தொடர்கள்
பொது
என் மை சொல்லும் நன்றி!– என் குமார்

20250221164624176.jpeg

இதை நீளமான கடிதமாக்கத்தான் நெஞ்சம் விரும்புகிறது. ஆனால், நெகிழ்ச்சி இதைப் பாதியிலேயே நிறுத்திவிடும் என்று தோன்றுகிறது.

வாசிக்கும் ஆசை கொண்ட ஒருவனை – அவ்வப்போது எழுதி எழுதி, எழுதியதைத் தன் மேசையின் உள்ளே அடைகாத்து வைத்த ஒருவனை – வாசக மேடைக்கு அழைத்து… அல்ல…இழுத்து வந்த விகடகவி.

‘தன் வரைக்கும் போதும் தன் எழுத்து’ என்றிருந்தவனை…

உலகத் தமிழ் வாசகர்களிடம் கொண்டுசெல்லவேண்டுமென்ற மனம் எப்படி வரும்?

ஹாங்காங் ராம் இல்லையெனில், ‘காலமே போதி மரம்’ இல்லை.

என் மனவெளியில் அந்த இடம் வெற்றிடமாகவே இருந்திருக்கும். விகடகவியை எனக்கு அறிமுகம் செய்து, எழுத வைத்து, 15 கட்டுரைகள் வாரா வாரம் வந்தபோது, பெற்ற பின்னூட்டங்கள்… அகநி வெளியீடு அதைப் புத்தகமாக்கி, இதோ இந்த கணம் வரை பெற்றுக்கொண்டிருக்கும் வாழ்த்துகள்… வியப்புகள்… விற்பனையில் பெருவரவேற்பு,

2024 – ஆம் ஆண்டுக்கான, ‘சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான’ படைப்பு இலக்கிய விருது… அத்தனைக்கும் காரணம், விகடகவி. அதன் ஆதார நாதம், ஹாங்காங் ராம்.

விகடகவியில், குரல் பதிவுத் தொடர்களாக வந்த…

‘பட்டாப்பூச்சி பேசுது’ – 50 வாரங்கள்,

‘காதல் காதலைக் காதலிக்கிறது’ – 6 வாரங்கள்,

‘என்றான் அவன்…’ 16 – வாரங்கள்,

‘சொல்லணும்னு தோணுச்சு…’ – 10 வாரங்கள்.

‘தப்புத் தப்பாய் ஒரு லவ் லெட்டர்…’ சிறுகதை (எழுத்திலும், குரலிலும்), ‘எல்லாமும் ஒன்றுதான்!’ (ராஜா சார் பற்றிய கட்டுரை),

‘தேவதைகளுக்குப் பெயர் உண்டு…’ – 3 வாரக் கட்டுரைகள்,

‘இயேசு வாசனை…’ (கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை)

… இத்தனையும் என் குரலும், என் எழுத்தும் சிந்தியவையா என்று பிரமித்துப் பார்க்கிறேன். ஆக்கம் நிகழ ஊக்கம் தானே காரணம்!

20250221165202384.jpeg

“இந்த எழுத்து இவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. எழுத்தாளர்களின் பொற்காலம் முடிந்துவிட்டதாக நினைக்கும் காலகட்டத்தில், அந்த இடத்தை நிரப்பக் கூடியவராக நான் குமாரைப் பார்க்கிறேன். எழுத்து அற்புதமான விஷயம். எழுதறதை விடாதீங்க, குமார்.” – என்று எல்லோர் முன்னிலையிலும் மதன் சார் வாழ்த்தியபோது…

“ you are a good editor. You know very well how to move the story and how to stop and when to stop… Touching” – என்ற வாட்ஸ்-அப்-மெசேஜ், ஒரு அதிகாலையில், யாவரும் மதிக்கும் ராவ் சாரிடமிருந்து எனக்கு வந்தபோது…

… இவற்றைப் பாராட்டாகப் பார்க்காமல், ‘இதற்குத் தகுதி செய்துகொள், உன்னை!’ என்று சொல்லிக்கொண்டேன்.

எழுத்துக்கும் குரலுக்கும் எங்கெங்கிருந்தோ வாழ்த்து அனுப்பிய அன்பர்கள் (வாசகர் மெயில்!).

20250221165232283.jpeg

பேசும் என் குரலில் சிறு சோகம், சிறு வேகம் இருந்தாலும், அதைச் சரிசெய்து அனுப்பச் சொல்லும் ராஜேஷ் கன்னா சார்… ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக என்னை யோசிக்க வைத்தவர். அவர் சொல்லி நான் செய்யாமல் இருந்ததில்லை. (‘பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரி!).

வாரா வாரம் வாழ்த்தைக் கூட கவித்துவமாய் அனுப்பும் ராஜ மகா ரசிகன், வெங்கடகிருஷ்ணன் சார்… ஒரு வாரம் நான் அனுப்ப இயலாதுபோனாலும், “தொடரைத் தொடர்ந்து தந்தால் மிக நல்லது, ஏதோ சொல்லணும்னு தோணுச்சு…” என்று உத்வேகம் செய்வார்.

சுபா வெங்கட், சத்தியபாமா ஒப்பிலி, மரியா சிவானந்தம் போன்ற எழுத்தாளுமைகள் வாழ்த்து விமர்சனம் அனுப்பும்போது அவ்வளவு இதமாக இருக்கும்.

விகடகவியின் அறிவார்த்தமிகு, ஆற்றல்மிகு எடிட்டோரியல், கிரியேடிவ் குழு, நிர்வாகக் குழு, வித வித விருந்து சமைக்கும் சக படைப்பாளிகள், இரசனையான உலகத் தமிழ் வாசகர்கள்… என்று எல்லோருடனும் பயணித்தது பெருமிதம்.

எல்லோருக்கும் தன் பக்கங்களை ஒதுக்கி, தன் பக்கம் அரவணைக்கும் விகடகவி – வாரம்தோறும் வரும் டிஜிட்டல் தமிழ் மேகசின் என்று சொல்வது வர்த்தக அடையாளம் மட்டுமே.

உண்மையில், விகடகவி… எல்லோர் வாழ்க்கையிலும் ஊடுருவி விட்ட உயிர்ப்பான அம்சம். அதை அனுபவித்த உயிர் நான்.

அதை உணர்ந்த என் மை சொல்லும் நன்றி இது!