தொடர்கள்
கற்பனை
ஐபிஎல் :- சிந்தனையும் சித்திரமும் -தேவா

சாம்பியன் ட்ராஃபி நமக்கு தான் என்று ஆரூட சித்திரம் வரைந்த தேவா ஐபிஎல்லுக்கு தயாராகிவிட்டார் கலாய்க்க. இதோ அது.

20250219233115367.jpg

கேஷுவல் டிவி சேனல் வாரா வாரம் கருத்து கேட்டல் என்று ஒரு ப்ரோக்ராம் ஒளிபரப்பும்.

அன்றைய ஒளிபரப்பில், ''ஐபிஎல் - கருத்து கேட்டல்'' என்ற தலைப்பில் பேசுவதற்கு சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். நெறியாளர், “இன்றைய பரபரப்பான சூழலில், உலகத்தையே மாலை வேளைகளில் கட்டிப்போடும் ஒரு மாயக்கருவி உண்டென்றால் அது ஐபிஎல் தான். ஐபிஎல் குறித்த உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்று துவக்கி வைத்தார்.

முதலில் ஒரு எம் பி பி எஸ் டாக்டர்., “வயது வித்தியாசம் பாராமல் மிகை அழுத்தம் ஏற்பட்டு பலர் என் க்ளினிக்கிற்கு வருகிறார்கள்.. கடைசி நான்கு பந்துகளில் 21 ரன்கள் தேவை போன்ற ஸ்லைடு திரும்பத்திரும்ப பார்த்து, ஆதரவான அணிமேல் அதிக கவனம் வைத்து BP அதிகப்படுத்திக்கொண்டு , முடிவு சாதகமோ பாதகமோ, மறுநாள் காலை வந்து ஸ்ட்ரெஸ்சிலிருந்து (from stress) ரிலாக்ஸ் ஆக மாத்திரை கேட்கிறார்கள், என்றார் .

அடுத்து பேசிய ஆர்த்தோ டாக்டர், இதே கதைதான் என் கிளினிக்கிலும். ஏகப்பட்ட வயதானவர்கள், இடிச்ச புளி போல் உட்கார்ந்து நான்கைந்து மணிநேரம் சலனமின்றி ஐபிஎல் பார்த்துவிட்டு, மூட்டு வலி, கால்கள் இறுகப்பிடிக்கின்றன, யூரின் அடக்கியதால் அடிவயிற்றுவலி போன்ற கம்பளைண்ட் சொல்லி ஓ.பி செக்ஷனை நிறப்பி விடுகிறார்கள் என்றார்.

கண் டாக்டர் ஒருவரோ, உற்றுநோக்கி சிவந்த கண்களுக்கு ஐ டிராப்ஸ் கொடுத்தவண்ணம் இருக்கிறேன் என்றார்.

கம்பெனி முதலாளி ஒருவர், ''தினமும் என் ஊழியர்களுக்கு காலை ஒரு மணி நேரம் பர்மிஷன் கொடுத்து விட்டேன். இரவு 12 வரை ஐபிஎல் பார்த்துவிட்டு, காலை எழுந்திருக்க முடியவில்லை என ஒரு சேரக்கூறுகின்றனர். பெர்மிஷன் தரலைன்னா லீவு போட்டுடறாங்க"" என்று அங்கலாய்த்தார்.

நெறியாளர் குறுக்கிட்டு, வேலைக்கு இடையூறு தரும் கேளிக்கை கூடாது என்றார். அனைவரும் ஆமோதித்தனர்.

ஒருவர் தன் கருத்தில், 'ஐபிஎல்லால், சனி ஞாயிறு லீவு நாட்களில், மாலை முதல் , எனக்கும் என் மனைவிக்கும் சண்டையே வருவதில்லை. ஏனென்றால், நாலு மணியிலிருந்து இருவரும் டிவி முன் பேசாபொம்மைகள் ஆயிடறோமே'', என்றார்.

மாலை ஏழு மணியிலிருந்து, பதினோரு மணி வரை, எனக்கு வேலையே இருப்பதில்லை, ரோடில் டிராபிக் இருந்ததா தானே என்று குஷியாகச் சொன்னார் டிராபிக் கான்ஸ்டபிள்.

விளையாட்டு பொருள் விற்பவர்கள், கலர் கலரா பனியன் விற்பவர்கள், பெயிண்டர்கள் ஆகியோர், தங்கள் தொழில் அட்டகாசமா இருக்கு, ஐபிஎல் நாட்களில் , என்றனர்.

ஒரு பெண்மணி கூறினார் : தன்கணவர், தூக்கத்தில் எழுந்து ஆறு ஆறு என்று கத்தியவண்ணம் இருந்தார்,. மறுநாள் ஆற்றுக்கு குளிக்க அழைத்துச் சென்றேன். பலனில்லை. என் கோபத்தை தாங்கமுடியாமல் தான், அமைதியா இருக்கவேண்டி, ‘’என்னை ஆறு ஆறு’’ என்கிறாரோ என்றெண்ணி, நான்கு நாள் கோபப்படாமல் இருந்தேன். பலனில்லை. திடீரென்று ஒரு சமயோசிதம். ரிப்பேர் ஆயிருந்த டிவியை சரி செய்தேன் அவர் ஆறு எனக்கேட்டு, ஒரு வீரர் ஐபிஎல்லில் ஆறு அடித்ததும், சரியாகிவிட்டார். அன்று இரவிலிருந்து ஆறுதல்.

மற்றொரு நிறுவன அதிகாரி நொந்து சொன்னார் : மாலை ஐந்து மணி ஆனா போதும். ஒவ்வொருத்தரா, ஏதாவது காரணம் சொல்லி ஜுட் அடிச்சிடறாங்க. பலர் சொல்லாமலேயே வேலையை பாதியில் வச்சுட்டு ஓடிடறாங்க.

நெறியாளர், தன் தொழிலை நிறுத்தி கேளிக்கைக்கு ஓடக்கூடாது என்றார். அனைவரும் ஆமோதித்தனர்.

நெறியாளர், திடீரென்று, இன்னும் நாலு பேர் கருத்து சொல்ல காத்திருக்கீங்கன்னு தெரியுது. ஆனா இந்த நிகழ்ச்சியை இப்போதே முடிக்கறேன். அந்த நாலு பேருக்கும் அடுத்த கருத்து கேட்டலில் சான்ஸ் உண்டு. நான் இன்றைய ஐபிஎல்லுக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன். கிளம்பறேன்னு, போட்டாரே ஒரு போடு!