தொடர்கள்
தொடர்கள்
மனசே! டேக்  டைவர்ஷன் ப்ளீஸ் 9 – மோகன் ஜி

"அகிலம் வெல்லும் அணுகுமுறை"

கோலியாத், டேவிட் இடையேயான சண்டையைப் பற்றி விவிலியக் கதை ஒன்றுண்டு.. கோலியாத் ஒரு ராட்சத வடிவினன். டேவிடோ ஒரு ஆடு மேய்க்கும் இளைஞன்.

20250219220903783.jpg

கோலியாத்துடன் போரிட டேவிட் அவனை எதிர் கொண்டபோது, உடன் வந்த வீரர்கள் தடுத்தார்கள்.

’’கோலியாத், உன் ஆயுதம் கொண்டு அடிக்கவே முடியாத அளவுக்குப் பெரியவன்! ஜாக்கிரதை!’’ என்றார்கள். ஈட்டியை ஏந்திகொண்டு டேவிட் பதில் சொன்னான். “இல்லை நண்பர்களே! கோலியாத் குறி தவறிவிட முடியாத அளவுக்கல்லவா பெரியவன்?!’’

எதையும் நாம் பார்க்கும் கோணத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது. மிகவும் வழமையான உதாரணமான பாதி நிரம்பிய கண்ணாடி பாத்திரத்தை சிலர் பாதி காலியானதாகவும் சிலர் பாதி நிரம்பியதாகவும் பார்ப்பது.

யாவும் அவரவர் காணும் கோணத்தில்தான் உள்ளது அல்லவா?

அடிக்கடி சொல்லப்படும் ஒரு ஆங்கில வார்த்தை ATTITUDE .இந்த வார்த்தைக்கு மனப்பாங்கு அல்லது அணுகுமுறை என்று பொருள்.

20250219220945370.jpg

நீங்கள் யாராக இருந்தாலும் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களால் எதிலும் ஒரு நுண்மையான வேறுபாட்டை நிகழ்த்த முடியும். உங்களைத் தெரிந்தவர்களோ, அறியாதவர்களோ யாராயினும், அவர்களுடனான உறவில் ஒரு மாறுதலை நீங்கள் விளைவிக்க முடியும். அதை விளைவிக்கும் மந்திரக்கோல் தான் ‘அணுகுமுறை’!

பிறர் முகம் பார்த்துச் சிந்தும் புன்னகையாகவோ, நடக்கும் வழியில் கிடக்கும் முள்ளை அகற்றுவதாகவோ, கீழே விழுந்த ஒருவரைக் கைலாகுக் கொடுத்து எழச்செய்வதோ…. எதுவாகவேனும் இருக்கலாம்.

உங்கள் நேயமும் உதவும் மனப்பான்மையும் உலகின் போக்கில் சிறு மாறுதலை விளைவிக்கவே செய்யும்.

20250219221029348.jpg

உங்களின் சிறு உதவிகள்கூட அதைப் பார்த்தவரையும் உதவி பெற்றவரையும்கூட பிறருக்கு உதவத் தூண்டுகிறது.

ஒரு சிறு அகல்விளக்கு மற்றொரு அகலை ஏற்றுவது போல, தொடரும் உங்கள் செயல்பாடு.

நம் அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக் கொள்வதும்; அல்லது சிறு மாறுதல்களை அதில் மேற்கொள்வதும் நம் கண்ணோட்டத்தையும் நாம் நடந்து கொள்ளும் விதத்தையும் மாற்றிவிடும் தன்மை கொண்டது. நம் அணுகு முறையில் ஏற்பட வேண்டிய மாற்றம் நம் உள்ளிலிருந்தே வரவேண்டிய ஒன்று.

நம் பேச்சுக்கும் செயலுக்கும் நமது ஆளுமைக்கும்கூட நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

நாம் நடந்து கொள்ளும் முறை, நம் மதிப்பீடுகள், ஏற்கும் வழிமுறைகள் என யாவற்றுக்கும் நாமே தான் பொறுப்பு.

நம் எண்ணத்தின் போக்கை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும் முன்முடிவுகளை பரிசீலிக்க வேண்டும்.

2025021922123871.jpg

நேர்மறை அணுகுமுறையை நமதானதாக மாற்றிக் கொள்ளும் வழிகள் பல இன்னமும் உண்டு.

- நமது எதிர்மறைச் சிந்தனை ஆடைகளை, நேர்மறையான சோப்பு போட்டு துவைத்து அலசிப் பாருங்கள். அழுக்கு விலகி மனமும் பளீரிடலாம்.

-நடக்கும் நல்ல விஷயங்களிலும் ஆரோக்கியமான பரிமாற்றங்களிலும் மனதைச் செலுத்துங்கள்.

- நன்றி சொல்வதையும் புன்னகையையும் எப்போதும் உபயோகிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

- பிறருடைய மனநிலைக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்க முயலுங்கள்.

- சிறிய விஷயங்களுக்கும் மனமுவந்து பாராட்டுங்கள்.

- கொடுத்த வாக்கை எப்பாடு பட்டேனும் காப்பாற்றுங்கள். நீங்கள் நம்பிக்கைக்குரியவர் என்ற பிறரின் எண்ணம் உங்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்று புரிந்து கொள்ளுங்கள்.

- உங்களிடம் பிறர் குறைகண்டால் எரிச்சலடைவதை விட்டுவிட்டு, உள்ளபடியே குறை உண்டாவென ஆராயுங்கள். அப்படி இருக்குமானால், அவற்றை மாற்றிக் கொள்ளுங்கள்.

- பிறரை மன்னிக்கத் தயங்காதீர்கள்.

- நகைச்சுவையுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அது பிறர் மனத்தையும் திறக்கும் சாவி அல்லவா?

- உங்களுடன் பணியாற்றுபவர்களும் தொடர்பு உள்ளவர்களும் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளத் தலைப்படுங்கள். உங்களின் உற்சாகமான அணுகுமுறையும் நம்பகத்தன்மையும் அவர்களை வழிநடத்தும்.

- எப்போதும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

- மற்றவர்களின் நல்ல குணங்களையும் செயல்களையும் மனதாரப் பாராட்டுங்கள்.

- பிறருடைய கண்ணோட்டத்திலும் எதிரில் உள்ள பிரச்சனையை நோக்குங்கள்.

- பிறரை வரவேற்பதிலும் வழியனுப்புவதிலும் உங்கள் கனிவைக் காட்டுங்கள்.

-பிறரின் சுக துக்கங்களில் பங்கேற்பதில் உங்கள் நல்ல தன்மையும் அக்கறையும் வெளிப்படும். உறவுகள் பலப்படும்.

- பிறர் ஆலோசனைகளுக்கும் செவி சாயுங்கள். அவர்களின் பேச்சை நீங்கள் ஆர்வத்துடன் கவனிப்பதே அவர்களை நெருங்கி வரச் செய்யும்.

- பாரபட்சம் காட்டாமல் வெளிப்படையாக செயல்படுங்கள்.

- இல்லத்திலோ அலுவலகத்திலோ பிணக்குகள் சகஜம்தான். அப்படிப்பட்ட நேரங்களில், முரண்பட்டு விரோதம் கொண்டவர்களுக்கு இடையிட்டு பிணக்குகளை நடுநிலையுடன் தீர்த்து வையுங்கள்.

- யாரிடமும் வன்மம் பாராட்டாதீர்கள்.

- எல்லாமும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கைமீறிப் போவனவற்றை தயங்காமல் போக விடுங்கள்.

- எதைப் பற்றியும் குறைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள். அது பிறரை உங்களிடமிருந்து விலகிப் போகச் செய்யும். உங்களை தவிர்க்கவே பார்ப்பார்கள்.

எதிர்மறை அணுகுமுறையால் நட்டமும் விலகலுமே நம்மை வந்து சேரும்.

நேர்மறை அணுகுமுறையே முன்றேற்றம் தரும். உங்கள் மதிப்பையும் உயர்த்தும்.

காற்று வீசும் திசையை நம்மால் மாற்ற இயலாது. ஆனால் அதே நேரம், நம் படகின் பாய்மரங்களை தோதாக இயக்கி, நம் இலக்கை நோக்கி பயணிப்பது நம் வசம்தானே இருக்கிறது?.

நம் சூழலில் நிகழ்வனவற்றின்மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை தான். ஆனாலும் யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தேவையான அணுகுமுறை மாற்றங்களை நம்மில் உருவாக்கிக்கொண்டு வெற்றியுடன் மீள்வதே நாம் செய்ய வேண்டுவது!

நம் போட்டி எல்லாம் என்றும் முதலில் நம்மோடு இருக்கட்டும். ‘இன்றைய நான், நேற்றைய நானை விட அனுபவத்திலும் அறிவிலும் உயர்ந்தவன்’ என்பதே இலக்கை அடையும் உற்சாக முழக்கம்!

வெற்றி பெறுவோம் சொந்தங்களே!!