தொடர்கள்
பொது
பூமிக்கு திரும்பிய நட்சத்திரம்…. சுனிதா வில்லியம்ஸ் - மரியா சிவானந்தம்

20250222070912922.jpeg

ஊரெல்லாம் இதே பேச்சு. மன்னிக்கவும். உலகம் எல்லாம் இதே பேச்சு.

செய்தித்தாள் ,தொலைக்காட்சி , இணையதளங்கள், ரீல்ஸ் என்று நாம் தினம் பார்க்கும் எல்லா இடங்களிலும் சுனிதா வில்லியம்ஸ் விண்ணில் இருந்து மண்ணுக்கு திரும்பிய செய்தியால் நிரம்பி வழிகிறது.

ஆயிரம் கோடி கண்கள் ஆகாசத்தைப் பார்த்து கவலையோடு காத்திருந்த கடின காலங்கள் முடிந்தன.

இதோ ஒரு தேவதை போல இறங்கி வந்துள்ளார் சுனிதா.

20250221182306116.jpg

அறிவியல் நிகழ்த்திய அதிசயம் இது என்றும் , இறைவன் அருள் என்றும் மக்கள் இரு பிரிவாக பிரிந்து இந்நிகழ்ச்சியைக் கொண்டாடி தீர்க்கின்றனர்.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISS -International Space station ) இயங்கி வருகிறது. அமேரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து இந்த ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் அமைத்து , விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

20250221183139971.jpg

இந்த ஆய்வு நிலையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் ஐந்தாம் தேதி அமெரிக்காவின் நாசா அனுப்பிய போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பயணித்து ஐஎஸ்எஸ் அடைந்தனர்

20250221182436118.jpg

ஆய்வுகள் முடித்து 10 நாட்களுக்குள் திரும்பி வருவது பயணத்திட்டம்.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ப்ரோபெல்லிங் சிஸ்டத்தில் பழுது ஏற்பட இருவரும் பூமிக்குத் திரும்புவது தள்ளிப் போனது. பத்து நாள் என்பது 286 நாட்கள் ஆகி , இந்த வாரம் 19ஆம் தேதி அன்றுதான் இருவரும் திரும்பி வந்துள்ளனர்.

இடையில் சென்ற செப்டம்பர் மாதம் இவர்களை அழைத்து வர அமேரிக்கா அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் 9 என்ற விண்கலத்தில் நிக் ஹாக் , அலெக்ஸாண்டர் என்ற இரு விண்வெளி வீரர்கள் சென்றனர். டிராகன் 9 விண்வெளிக் கலம் விண்வெளி நிலையத்தை அடைய தாமதம் ஆனது.

20250221182516593.jpg

இறுதியாக இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தலைவர் எலன் மஸ்க் ஏற்பாடு செய்தபடி டிராகன் 10 விண்வெளிக்கலத்தில் 4 மாற்று வீரர்கள் சென்றனர்,அமெரிக்காவின் ஆனி மெக்லின்,நிகோல் அயர்ஸ்,ஜப்பானின் டகுயா ஒனிஷி ரஷ்ய வீரர் க்ரிஸ் பெஸ் கொஸ் நால்வரும் ஐஎஸ்எஸ் அடைந்து , நிலையத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்

20250221182231496.jpg

சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களும் டிராகன் 9 கலத்தில் திரும்பி வந்துள்ளனர். புளோரிடா கடலில் விண்வெளிக்கலம் இறங்கிய கண் கொள்ளா காட்சியை இந்த உலகமே பார்த்தது. பாராசூட்கள் பறக்க , புவி ஈர்ப்பு விசைக்குள் நுழையும் போது ஏற்படும் அதீத வெப்பத்தில் விண்கலம் கொதிக்க விடியற்காலையில் கலம் கடலில் இறங்கியது.

20250221182854402.jpg

விண்வெளி வீரர்கள் வெளியில் வரும் முன் பெண் பொறியாளர் கயிறில் ஏறி , ஏதேனும் தொழிற்நுட்ப பழுதுகள் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னரே நான்கு விண்வெளி வீரர்களும் வெளியே வந்தனர் .நிக் ஹாக், அலெக்ஸாண்டர், சுனிதா வில்லியம் , புட்ச் வில்மோர் என்று ஒவ்வொருவராக வந்தனர்,

20250221182816258.jpg

இதில் சுனிதா வில்மோர் இருவரும் விண்வெளியில் 286 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளனர் ,4576 தடவை பூமியைச் சுற்றி வந்துள்ளனர். இந்நாட்களில் அவர்கள் பயணம் செய்த தொலைவு 195 மில்லியன் கிலோமீட்டர்கள் ! தினமும் 16முறை சூரியன் உதிப்பதை பார்த்தார்கள்.

இந்த வீரமங்கையும், உடன் இருக்கும் விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமிக்குத் திரும்ப வேண்டும் என்ற மக்களின் பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள் பலித்து விட்டன.

"இனி எல்லாம் சுகமே" என்று இருக்க முடியாது. நீண்ட நாட்களாக விண்வெளியில் தங்க நேர்பவர்கள் உடல் சார்ந்த , மனம் சார்ந்த பல பிரச்சனைகளை இவர்கள் சந்திக்க வேண்டி வரும்.

20250221183310644.jpg

புவி ஈர்ப்பு விசை இல்லாத வான்வெளியில் மிதந்துக் கொண்டே இருந்தவர்கள் பூமிக்கு வந்தவுடன் நடக்கவே சிரமப்படுவார்கள். "நான் நடப்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் " என்பது சுனிதாவின் சொற்கள் .

புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அவர்களது எலும்பின் அடர்த்தி குறைந்து , எலும்பு தேய்மானம் ஏற்பட்டு இருக்கும் . அவர்களது பாதங்கள் குழந்தையின் பாதம் போல (Baby foot ) மாறி இருக்கும் .அதனால் நிற்கவே சிரமமாக இருக்கும்..கண்பார்வையும் மங்கி இருக்கும்

தனிமை தந்த மனச் சோர்வு அவரது மனநலத்தையும் பாதித்திருக்கும் . மீண்டும் இயல்பு நிலைக்கும் ,இயல்பான வாழ்க்கைக்கும் திரும்ப சில மாதங்கள் ஆகும். எலும்பும் ,தசையும் பழைய வலு பெற மருத்துவ சிகிச்சைகளும், பயிற்சியும் நாசாவின் மறுவாழ்வு மையம் வழங்கும்.

மனத் திண்மையுடன் விண்ணில் உலவி வந்த சுனிதா என்னும் தேவதை மறுபிறவி எடுத்தது போல் மண்ணுக்கு, திரும்பி வந்துள்ளார் .

அவருடன், பிற விண்வெளி வீரர்களும் இப்பூமித் தாயின் பாதுகாப்பில் புது வலிமையையும் , பொலிவும் பெறுவார்கள்,

அடுத்தடுத்த பயணங்களுக்கும் , அரிய பெரிய சாதனைகளுக்கும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள்.

அறிவியலும் ,ஆண்டவனும் துணை நிற்கட்டும்.

பூமிக்கு திரும்பிய நட்சத்திரத்தை கொண்டாடும் அதே சமயம் கவனமாக பார்த்துக் கொள்வதும் முக்கியம்.