கம்மல் என்றவுடன் காதில் அணியும் நகை என்று தானே நினைக்கிறீர்கள்? அது தான் இல்லை.
இப்போது சொல்லப் போகும் கம்மல், குரலின் ஒலிகுறைந்து கம்மலாக ஒலிப்பது பற்றி தான்.
அண்மையில் சபரிமலை சென்றிருந்தபோது ஒரு அந்நாள் நண்பர் என்னைத் தன் குழுவினருக்கு இப்படி அறிமுகம் செய்து வைத்தார்.
“இவரு மோகன் குருசாமி! எங்களுக்கெல்லாம் ‘மயிலு’.
இவர் கரிமலை உச்சியிலிருந்து சரணம் கூப்பிட்டால், சன்னிதானத்துல ஐயப்பன் ‘வந்துட்டியா மயிலு’ன்னு திரும்பிப் பார்ப்பாரு! மோகன் குருசாமிக்கு அவ்வளவு கம்பீரமான ‘வாய்ஸ்’ தெரியுமா?”
நான் இப்படி பதில் சொன்னேன்…
“வணக்கம். சுவாமி சரணம்! நம்ம வாசு என் வாய்ஸ் பத்தி சொன்னாரு. அவர் அன்று அறிந்திருந்த மோகன் இளைஞனாக இருந்தேன். பிறகு எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. அப்பவே பாதி வாய்ஸ் குறைஞ்சு போச்சு! அப்புறமா கொரோனா வந்துச்சா... மீதி வாய்ஸும் கொறைஞ்சுகிட்டிருக்கு!” என்றேன்.
உண்மையில், கடந்த சில மாதங்களாகவே என் குரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பேசுகையில் குரல் மெலிந்து ஒலிக்கிறது. மெல்லப் பேசினாலோ குரல் உள்ளேயே அழுந்திப் போகிறது.
உரத்துப் பாடினால் மட்டும் பழைய குரல் வெளிப்படுகிறது.
மைக்கை உபயோகிக்காமல் நான் தொடர்நது வகுப்புகளை எடுத்து வந்தவன். ஏற்ற இறக்கங்களோடு மேடையில் முழங்கியவன். எப்படி இருந்த என் குரல் இப்படிக் கம்மலாப் போச்சே! என்று யோசித்தபடி சின்னச்சின்ன கைவைத்தியங்கள் மட்டும் செய்து பார்த்தேன்.
அண்மையில் என் மனைவியை வெளியிலிருந்து தொலைபேசியில் அழைக்க நேர்த்தது. அவள் பெயரை விளித்துப் பேசத் தொடங்கினேன். அவளோ, ‘’ஹலோ! யாருங்க பேசறது? என் பெயர் எப்படி…” என்று படபடத்தாள்.
என் குரலையே அவள் அடையாளம் காணாதது ஒரு இன்ப அதிர்ச்சி கலந்த பயமாக உருவானது.
‘இனி பொறுப்பதில்லை! ஈ என் டி யை நாடிடுவோம்’ என்று போனமாதம் ஒரு ‘எண்ட்டு’ டாக்டரிடம் போனேன்.
அவரோ ‘ஆ சொல்லு! ஈ சொல்லு! ஊ சொல்லு’ என்று பரிசோதித்தார்.
வேறேதும் கேட்கு முன்னர், என் மருத்துவக் காப்பீடு பற்றி விசாரித்தார். குரல்வளையில் ஆப்பரேஷன் நாளைக்கே செய்துவிடலாம் என்று தயாராகி விட்டார்.
நானும் அவரிடம், “வூட்டாண்ட சொல்லிகினு அப்பாலிக்கா வாரேன் டாக்டர்!” என்று ஓடிவந்து விட்டேன்.
இரண்டுநாட்கள் தனுஷ் மாதிரி ‘தொண்டையிலே ஆப்பரேஷன்.. தொண்டையிலே ஆப்பரேஷன்..’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஹோமியோபதியில் தனக்கு இதே பிரச்னை குணமானதாகவும், அவசரப்பட்டு ஆபரேஷன் பண்ணவேண்டாம் என்றும் நண்பரொருவர் அறிவுறுத்தினார்.
மும்பை திரும்பியவுடன் கடைவீதிக்குப் போனவன், அங்கு ‘ஹோமியோபதி கிளினிக்’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தவுடன் உள்ளே நுழைந்துவிட்டேன்.
அங்கே ஒரு யுவதி அமர்ந்திருந்தாள்.
நர்ஸ் போலும் என்று நினைத்து டாக்டரை எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். ‘ஷட் அப்! ஐ ஆம் கிருஷ்ணமூர்த்தி’ என்று சவடால் வைத்தி நாகேஷ் சொல்லும் தொனியில் ‘நான் தான் டாக்டர்’ என்றாள்.
அந்த டாக்டர் யுவதியின் குரலோ என் குரலைவிட தீனமாக இருந்தது. நாசூக்காக வாயை மூடியபடி லொக் லொக்கென சிறுசிறு இருமல்களாக இருமினாள்.
“சாரி ஃபார் மை பேட் வாய்ஸ்! என் தொண்டையில் இன்பெக்ஷன் ஆகிவிட்டது. உங்களுக்கு என்ன ஜி பிரச்னை?” என்று வினவினாள்.
“எனக்கும் அதே வாய்ஸ் பிரச்னை தான் மேடம்” என்று விவரிக்க ஆரம்பித்தேன்.
ஆதியோடந்தமாக எனது விவரங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டு அழகான கையெழுத்தில் கட்டமெல்லாம் போட்டு எழுதிக் கொண்டாள்.
எனக்கு கோலி விளையாடப் பிடிக்குமா? இல்லை பம்பரம் தான் பிடிக்குமா? என்று மட்டும்தான் கேட்கவில்லை!
போதாததிற்கு, இருவர் குரலும் தகரடப்பாவாக இருந்ததால், கேள்வியை நான் இரண்டாம் முறையாக கேட்டுப் புரிந்து கொண்டும், என் பதிலை டாக்டரம்மா இரண்டாம் முறைக் கேட்டு உறுதிசெய்து கொண்டும் தகவல் திரட்டு நடந்தது.
ஒரு வாரத்துக்கு உட்கொள்ள சிறு சீனி உருண்டை மருந்துக் குப்பியும், சொட்டு மருந்தும் கொடுத்து வாயில்வரை வந்து வழியனுப்பினாள் மகராசி!
நேற்று இரண்டாவது முறை அதே டாக்டரிடம் போனேன்.
“இப்போது உங்களுக்கு தொண்டை சரியாகி விட்டதா?”
இதைக் கேட்டது நான். முந்திக்கொண்டுவிட்டேன்.
சின்ன அதிர்ச்சியுடன், “பரவாயில்லை! இரண்டுமூன்று நாட்களில் எனக்கு சரியாகி விட்டது” என்றாள் டாக்டரம்மா!
பிறகு என் குரல் முன்னேற்றம் பற்றிக் கேட்டாள்.
“முன்னேறின மாதிரியும் இருக்கு முன்னேறாத மாதிரியும் இருக்கு!” என்றேன். மீண்டும் இரண்டு வாரத்துக்கு மருந்து கொடுத்தாள்.
“பேச்சு பேச்சாத் தான் இருக்கணும். எப்பவும் கத்திப் பேசாம சாவதானமா பேசுங்க அங்கிள்!”என்ற அறிவுரையுடன் விடைகொடுத்தாள்.
“பேசி என்ன தாயி ஆகப் போகுது! “என்று எம். ஆர். ராதா குரலில் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு பேஷண்ட் அங்க்கிளாக மாறுவது அல்லவோ முக்கியம்?!
Leave a comment
Upload