தொடர்கள்
தொடர்கள்
பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி...! 2. புதுவை ரா. ரஜனி ஓவியங்கள்: மணி ஸ்ரீகாந்தன்

20250221002148647.jpeg

சுப்புசாமி வாழ்க்கையில் சில பத்திரிகைகளைப் பார்த்ததுண்டு. அதில் குறிப்பிடும்படியாகச் சொல்வதென்றால் -

அவருக்கும் கோமுவுக்கும் நடந்த சுப விவாஹப் பத்திரிகை, கல்யாணம் நடந்த சில மாதங்களில் கோமுவின் தோப்பனார்க்கு அடித்த கருமாதிப் பத்திரிகை, ஏதோ ஒரு பாடாவதி சங்கம் அனுப்பிவிட்டிருந்த உறுப்பினர் பத்திரிகை, பிறர் திருமணப் பத்திரிகைகள் முதலியன.

பின்னாளில் பாட்டிக்கு வரும் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், Reader's Digest உட்பட பல அயல்தேச பத்திரிகைகளைக் கண்களால் பார்த்திருக்கிறார். அவ்வளவுதான்...!

ஒரு தடவை அழகி சோபியா லாரன் படம் வந்த இதழை திருப்பித் திருப்பி தாத்தா பார்த்ததைப் பாட்டி பார்த்ததால், பிறகு தொட அனுமதி இல்லை.

கிழவி என்னதான் படிக்கிறாள்? - என்று இரண்டு மூன்று வரிகளை வாசித்துப் பார்த்தார். இங்கிலீஷ் கொட்டாவிதான் வந்தது!

*****

குண்டு ராஜா தாத்தாவிடம் ஏதோ ரகசியம் சொல்வது போல் கூட்டிக்கொண்டு சிறிய டிபன் கடைக்கு அழைத்துச் சென்றான். சுடச்சுட இரண்டு மசால்வடைகளும் சர்க்கரை போடாமல் ஒரு காப்பியும் வாங்கித் தந்தான்.

"கொஞ்சம் முதலீடு போட்டா போதும் தாத்தா. நீங்களே அதிபர், நீங்களே எடிட்டர். எனக்கு பத்திரிக்கை நடத்துற சூட்சுமம் அனைத்தும் தெரியும் கவலையே படாதீங்க...!"

"இப்போ தான்டா கவலையே ஆரம்பிக்குது...!" என்றார் தாத்தா.

"எந்தத் தொழிலை ஆரம்பிக்கவும் ஒருத்தன் ஃப்ரீயா ஐடியா கொடுத்தா மட்டம் தட்டக்கூடாது. அதுல என்ன இருக்குன்னு அறிவுபூர்வமா ஆராய்ச்சி செஞ்சீங்கன்னா, லட்ச லட்சமா பணத்தைப் புரட்டலாம்...!"

அவன் சொன்னதைக் கேட்டதும் ஆனந்தத்தில் அவர் வயிறு புரட்டத் தொடங்கியது.

"என்னடா சொல்ற?"

"ஆமாம், தாத்தா அந்தக் கிழவிகிட்ட நீங்க என்ன சுகத்தைக் கண்டீங்க? பாட்டியை கிழவின்னு சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... என் மனசு வலிக்குது தாத்தா...!"

அங்கவஸ்திர சைஸில் இருந்த தனது கைக்குட்டையை எடுத்து மூக்கு சிந்தி கேவினான்.

தாத்தா அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

"உன்னை பல தடவை மோசமானவனா நினைச்சிருக்கேன்டா. ஆனா, இப்போதான் உன்னோட உண்மையான அன்பு தெரியுது...!"

இனிப்பு ஜீராவில் விழுந்த பல்லியைப்போல தாத்தாவைப் பார்த்தான் குண்டு.

"ஒரு லட்சம் தேத்துங்க. அடுத்த வாரமே ஒரு சின்ன பிரிண்டிங் மெஷின் செகண்ட் ஹேண்டிலே வாங்கி நாம வேலையை ஆரம்பிச்சுடலாம்...!"

"ஏன்டா ஏதோ கிளுகிளு கதை என்கிறாய். புத்தகம் என்கிறாய். புரியறமாதிரி ஒழுங்கா சொல்லுடா...!"

"இனி படமே போட்டு காண்பித்து விட வேண்டும்' என்று முடிவு செய்தான் குண்டு ராஜா.

சுற்று முற்றும் பார்த்துவிட்டு, கையில் சுருட்டி வைத்திருந்த அந்த அட்டைப்பட அழகிகளின் கத்திரி போடாத ஒய்யாரங்களைக் காட்ட, சுப்புசாமி அதிர்ந்தே போனார்!

"கோமு அடிக்கடி என் நண்பர்கள் சகவாசங்கள் சரியில்லைன்னு சொல்லுவா. அதை ப்ரூஃப் செஞ்சுட்டயே குண்டு...!"

"உடுங்க. நீங்கதான் பாட்டி பத்திரிகை ஆசிரியர் பதவி வாங்கிட்டாங்கனு புலம்புனிங்க. நான் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரேன். என் நண்பரால் பத்திரிகையை நடத்த முடியாத ஃபைனான்ஸ் பிரச்சினை. நீங்க முதல் போடுறீங்க, முதலாளி ஆகுறீங்க. ஆசிரியரும் நீங்களே... வர புதன்கிழமை நல்ல நாள். ஆசிரியர் டேபிள், சேர் ரெடியா இருக்கு. நீங்களும் எஸ்.ஏ.பி., சாவி, வலம்புரிஜான், மணியன் மாதிரி உங்க பத்திரிகையிலே கலக்கலாம்...!"

"சரிடா, ஆனா அட்டைப்படமே ஒரு மாதிரி இருக்கே...?"

"அதெல்லாம் கவர்ச்சியா போட்டாதான் புத்தகம் நல்லா ஓடும்...அதுவும் நாம சத்தம் இல்லாம வித்து புரட்சி பண்ணலாம். வேணாம்னா சொல்லுங்க, நாங்க வேற பார்ட்டியைப் பாக்குறோம்...!"

"சரி ரெண்டு நாள் டயம் கொடு. பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்...!"

"சபாஷ்...இப்போதான் நீங்க தில்லான மனுஷன்...!" என்றான் குண்டு.

*****

படகுக் கார் உள்ளே நுழைகிறது. கூர்க்கா சல்யூட் அடித்து காரின் கதவைத் திறக்க சுப்புசாமி இறங்குகிறார். அலுவலகத்தினுள் நுழைய, எல்லோரும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து வணக்கம் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து மெல்லப் புன்னகைத்து, கைகளை உயர்த்தி அமர சைகையால் தெரிவிக்கிறார். தனது குளு குளு அறைக்குச் சென்று பெரிய குஷன் நாற்காலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றுகிறார்.

படு ஸ்டைலாக ஆங்கிலோ இந்திய பெண் காரியதரிசி சுப்புசாமி பார்வையிட அன்றைய கோப்புகளை பவ்யமாக வைக்கிறாள்.

ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துக் காட்டுகிறாள். அவர் கையெழுத்து போட்டு களைப்படைகிறார். குல்லா அணிந்த ஆபீஸ் பையன் கதவைத் தட்டி விட்டு உள்ளே வருகிறான். அவன் கையில் சுடச்சுட கிரீன் டீ.

ஆவி பறக்கிறது!

அதனை வாங்கி இரண்டு மிடறுகள் அருந்திவிட்டு மெல்லக் கண்களை மூடி சாய்ந்து கொள்கிறார் எடிட்டர் சுப்புசாமி.

"ஐயா ஐயா...!" என்று யாரோ கூப்பிடுகிறார்கள். கண்கள் விழிக்க எதிரில் எர்சம்மா மாப் ஸ்டிக்கோடு காத்திருக்கிறாள்.

"ஐயா, கனவு கினவு கண்டீங்களோ...? கொஞ்சம் எழுந்துக்கிறீங்களா? அம்மா வரும் நேரம். நான் உடனே மாப் அடிச்சுட்டு கிளம்ப வேண்டியிருக்கு...!" என்றாள் எர்சம்மா.

(அட்டகாசம் தொடரும்...)