எதிர்பாராத இடங்களில் செய்திகளுக்கான துப்பு கிடைக்கும். புத்திசாலி நிருபர் அதை சுவையான செய்தி ஆக்குவார்.
காங்கிரஸ் ஆட்சியின் முன்னாள் மந்திரியான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியின் 80ஆவது பிறந்தநாள் மூன்று நாட்கள் விழாவாக கடலூர் டவுன்ஹால் அருகே நடைபெற்றது. ‘பாராட்டுவிழா செய்திகளை வெளியிடுவதில்லை’ என்பது ஹிண்டுவின் அப்போதைய கொள்கை. இருந்தாலும் சக நிருபர்கள் வற்புறுத்தியதால் மூன்றாவது நாள் விழாவை பார்க்கச் சென்றான். அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அது அவனது ரசனைக்குரிய நடிகர் சிவாஜிகணேசனின் வருகை.
விழா நிறைவுபெறும் சமயம், திண்டிவனம் ராமமூர்த்தி நன்றி சொன்னார். அடுத்து தேசியகீதம் ஒலிபரப்பப்பட்டது. முதல் இரண்டு வரிகள் தொடங்கியது. தலைமை தாங்கியிருக்க வேண்டிய அப்போதைய மின்சாரத்துறை மந்திரி பண்ருட்டி ராமசந்திரன் அரங்கில் நுழைந்தார். அதனால் தேசியகீதம் நிறுத்தப்பட்டது, விழா தொடர்ந்தது.
உடனே அவன் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலகத்திற்குச் சென்று ‘மந்திரியின் தாமதத்தினால் தேசியகீதம் பாதியில் நிறுத்தப்பட்டது’ என்று செய்தி எழுதிக் கொடுத்தான். தந்தி அலுவலர் அதை, அனுப்ப இருந்த நேரத்தில் தேசிய கீதம் இரண்டாம் முறை ஒலித்தது. அவன் உடனே முதலில் கொடுத்திருந்த தந்தித் தாளை திரும்பப் பெற்று, ‘மந்திரியின் தாமதத்தால், ஒரு விழாவில் தேசியகீதம் இரண்டு முறை ஒலிபரப்பப்பட்டது’ என்று செய்தி எழுதிக் கொடுத்தான். சுவைபட எழுதப்பட்ட அந்தச் செய்தி மறுநாள் ஹிண்டுவில் பெட்டிச் செய்தியாக வெளிவந்தது. அதை படித்த பண்ருட்டி ராமசந்திரன், ‘என்னை இப்படி வாரிட்டீங்களே?’ என்று சிரித்தபடியே கேட்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு கடலூரில் தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கு ஒரு பாராட்டுவிழா நடைபெற்றது. அது அவனுக்கு செய்தி அல்ல என்றாலும், ஆதித்தனார் குடும்பத் தொடர்பு காரணமாக விழாவிற்குச் சென்றான், செய்தி எதுவும் தேறாது என்ற நிலையிலும். ஆனாலும் அவனுக்கு அப்போது ஒரு செய்தி மேடையிலேயே காத்திருந்தது.
விழாவில் என்.எல்.சி. நிறுவனத் தலைவர் ஜி.எல்.டண்டன் பேசத் தொடங்கிய போது, மேடையில் மின்சாரம் தடைபட்டது. மின்சாரம் மீண்டும் வர வெகுநேரம் ஆயிற்று. அது போதாதா, அவனுக்கு செய்தி எழுத?
அப்போது தென்னாற்காடு மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தது. அது மிகப்பெரிய மின்நிலையத்தின் தலைவரையும் விட்டுவைக்கவில்லை என்பதை செய்தியாக்கி அதற்கு முகப்பு வாசகமாக ‘ஆலயத்திற்கு அருகில், ஆண்டவனுக்கு அப்பால்’ (Nearer the Church but farther from God) என்று தொடங்கி மின்வெட்டு பற்றிய நீண்ட செய்தியை அனுப்பினான். ‘கடலூர் நெய்வேலிக்கு அருகே இருந்தும் அங்கே மின்சாரம் இல்லை என்பது மட்டும் செய்தி அல்ல. நெய்வேலி மின்நிலைய தலைவரையே மின்வெட்டு பாதித்தது என்பதே செய்தி’. எங்கே செய்தி இல்லையென்று சென்றானோ, அங்கே வேறொரு செய்திக்கான மூலம் கிடைத்தது. செய்தியின் நிறைவில் ‘சிவந்தி ஆதித்தனுக்கு நடந்த பாராட்டு விழாவில் இப்படி நடந்தது’ என்று குறிப்பிட்டான்.
‘இப்படி இரண்டையும் சேர்த்து எழுதுவதா? தனித்தனியாக எழுதியிருக்க வேண்டாமா?‘ என்று நண்பர்கள் கேட்டார்கள். ‘இரண்டும் சேர்ந்ததுதான் செய்தியின் விசேஷம்’ என்றான் அவன்.
மின்வெட்டு பற்றிய செய்தி எழுதிய காலத்தில் அவனுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர் மோதல்தான். தூத்துக்குடி, எண்ணூர் அனல்மின் நிலையங்கள் இலக்குக்கு குறைவாகவே, மின்சாரம் உற்பத்தி செய்தன. முந்தைய நாள் நள்ளிரவு வரை எண்ணூரில் எவ்வளவு மெகாவாட், தூத்துக்குடியில் எவ்வளவு மெகாவாட், நெய்வேலியில் எவ்வளவு மெகாவாட், மேட்டூர் அனல் நிலையத்தில் எவ்வளவு, என்பதையெல்லாம் புள்ளி விபரங்களுடன் அவ்வப்போது எழுதி வந்தான். இது மின்சார வாரிய சேர்மன் பி.முராரிக்கும், சில தலைமைப் பொறியாளர்களுக்கும் சங்கடமாக இருந்தது. அவர்கள் சிலசமயம் அவனிடம், தொலைபேசியில், ‘‘நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு எழுதுவதா?’. நீங்கள் நெய்வேலியில் இருக்கீறீர்கள்? தூத்துக்குடி, எண்ணூர், மேட்டூர் ஆகிய இடங்களில் மின்உற்பத்தி பற்றி எப்படித் தெரியும்?’’ என்று கேட்டதுண்டு. அவன் சொல்வான், ‘‘எப்படித் தகவல் கிடைத்தது என்பது உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. நான் கொடுத்த புள்ளிவிபரங்கள் தவறாக இருந்தால் நீங்கள் எங்கள் எடிட்டரிடம் புகார் செய்யலாம்’’ என்றான் தைரியமாக. அவர்கள் அப்படிப் புகார் செய்யவில்லை, ஏனென்றால் அவன் கொடுத்த புள்ளிவிபரங்கள் துல்லியமானவை.
இதையடுத்து மின்துறை உயர் அதிகாரிகள், ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய துணைமின் நிலையங்களில் ‘ஹிண்டு நிருபர் தகவல் கேட்டால், கொடுக்காதீர்கள்’ என்று சொல்லி வைத்தார்கள். அவன் ஒருபோதும் அவர்களிடம் தகவல் கேட்டதில்லை. ஆனாலும் மின்வெட்டு பற்றி எழுதும்போதெல்லாம், மாநிலத்தின் மின்உற்பத்தி பற்றி சரியான புள்ளிவிபரங்களைக் கொடுத்தான். மின்துறை உயர் அதிகாரிகள் அவனுக்கு எப்படி தகவல் கிடைத்தது என்று வியந்தார்கள். தங்கள் நிர்வாகத்தில், தங்கள் காலடியில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டதில்லை.
ஒவ்வொரு மின்நிலையமும், முதல் நாள் நள்ளிரவு 12 மணி முதல், மறுநாள் நள்ளிரவு 12மணி வரை மின்உற்பத்தி எவ்வளவு என்பது அதிகாலையில் பிற மின் நிலையங்களுடன் பகிர்ந்து கொள்ளும். . நெய்வேலி மின்நிலையம் மூலம் அவன் அந்தப் புள்ளி விபரங்களை அவ்வப்போது பெற்று வந்தான். தகவல் திரட்ட இப்படியும் ஒரு வழியிருக்கிறது என்பதை மின்சாரத் துறையினரால் ஊகிக்க முடியவில்லை.
கடலூருக்கு அவன் ஜாகை மாற்றியபோது, தங்கள் துறை பற்றி செய்தி வந்த தினங்களில் அவன் வீட்டில் மட்டும் மின்னிணைப்பு துண்டிக்கப்படும். எந்தெந்த தினங்களில் மின்வெட்டு பற்றி எழுதுகிறானோ, அன்று அவன் மனைவியிடம் சொல்லிவிடுவான், ‘‘மெழுகுவர்த்தி, அரிக்கேன் லைட், டார்ச் லைட் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொள். நாளை பகலும் இரவும் நமக்கு மின்சாரம் வராது.’’ எப்படித் தான் அவன் வீட்டிற்கு மட்டும் இணைப்பு துண்டிக்கப்படுமோ தெரியாது. ஆனால் அது நடந்தது.
இந்த காலக்கட்டத்திலும் வாரம் ஒருமுறை அல்லது மாதம் மூன்று முறை அவன் ஏதாவது ஒரு விஷயமாக மின்சாரத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துக் கொண்டு தான் இருந்தான். அவர், அவனிடம் அது பற்றி எதுவும் கேட்டதில்லை. வருடம் 1984, அவன் ஹிண்டு நிருபர் பதவியைத் துறந்து அமெரிக்க தூதரகத்தில் தமிழ் எடிட்டராக சேர்ந்த புதிது. அப்போது கோல் இண்டியா நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த என்.எல்.சி.தலைவர் ஜி.எல்.டண்டனுக்கு பெண்ணாடம் ரோட்டரி கிளப் ஒரு பாராட்டு விழா நடத்தியது. அதில் அவனும் பண்ருட்டி ராமச்சந்திரனும் சிறப்பு விருந்தினர்கள். ஜி.எல்.டண்டனும் அவனும் பண்ருட்டியாரும் மேடை ஏறியபோது, டண்டன் அவனைக் கேட்டார், ‘நீங்கள் ஹிண்டுவில் இருந்து ரீலீவ் ஆகிவிட்டீர்களா?’ அவன் பதில் சொல்வதற்கு முன்பு பண்ருட்டியார் முந்திக் கொண்டார் இப்படி: ‘‘We are relieved from him”.
இப்படித்தான் அவன் நிருபராக செய்தி எழுதிய காலத்தில் சங்கடப்பட்டவர்கள், அவன் பதவியைத் துறந்த பிறகு நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள். அந்த அளவுக்கு அவன் பலருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்தான். அவன் தொழில் முறையில் மோதியது தனி மனிதர்களுடன் அல்ல, சில பதவி பொறுப்புகளுடன். ஆனாலும் தொழிலை மாற்றிக் கொண்ட பிறகு தூதரகம் சமூக உறவு சார்ந்தது என்பதனால் பழைய விரோதிகளும் நண்பர்களானார்கள்.
Leave a comment
Upload