைத்தபடி மல்லிகாவின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார் சிவா.
வந்தவரை வா என்று கூட அழைக்காத அத்தை, வந்துட்டானா, கரெக்டா எம் மகன் ஊரிலே இல்லையென்றால் வந்திடுவான் சோத்திற்கு.. மானங்கெட்டவன் என சாடியதும், ஏற்கனவே வாகனத்தகராறு, பெட்ரோல் தீர்ந்த்துப் போன கடுப்பிலிருந்த சிவா சினம் அடைந்தாலும், வயதில் பெரியவள் என நினைத்து சிரித்தபடி கடந்துப்போக நினைத்தான், தலையை வாரிக்கொண்டே, மல்லிகாவைப்பற்றி தாறுமாறாக காது வலிக்க அத்தை பேசியதில் கடுப்பான சிவா,
அத்தான் எப்போ ஊருக்கு திரும்பி வருவாரு ? என கேட்க, இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு அவர் வருவதற்கு என மல்லிகா கூறியதும் அதற்குள் ஒரு வழி செய்திடுவோம் என்ற சிவா, சுருதியை வெளியே விளையாடப் போகச் சொன்னவர் ஆத்திரத்துடன் திலகவதியின் அருகே சென்று கழுத்தை நெறித்து உலுக்கிட சற்று நேரத்தில் மூர்ச்சையின்றி தரையில் கிடந்தாள் திலகவதி.
பதட்டமடைந்த இருவரும் சற்று நிதானித்தவர்கள் கணவருக்கும், அத்தையின் தம்பிக்கும் அத்தை இறந்துவிட்டதாக செய்தியை மல்லிகா சொல்ல, யாருக்கும் எவ்வித சந்தேகமுமின்றி நல்லடக்கம் செய்யப்பட்டாள் திலகவதி.
காரியங்கள் முடிந்ததும் கிளம்பிய திலகவதியின் தம்பி, தான் திலகவதிக்கு வாங்கிக் கொடுத்த அலைபேசியை மட்டும் அவளின் நினைவாக வைத்துக் கொள்வதாக கூறி அதனை கேட்டு வாங்கிச் சென்றார். நான் ஊரில் இல்லாத நேரத்தில் சரியான நேரத்திற்கு வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சிவாவிற்கு நன்றி கூறியனுப்பினார் சங்கர்.
சுருதிதான் பாட்டி.. பாட்டி என அன்று முழுவதும் அழுதுக் கொண்டேயிருந்தாள் அவளைத் தேற்றும் விதமாக அவளிடம் அமர்ந்துப் பேசினார் சங்கர். பாட்டிக்கு வயசாகிட்டு, உடம்பிற்கு முடியாமல் படுக்கையில் வீழ்ந்து கிடக்காமல் நல்லபடியாக இறந்திட்டாங்க, அதுவே போதும் அழுவாதே என சுருதியைத் தேற்றினார் சங்கர்.
எப்ப பார்த்தாலும் என்னிடமும் அம்மாவிடமும் எரிந்து எரிந்து விழும் பாட்டி, இத்தனை நாள் இல்லாமல் நேற்றுதான் என்னைப் பாராட்டினார்கள் அப்பா, அதான் அழுகையாக வருகிறது என்றாள்.
அப்படியா ! என்ன விஷயத்திற்காக பாராட்டினார்கள் உன்னை என கேட்க,
அம்மா உள்ளே அடிப்படியில் வேலையாக இருந்தபோது தலையை வாரி விட பாட்டி அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள்,
நான்தான் அவர்களை ஏன் கூப்பிடுறீங்க பாட்டி என சொல்லி, அவர்களின் மொபைலில் செல்ஃபி மோடை ஆன் செய்துவைத்து இப்போது நீங்களே வாரிக்கொள்ளுங்கள் என கற்றுக்கொடுத்தேன், அதானால் முதன் முறையாக என்னைப் பாராட்டினாள் பாட்டி என்ற சுருதி சொன்னபோதுதான் மல்லிகாவிற்கு நினைவில் வந்தது, நேற்றுக் கூட அத்தை உட்கார்ந்து தலைவாரும் போதுதானே சம்பவம் நடந்தது என நினைத்துப் பயந்து படப்படப்புடன் அண்ணன் சிவாவிற்கு போன் செய்ய முயன்றாள்.
திலகவதியின் தம்பி, மல்லிகாவின் அண்ணன் சிவா மற்றும் சில காவலர்கள் போலீஸ் வாகனத்தில் சங்கர் வீட்டு வாசலில் வந்திறங்கினார்கள்.
சிவாவின் கையில் விலங்கு மாட்டியிருந்தது.
Leave a comment
Upload