அடுத்த குடும்பத்தில் உள்ள அணிகளை ஒன்றொன்றாக பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன். முதலில் வஞ்சப்புகழ்ச்சி அணியை பார்ப்போம் என்றார்.
புகழ்வது போல பழிப்பதும், பழிப்பது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது பெரியோர் வாக்கு. இதை வடமொழியில் நிந்தா ஸ்துதி என்று கூறுவார்கள்.
எடுத்துக்காட்டு
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் - திருக்குறள்
கூறிய பொருள் - யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் எதையும் செய்யக்கூடிய தேவர்களை போலவே கயவர்களும் நினைத்ததை செய்து முடிக்க கூடியவர்கள்.
சொல்ல வந்த உண்மையான பொருள் (கயவர்களை புகழ்வது போல பழிப்பது) - இவ்விடத்தில் கயவர்களை தேவர்கள் போல என்று புகழ்வதைப் போல இருந்தாலும், எப்படிப்பட்ட இழிவான செயல்களையும் செய்வதற்கு கயவர்கள் தயங்க மாட்டார்கள் என்று திருவள்ளுவர் கயவர்களை பழித்துப் பேசி உள்ளார்.
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும் 5
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே - புறநானூறு
கூறிய பொருள் - இங்கே நல்ல மயில் பீலிகளால் அலங்கரிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, மிகவும் அழகாக முனைகள் திருத்தப்பட்டு (சாணை பிடிக்கப்பட்டு), நெய் பூசப்பட்டு உனது ஆயுதங்கள் அழகுடன் மிகுந்த காவல் மிகுந்த இந்த இடத்தில் இருக்கின்றன. ஆனால் அங்கோ, பகைவர்களின் குத்தி அதனால் நுனிகள் உடைந்து சிதைந்து கொல்லர்களின் துறைகளில் அதாவது கொல்லர் கலங்களில் ஆயுதங்கள் கிடக்கின்றன. தன்னிடம் உணவு பற்றாக்குறை இல்லாமல் இருந்தால், மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு பின்னால் உண்ணும், ஒருவேளை உணவு பற்றாக்குறை இருந்தால் அனைவரோடும் சேர்ந்து உண்ணும் என் தலைவனான மன்னனின் கூர்மையான வேல்.
சொல்ல வந்த உண்மையான பொருள் (தொண்டைமானை புகழ்வது போல பழிப்பது, அதியமானை பழிப்பது போல புகழ்வது) - ஒருமுறை தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டானது. தொண்டைமானின் படை மிகவும் பெரியதாக இருந்தாலும், அதியமானின் வீரத்திற்கு ஈடானவைகளாக இல்லை. அதை அறிந்த அதியமான், இப்போர் நடந்தால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று அறிந்து, அதைப்பற்றி ஔவையாரிடம் கலந்துரையாடினார். இதை தெரிந்து கொண்ட ஔவையாரும், தொண்டைமானின் நாட்டிற்கு சென்று தொண்டைமானை சந்தித்தார். அதியமானின் நாட்டில் இருந்து ஔவையார் வருவதை தெரிந்து கொண்ட தொண்டைமானும், தன்னுடைய படை கருவிகளை காட்டி தற்பெருமை அடித்துக்கொண்டு பெருமிதத்துடன் நின்றார். இதை பார்த்து அவை யாரும் மேலே உள்ள பாடலை பாடி, தொண்டைமானுக்கு அதியமானின் பலத்தை குறிப்பால் உணர்த்தினார். அதாவது தொண்டைமானுக்கு போர்க்கலையில் எவ்வித முன் அனுபவமும் இல்லை. அதனால் தான் அவனது படைக்கலங்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. அதேபோல அந்த படைக்கலன்களை பாதுகாப்பதற்கு வீரர்களை தொண்டைமான் போட்டு வைத்திருக்கிறான். ஆனால் அதியமானோ பல போர்களை கண்டவன். அதனால் அவனது ஆயுதங்கள் உடைந்து நெகிழ்ந்து பாதுகாப்புகள் எதுவும் இல்லாமல் இரும்பு கொல்லர்களின் கலன்களில் கிடந்தது. அதுவே அதியமானின் வீரத்தையும் பறைசாற்றி நின்றது. இதைப் புரிந்து கொண்ட தொண்டைமானும், போர் செய்யும் நோக்கத்தை விட்டு விட்டார்.
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே - புறநானூறு
கூறிய பொருள் - எப்பொழுது பார்த்தாலும் பாரி பாரி என்று அனைத்து புலவர்களும் ஒருவனையே புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாரி மட்டுமே இந்த உலகத்தை காக்கவில்லை, மழையும் தான் இந்த உலகத்தை காத்துக் கொண்டிருக்கிறது.
சொல்ல வந்த உண்மையான பொருள் (பாரியை பழிப்பது போல புகழ்வது)- கேட்காமல் நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் செய்யக் கூடியது மழை. நமக்கு தேவையான உணவினையும், தண்ணீரையும் உருவாக்குவது வானில் இருந்து பெய்யும் மழை தான். அதேபோல நாம் ஏதும் கேட்காமல் நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் செய்யக்கூடியவர் பாரி என்பதை இங்கு கபிலர் பழிப்பது போல புகழ்கிறார்.
இதுவரை நாம் பார்த்தது சில சரித்திர சம்பவங்கள். அடுத்து நாம் பார்க்கப்போவது நகைச்சுவையான வஞ்சப்புகழ்ச்சி சம்பவங்கள். இவற்றை அதிகமாக காளமேகப் புலவரே கையாண்டுள்ளார்.
அப்பனி ரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்
கெண்ணும் பெருமை யிவை - காளமேகப் புலவர்
கூறிய பொருள் - உன்னுடைய அப்பா பிச்சை எடுப்பவர், அம்மா மலை நீலி(பேய்)யாக இருப்பவள். மிகவும் பெருமைக்குரிய உனது மாமன் உறியில் உள்ள பொருட்களை திருடக் கூடியவர். சப்பை கால்களையும் பெரிய வயிறையும் உடையவர் உனது அண்ணன். இதுதான் ஆறுமுகங்களை உடைய முருகப்பெருமானுக்கு பெருமையாக இருக்கக்கூடியது.
சொல்ல வந்த உண்மையான பொருள் (முருகனை பழிப்பது போல புகழ்வது)- சகல உலகங்களையும் அழிக்கக்கூடிய சிவபெருமானே முருகப்பெருமானின் தந்தை ஆவார். அவர் ஒரு சமயம் பிச்சாடனராக ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அதை தான் முருகப்பெருமானின் தந்தை பிச்சை எடுப்பவர் என்று பழிப்பது போல புகழ்கிறார் களமேகப் புலவர். அதேபோல பார்வதி என்ற திருநாமத்தை உடைய மலைமகள், இமவான் என்ற இமயமலையின் பெண்ணாவாள். அவள் காளி சொரூபத்தில் இருக்கும் பொழுது பேய் போலவே காட்சி தருவாள். அதனால் அவளை மலை நீலி என்று பழிப்பது போல புகழ்ந்து கூறுகிறார். அடுத்ததாக கிருஷ்ணாவதாரத்தில், அனைத்து உலகத்தையும் காக்கக்கூடிய திருமால், ஆயர் குலத்தில் பிறந்து வெண்ணெய் திருடி உண்ட திருவிளையாடல் சம்பவங்கள் நமக்கு தெரியும். அதையும் நையாண்டி செய்து பழிப்பது போல புகழ்கிறார். யானை உடலை உடைய விநாயகரின் அங்கங்களையும் பழிப்பது போல புகழ்ந்து, இவர்கள் அனைவரின் உறவுகளைக் கொண்ட முருகனை வணங்குகிறார் காளமேகப் புலவர்.
இதே போல 23ஆம் புலிகேசி என்ற தமிழ் திரைப்படத்தில் வரக்கூடிய பாணபத்திர ஓணாண்டி காட்சியை பார்த்தவர்களுக்கு வஞ்சப்புகழ்ச்சி அணி மிகவும் சுலபமாக புரியும்.
மன்னா, மா மன்னா !
நீயொரு மாமா மன்னா !
பூமாரித் தேன்மாரி நாள் பொழியும் நீயொரு
முல்லை மாரி !
அரசியலில் நீ தெள்ளியதோர்
முடிச்சவிக்கி !
தேடிவரும் வறியவர்க்கு
மூடா
நெடுங்கதவு உன்கதவு
என்றும் மூடாமல் மறைக்காமல்
நீ உதவு
எதிர்த்து நிற்கும் படைகளை
நீ புண்ணாக்கு
மண்ணோடு மண்ணாக இந்த அகிலத்தை அடை காக்கும்
அண்டங் காக்கையே!
இந்த கவிதையை தான் அந்த படத்தில் காட்டி இருப்பார்கள். இந்த காணொளியை இதுவரை பார்க்காதவர்கள், கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
வடமொழியில் உள்ள நிந்தா ஸ்ருதிகளில் ஒன்றை கீழே பார்ப்போம் :
வாராணாஸீ! வ்ருதைவ த்வமாஶ்ரயந்தி மஹாஜநா𑌃 |
பவபோகபரித்யக்தம் யத்கரோ(அ)ஸி திகம்பரம் ||
வாரணாசியே! உன்னை வயதானவர்களும் மகான்களும் வணங்குகிறார்கள், ஆனால் உன்னால் அவர்கள் தங்களுடைய சுகங்களையும் போகங்களையும் விட்டுவிட்டு உடுத்துவதற்கு ஒரு துணி கூட இல்லாமல் திகம்பரர்களாக நிற்கிறார்கள். இங்கே, வாரணாசியால் (காசி) தான் இப்படி மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பழிப்பது போல வாரணாசியில் திகம்பரனான சர்வேஸ்வரன் (சிவபெருமான்) வீற்றிருந்து மக்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு முக்தி அளிக்கிறார் என்று புகழ்கிறார்.
இத்தோடு வஞ்சப்புகழ்ச்சி அணி முடிந்து விட்டது. அடுத்த வாரம் வேறொரு அணியை பார்ப்போம் .
Leave a comment
Upload