சில நாட்களாகவே தலைவி சோர்வுற்று இருக்கிறாள்.
தலைவன் தன்னையும் தன் மகனையும் விட்டு பிரிந்துச் செல்வானோ என்று அவள் நினைத்து பல்வேறு எண்ணங்களால் அவள் அலைக்கழிக்கபட்டுக் கொண்டிருந்தாள் .
அவள் மனதில் பெருக்கெடுத்த கவலையால் அவள் உடலும் பொலிவிழந்து காணப்பட்டது .
தலைவியின் நிலையைத் தலைவன் பார்த்தான். அவளது கவலைக்குக் காரணம் எதுவென்று யூகித்தான்.
"உன்னையும் மகனையும் விட்டு விட்டு நான் வெளியூர் செல்வேனோ ? அவ்வாறு பொருள் தேடி அறம் செய்வேனோ? நீ வருந்த வேண்டாம்.என் காதல் கடலினும் பெரியது" என்று ஆறுதல் கூறினான்.
அவன் கூறியதாவது :
"பொன்னைப் போல உன் மேனி திகழ்கிறது. கருநீல மணியைப் போல உன் கூந்தல் மின்னுகிறது.
குவளை மலர் போல உன் அழகிய கண்களும், மூங்கிலைப் போல உன் தோள்களும் அழகுடன் விளங்குகின்றன.
இவற்றைக் காணும் போது, அறவழியில் நிற்பவர் அடையும் சிறப்பை நான் அடைந்தேன்.
பொன்னால் ஆன தொடி அணிந்த நம் மகன் 'பொய்தல்'(சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு) விளையாட அறிந்திருக்கிறான்.
உங்களைக் கண்டு மகிழ்ந்திருப்பதைத் தவிர, வேறு எதுவும் சிறந்தது இல்லை.
எனவே வேற்றூர் சென்று நான் செய்யக் கூடியது எதுவும் இல்லை.
நீ சிந்தித்து ஆராய்ந்துப் பார்த்தால், உனக்கே இது புரியும்.
நாம் எதற்காக பிரிய போகிறோம்? சொல்!
என் காதல் கடலை விட பெரியது" என்றான்
தலைவனின் வாய் மொழியாக காதலின் வலிமையைச் சொல்லும் நற்றிணைப் பாடல் இதோ
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகம்மலிந்து யானும்
அறம்நிலை பெற்றோர் அனையேன் அதன்தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து இலெனே; நினையின்
யாதனின் பிரிகோ? மடந்தை!
காதல் தானும் கடலினும் பெரிதே!
(நற்றிணை 166)
இப்பாடலை எழுதிய புலவர் யார் என்று தெரியவில்லை.
பெயர் அறியா அக்கவிஞனின் கடல் போல காதல், காலங்கள் கடந்தும் வாழ்கிறது இக்கவிதையாக,.
மேலும் ஒரு பாடலுடன் அடுத்த இதழில் சந்திப்போம்,
-தொடரும்
Leave a comment
Upload