கலியன் தனது சொந்த ஊரான சீர்காழிக்கு வந்திருந்தான். அவனுடைய தகப்பனார் அருகிலுள்ளதிருநகரி பெருமாள் கோவிலில் அர்ச்சகராகப் பணி புரிபவர். திருமங்கை மன்னனின் அவதாரத் தலமானஅங்கு பல வருடங்களாக வேலை பார்க்கும் அவர் மகனுக்கு அந்த ஆழ்வாரின் இயற்பெயரையேவைத்திருந்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு வரை சீர்காழி மெட்ரிக் பள்ளியில் படித்த அவனுக்குச் சிறுவயதிலிருந்தேஓவியத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்தது. ப்ளஸ் டூ முடித்தவுடன் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் சேர்ந்து கொண்டான். ஓவியக்கலையில் பட்டப்படிப்பு முடித்தும் சரியான வேலை எதுவும்கிடைக்காமல் சில காலம் அலைந்து திரிந்தவன், சென்னையில் நண்பர்களுடன் ‘கவிதா ஆர்ட்ஸை’த்தொடங்கினான்.
திருநகரி ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. ஒன்பதாம்நாளன்று இரவு நடைபெறும் வைபவத்தில் கலியன் தவறாமல் கலந்து கொள்வது வழக்கம்.
கோவிலின் உள்ளே தென்கலை நாமம் வரையப்பட்டிருந்த மண்டபத்தில் குதிரை வாகனத்தைபுறப்பாட்டுக்காகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த கலியனிடம் ஓர் இளம் பெண் “ராத்திரிஏதோ விசேஷம்னு சொன்னாளே.. எப்ப ஆரம்பிக்கும்..“ என்று கேட்டாள். ஆறரை அடி உசரத்தில் கம்பீரமாகஇருந்தவள், சந்தன நிறத்தில் பருத்திச் சேலையும், ரத்தச் சிவப்பில் மேலாடையும் அணிந்திருந்தாள்.
“வேடுபறி உற்சவமா.. பதினோரு மணி சுமாருக்கு தொடங்கும்..” என்றான். அவளது அதீத உயரம்கலியனை ஈர்த்தது.
“அவ்ளோ லேட்டாகுமா.. சீக்கிரம் முடிஞ்சுடும்னு நினைச்சுண்டு வந்தேன்..” என்றாள். “அர்ச்சனைபண்ணனும்.. கூட்டமா இருக்கு..”
“எங்க அப்பாதான் பெருமாள் சன்னிதியில பட்டரா இருக்கார்.. வாங்கோ.. அழைச்சுண்டு போறேன்..” பார்த்த மாத்திரத்திலேயே அவள் கலியனைக் கவர்ந்து விட்டாள். அந்தப் பிரமிப்பினால் தன்னிச்சையாக உதவநினைத்தான் “அர்ச்சனை பண்றதுக்கு உங்க கோத்ரம், நட்சத்திரம் எல்லாம் கேட்பார்.. முதல்ல பேருசொல்லுங்கோ..”
கோபுரச் சிற்பத்தை ரசித்தபடியே “வித்யா அய்யர்..” என்றாள். “நீங்களும் இந்தக் கோவில்ல வேலைபார்க்கறேளா..”
“இல்லே.. எல்லா தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் படங்கள் வரைஞ்சு கொடுக்கறது என் தொழில்.. பேருகலியன்..”
மூலஸ்தானத்தில் கூட்டத்தை விலக்கி வித்யாவை அழைத்துச் சென்று தந்தையிடம் சொல்லிவிட்டு,“நிதானமா சேவிச்சுட்டு வாங்கோ.. வெளியில காத்துண்டிருக்கேன்..” என்றான்.
தேவஸ்தான அலுவலகத்தில் பங்குனி உத்திரத் திருவிழா நோட்டீஸையும் பென்சிலையும் எடுத்துக்கொண்ட கலியன், அம்ருதவல்லி தாயார் சன்னிதிக்கு முன்பாக அமர்ந்து கொண்டான். தாளின் பின்புறம்வித்யா அய்யரின் நெடிய உருவத்தை மனக்கண்ணிலிருந்து வரைய ஆரம்பித்தான். தூணில் இருந்தமஞ்சள்காப்பை எடுத்து அவளது புடவைக்கும் குங்குமத்தை ரவிக்கைக்கும் வண்ணமாகத் தீட்டினான். வெளியே வந்தவுடன் ஓவியத்தைக் கொடுத்து அவளைக் கவர வேண்டும் என்று வெகுநேரம் காத்திருந்தான்.
வித்யா அய்யர் திரும்பி வரவேயில்லை.
“உடனே பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்க.. அதோட தலைவர் ஜமீன்தார் பரம்பரை.. ஊர்ல பெரிய மளிகைக்கடை முதலாளி வணிகர் சங்கத்துல முக்கியப் புள்ளி.. கோயில் குருக்களுக்கும் செல்வாக்கு அதிகம். எங்ககிராமத்துல அந்த மூணு பேர் வெச்சதுதான் சட்டம். எங்க அம்மா தெரியாம அவங்க குடியிருக்கற ஏரியாவுலசெருப்பு காலோட நுழைஞ்சதை பெரியக் குத்தமா ஆக்கி தண்டனை குடுத்தாங்க..”
தெலுங்கானா அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்த வினோத்குமார் சாலையைப் பார்த்தான். ‘கோட்டி’ பகுதியில் வண்ணமயமான ராக்கிகள் விற்பனை அன்று ரக்ஷா பந்தன் பண்டிகையைநினைவூட்டியது. உஸ்மானியா மருத்துவமனை வழியாக மிருகக்காட்சி சாலையை அடைந்ததும்பஸ்ஸிலிருந்து இறங்கினான்.
அவனுக்கு ஹைதராபாத் ஜூவில் சில விலங்குகளை நேரில் பார்த்து வரைய வேண்டியிருந்தது. பல்வேறுஉயிரினங்களைக் கடந்து வெள்ளைப் புலிகள் உலாவும் கூண்டருகே வந்து சேர்ந்தான்.
டிராயிங் பலகையை வசதியான இடத்தில் நிலைநிறுத்தினான். ஒரு புலி மர நிழலில் படுத்தபடி காதுமடல்களை உயர்த்தி ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தது. அதன் உருவத்தை முதலில் ஸ்கெட்ச் மாதிரிபோட்டுக் கொண்டான்.
பிற்பகலில் பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. ஜைன இளைஞர்கள் கையில் ராக்கிகளுடனும், யுவதிகள் புத்தாடைகளிலும் உற்சாகக் கும்பலாக வலம் வந்தனர். அந்த வெள்ளைத் தோல்களுக்கு நடுவில்ஒரு கருப்பழகி வினோத்தின் கவனத்தைக் கலைத்தாள்.
அவளைப் பார்த்ததும் வரைந்து கொண்டிருந்த புலியின் ஓவியம் தடைப்பட்டது. அந்தப் பெண் தாராரெட்டி. அன்று அருங்காட்சியகத்தில் திடீரென்று காணாமல் போனவள். அவளுடன் பேசுவதற்கு ஏக்கத்தோடுகாத்திருந்தவன் தாராவை நோக்கிச் சென்றான்.
“ஏமண்டி.. பாக உன்னாரா..” என்று குசலம் விசாரித்தான். “ஸலார் ஜங் மியூஸியம்.. ஆர்ட் கேலரியிலபார்த்தோமே..”
“மர்ச்சி போயானு..” என்று மறதியைச் சாக்காகச் சொல்லி செயற்கையாகப் புன்னகைத்தாள்.
“அன்னிக்கி உங்க பேரையும் மொபைல் நம்பரையும் ஆர்டிஸ்டிக்கா வரைஞ்சு காண்பிச்சேனே..” என்றுநினைவூட்டினான் வினோத். “கல்சுரல் எக்ஸ்சேஞ்ச் ப்ரோக்ராமுக்காக வந்தேன்னு சொன்னீங்க.. இன்னும்நடக்குதா..”
“நேத்து தான் முடிஞ்சுது.. ராத்திரி ‘சார்மினார்’ல கிளம்பறேன்..”
“சில அனிமல்ஸை நேர பார்த்து வரையறதுக்காக இங்க வந்தேன்.. எங்க வைசிய சங்கம் காலண்டர்லஒவ்வொரு மாசத்துக்கும் ஒரு படம் போட வேண்டியிருக்கு..”
“நீங்க பிஸினஸ் கம்யூனிட்டியா..” என்றாள் தாரா. சுடிதார் அணிந்த கால்களை உதறிக் கொண்டாள்.கைவிரல்களை இறுக்க மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள்.
“ஆமா.. நான் மட்டும் டிராயிங் லைன்ல வந்துட்டேன்.. நீங்க..”
“பெருமையா சொல்லிக்கறதுக்கு ஒண்ணுமில்ல..” என்றாள் விரக்தியுடன்.
“ஒரு நிமிஷம்.. புலியோட ஃபுல் வியூ இப்பதான் தெரியுது.. போட்டோ எடுத்துட்டு வரேன்..“ என்ற வினோத்கூண்டைச் சுற்றியுள்ள வலையின் இடைவெளியில் செல்போன் கேமராவை ஜூம் செய்தான். வேறுகோணத்திற்காகத் திருப்ப, அது வழுக்கிக் கொண்டு உள்ளே விழுந்தது. வேலிக்குள் கையை நீட்டிமொபைலை எடுக்க முயற்சித்தான்.
அப்போது யாரோ கராச்சி பிஸ்கட்டுகளை கூண்டுக்குள் வீச, அவை புலியின் மேல் விழுந்து விட, அதுஆக்ரோஷமாகத் திரும்பி வேகமாக வந்து வினோத்தின் கரத்தில் முன்னங்காலைப் பதித்தது. அவன்பதற்றத்துடன் வலையில் கன்னத்தை அழுத்தி கையை எடுக்க முயற்சிக்க, துருப்பிடித்த கம்பிகள் பெயர்ந்துஅவனது தலை கூண்டுக்குள் நுழைந்தது, உயிர் பயத்தால் தெலுங்கில் அபயக்குரல் எழுப்பினான்.
தாரா ரெட்டி மௌனமாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
“செருப்பை தலைமேல வெச்சுகிட்டு அம்மா கிராமத்தை மூணு தடவை வெறுங்காலோட சுத்தி வரணும்னுபஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லிட்டாங்க.. அவங்களை எதிர்த்துப் பேசற தைரியம் யாருக்கும் இல்லை. போலீசும் அவங்க பக்கம்.. ‘ஒரு வாட்டி மன்னிச்சு விட்டுடுங்கய்யா’ன்னு அப்பா கெஞ்சிப் பாத்தாரு.. அவங்கமசியலை.. எங்கம்மா கத்திரி வெய்யில்ல மதியம் நடக்க ஆரம்பிச்சாங்க..”
தலைநீர் அருவி என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஹொகனேக்கல் நீர்வீழ்ச்சிக்குகலியன் பழையக் கல்லூரித் தோழர்களுடன் சென்றிருந்தான். அங்கு காவிரி ஆற்றில் பரிசல் சவாரியை ஒருதடவையாவது அனுபவிக்க வேண்டுமென்பது அவனுடைய நெடுநாள் விருப்பம்.
உயரமான பாறைகளின் மீது தொலைநோக்கிகளை நிறுவிக் கொண்டிருந்த மாணவர்களை விசாரித்தான். தாங்கள் வானவியல் பயில்பவர்கள் என்றும், அன்றிரவு நிகழவிருக்கும் சந்திர கிரகணம் பற்றி ஆராய்ச்சிசெய்யவிருப்பதாகக் கூறினர். பிறகு நண்பர்களுடன் பரிசல்கள் புறப்படும் துறைக்கு விரைந்தான் கலியன்.
நேர்த்தியாக சேலையுடுத்திய உயரமான பெண் முன்னே போய்க் கொண்டிருந்தாள். எங்கேயோ சந்தித்தஉருவமாகத் தோன்றியது. வேகமாகக் கடந்து சென்று பார்த்தான். அவன் எதிர்பார்த்த வித்யா அய்யரே தான். அன்று கோவிலுக்கு வந்தவள்.
“ஹலோ.. எப்படியிருக்கேள்..” என்றான். “ஞாபகமில்லையா.. அன்னிக்கி திருநகரியில ராத்திரி உற்சவம்பத்தி விசாரிச்சீங்களே.. அர்ச்சனை பண்ணிட்டு வருவீங்கன்னு காத்துண்டிருந்தேன்.. மாயமாமறைஞ்சுட்டீங்க..”
“சாமி பார்த்தேன்.. போயிட்டேன்..” என்றாள் எந்தச் சலனமுமின்றி.
“உங்க உருவத்தை அழகா வரைஞ்சு வெச்சிருந்தேன்...”
“அப்படியா..” வித்யா புடவை நுனியைச் சுருட்டுவதும் விடுவிப்பதுமாக ஏதோவொரு பதற்றத்தில்இருந்தாள்.
“அருவியில குளிக்க வந்தேளா..”.
“இங்க அடிக்கடி வருவேன்.. பக்கத்துலதான் எங்க ஊர்..” என்றாள். தோழர்கள் அழைக்கவே கலியன்அவளைப் பிரிய மனமின்றி திரும்பி வந்தான். எல்லோரும் மீன் உணவுக் கடைகளைத் தாண்டி வழுக்கும்தரைகளில் நடந்து சென்றனர். மஸாஜ் செய்யும் இடத்தில் மூலிகைத் தைல வாசனை வீசியது.
“நாலு பேர் மட்டும் வாங்க..” என்றார் பரிசலோட்டி கையில் ஒற்றைத் துடுப்புடன். கலியனும் சகாக்களும்ஏறிக்கொள்ள அது சுழன்றபடி புறப்பட்டது.
“கர்நாடகா தமிழ்நாடு ரெண்டையும் பிரிக்கற எல்லையில இருக்கோம்.. இங்க தண்ணி அம்பதடி ஆழம்..”என்றார் ஓட்டுநர். பரிசலின் மூங்கில் விளிம்பைப் பற்றிக்கொண்டு, வித்யா அய்யர் எங்கேயாவதுதென்படுகிறாளா என்று பார்த்தான் கலியன். நண்பர்கள் சமமான இடைவெளியில் அமர்ந்திருந்தனர். .
“இப்ப ஓடத்தைச் சுழட்ட போறேன்.. செல்போனை கெட்டியா பிடிச்சுக்கோங்க.. கைதவறி ஆத்துலவிழுந்துட போகுது..” என்றார் பரிசல்காரர் நீரைத் தள்ளியபடி.
அவர்களுக்கு அருகில் இன்னொரு கலம் வட்டமடித்தவாறே வந்தது. அதில் வித்யாவைக் கண்டதும்கலியனுக்கு உற்சாகம் பீறிட்டது. “ஹாய்” என்றான். அவள் திரும்பி வெற்றுப் பார்வை பார்த்தாள். அவளதுகம்பீரமான உயரத்தை ரசித்துக் கொண்டே, கையிலிருந்த நேந்திரங்காய் வறுவலை நீட்டினான். வித்யாவேண்டாமென்று மறுக்க, “கொஞ்சம் சாப்ட்டு பாருங்கோ..” என்று வற்புறுத்தினான்.
தண்ணீரின் வேகமும் பரிசலின் சுழலும் அதிகமான தருணத்தில் கலியன் எழுந்தவாக்கில் சிப்ஸ்பாக்கெட்டை அவளிடம் கொடுத்தான். அப்போது நிலை தடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தான். அவன்தலைகுப்புற விழுந்த இடத்தில் பொன்னி நதி ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருந்தது. பரிசலோட்டியும்நண்பர்களும் ‘ஐய்யய்யோ’ என்று அலறினர். கலியன் ஆற்று நீரில் மூழ்கத் தொடங்கினான்.
வித்யா சிப்ஸைச் சுவைத்துக் கொண்டிருக்க, அவளது பரிசல் நகர்ந்து சென்றது .
“அன்னிக்கி பயங்கரமா வெப்ப அலை வீசிட்டிருந்தது.. நாப்பத்தோரு டிகிரி.. அம்மா கஷ்டப்பட்டுமுள்ளுலயும் கல்லுலயும் நடந்து கிராமத்தை மூணு முறை சுத்தி வந்து ஊர் எல்லையில மயங்கிவிழுந்துட்டாங்க.. தண்ணி தெளிச்சி பார்த்தோம்.. எந்திரிக்கலை.. வைத்தியர் வந்து நாடி பார்த்துட்டுஅவங்க செத்துப் போயிட்டதா சொல்லிட்டாரு. ஸன் ஸ்ட்ரோக் மரணம்னு சொல்லி கேஸை மூடிமறைச்சுட்டாங்க..”
(தொடரும்)
Leave a comment
Upload