அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சதாசிவத்தை பால்கனியில்நின்றிருந்த ஆவுடையப்பன் மேலே வருமாறு சைகை செய்தார்.
ஆவுடையப்பன் வீட்டு ஓனர். சதாசிவம் வாடகைக்கு இருப்பவர். பாவம் ஒன்னாந்தேதியானால் டாண்ணென்று வாடகைப் பணத்தை அனுப்புபவர்.
“அடுத்த மாசத்திலிருந்து வாடகை ரெண்டாயிரம் ரூபாஉயர்த்தியிருக்கேன்.”
‘பக்’கென அதிர்ந்தார் சதாசிவம்.
“சார்… ரூம் ரொம்ப சின்னதா இருக்கு. எப்படியோஅட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்போறேன் சார்… இந்த நிலைமைல எப்படி சார் வாடகையைக் கூட்டித்தருவது..?” என இழுத்தார் சதாசிவம்.
“சார்…. இந்த வீடு உங்களுக்குப் போதலைன்னா வேறு ஒரு பெரிய வீடாப்பார்த்து போயிடுங்க.”
“இந்த காலத்துல வீடு கிடைப்பதே கஷ்டமா இருக்கே சார்…”
“அப்ப வாடகையை உயர்த்திக் கொடுங்க.”
கறாராகச் சொன்ன ஆவுடையப்பனை பரிதாபமாய்ப் பார்த்தார் சதாசிவம்.
ஆவுடையப்பன் அலுவலகம்.
அலுவலகம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
மேனேஜர் மனோஜ் அறைக்குள் நுழைந்தார்ஆவுடையப்பன்.
“வாங்க மிஸ்டர் ஆவுடையப்பன். உட்காருங்க. என்ன விஷயம்?” எனவினவினார் மனோஜ்.
“சார்… நான் பத்து ஆண்டுகளா இந்த கம்பெனியில ஒர்க் பண்றேன். இதுவரை ஒரு ப்ரமோஷனோ, ஸ்பெஷல் இன்கிரிமென்ட்டோ கிடைக்கலை….”
“இதோ பாருங்க சார்… வேகன்சி கிரியேட் ஆனால்தான் ப்ரமோஷனேவரும். நம்ம ஆபீஸ்ல பெரும்பாலும் யங் ஸ்டாஃப்தான். எதையாவது சாதித்துக்காட்டறவங்களுக்குத்தான் ஸ்பெஷல் இன்கிரிமென்ட் கிடைக்கும். இதெல்லாம்உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்கள்தானே..?”
“லுக், மிஸ்டர் ஆவுடையப்பன். சம்பளம் பத்தலைன்னா இதைவிட அதிகசம்பளம் கொடுக்கிற கம்பெனியா பார்த்து போயிடுங்க. எனக்கொண்ணும்ஆட்சேபணை இல்லை. ஏன்னா, எம்.டி. கிளியரா சொல்லிட்டார் யாராவதுவேலையை ரிசைன் பண்ணா அவங்களை உடனே ரிலீவ் பண்ணிடுங்கன்னு.”
அதிர்ந்தார் ஆவுடையப்பன்.
அவருக்குத் தெரியும் வேலை கிடைப்பது இந்த காலத்தில் லேசானகாரியமில்லை என்று.
மறுநாள்.
சதாசிவம் அலுவலகம் புறப்படும் வேளையில்....
“சார்… வாடகையை உயர்த்திக் கொடுக்க வேண்டாம். பழையவாடகையில தொடரலாம்!” என்றார் ஆவுடையப்பன்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றார் சதாசிவம், மகிழ்ச்சியும், ஆச்சரியமுமாக.
ஏன் இந்த மனமாற்றம் என்பது அடுத்த வாரம் வரை தெரியவில்லை சதாசிவத்திற்கு.
ஒரு உறவினரின் கல்யாணத்தில் மனோஜை பார்க்கும் வரை.
“என்ன சதா… என்ன சொல்றார் உன் வீட்டு ஓனர் ஆவுடையப்பன் ?”
“வாடகையை உயர்த்தப் போவதில்லைன்னு சொல்லிட்டார். ஆனா ஏன்னு தான் தெரியலை”
“அவர் வாடகை உயர்த்தப் போறதா நீ என்னிடம் சொல்லியிருந்தேஇல்லையா ? அதான் ஆவுடையப்பனுக்கு ஜாப் மார்க்கெட் பத்தி சொன்னேன். மனுஷன் மனம் மாறிட்டார்" என்று சிரித்தார் வீட்டு ஓனர் ஆவுடையப்பனின் மேனேஜர் மனோஜ்.
Leave a comment
Upload