மகரஜோதி 2025 க்கு 2024 விநாயக சதுர்த்தியிலிருந்தே அங்கத்தினர் சேர்க்கை ஆரம்பமானது. 25 என்ற முதல் எண்ணிக்கை ஜனவரி 7ஆம் நாள் கட்டுநிறையன்று 11 ஆகிப் போனது. சென்னை, மும்பை பெங்களூரிலிருந்து நாங்கள் குருவாயூரில் கூடினோம்.
எங்கள் மும்பை குழு ஆறாம் தேதி இரவு வரை 7 என்றிருந்தது திடீரென்று வந்த, விரதத்தில் இருந்து குழு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த ப்ரவீன்குமார் விசாரேவினால் எண்மரானோம்.
கட்டும் கட்டிக்கொண்டோம். ரயிலில் ஏறிக்கொண்டோம். வழி நெடுக காலை மாலையென ஸ்லோகங்கள் ஜபிப்பதும், பஜனைப் பாடல்கள் என ரயில் பிரயாணம் கழிந்தது.
குட்டிபுரத்தில் இறங்கி கேரளாவில் கோயில்களுக்கு சென்று சபரிமலை அடைய அமர்த்திக்கொண்ட டெம்போ ட்ராவலரில் அடைந்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் குருவாயூர் கோயிலில் சென்னையின் மூவருடனும் பெங்களூரிலிருந்து வந்த மகேஷுடனும் பெரிதானோம்.
குருவாயூரப்பனைக் கண்ணாரக் கண்டுவிட்டு, சோட்டாணிக்கரை பகவதியை நோக்கி மினி பஸ் விரந்தது.
கீழ்க்காவு மேல்காவில் தேவியைத் தொழுத பின் இரவு பாராமல் குளத்துப்புழை பால சாஸ்தா கோயிலுக்கு
மறுநாள் 9ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு சென்றடைந்தோம். சுப்ரபாதத்துடன் துயின்ற பாலகனை நிர்மால்யம், அபிஷேகம் அலங்காரம் என கண்டு கண்டு களிப்புற்றோம்.
ஆரியங்காவில் ஐய்யனை தரிசனம் செய்தோம். எங்களது பஸ் தமிழ்நாடு வழியாக அச்சன் கோயில் அரசனைக் காணக் கிளம்பியது. நின்ற இடங்களில் சூடாக காஃபீ டீ என வயிற்றுக்கு பெட்ரோல் இட்டுக்கொண்டோம். சப்போர்ட்டுக்கு மும்பையிலிருந்து எடுத்துக்கொண்டு வந்த கார வகைகள் துணை வந்தன.
அடர்ந்த காட்டுப்பகுதியில் ஹேர்பின் வளைவுகள் ஆரம்பித்தன.
கோட்டை வாசல் கருப்பண்ணஸ்வாமியை தரிசனம் செய்தோம். தடையில்லா யாத்திரைக்கு வேண்டிக்கொண்டு தேங்காயை சிதற விட்டோம். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் உரசிக்கொண்டு வளர்ந்த மரங்கள் அவை தந்த கரும் நிழல்கள் சில்லென காற்றில் வளைந்து வளைந்து உயர உயரமாக சென்று கொண்டிருந்தோம். ஆங்காங்கே ஒருவர் இருவராய் இருமுடி தாங்கியபடி கருப்பு நிற வேட்டியணிந்து அய்யப்பமார்கள் கருமமே கண்ணாயினார் என்ற பாணியில் அய்யன் துணை ஒன்றே என்ற நம்பிக்கையில் நடந்த வண்ணம் இருந்தனர்.
அச்சன் கோயிலும் வந்தது.
அங்கும் அஷ்டாபிஷேகமும் நெய்யாபிஷேகமும் அலங்காரமும் காணக் கிடைத்தது எங்கள் பாக்கியமே.
சிரஞ்சீவி பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சபரிமலை, ஆரியங்காவு, குளத்துப் புழை, அச்சன் கோயில் எரிமேலி என்ற ஐம்படை வீடுகளில் இந்த கொயில் மட்டும் தான் இடம் பெயராமல் அதே இடத்தில் இன்னும் இருப்பதாக கேட்டறிந்தோம்.
வழி நெடுக இருக்கும் காட்டுப்பகுதி அனைத்தும் தமிழ் நாட்டைச் சேர்ந்தது. கோயில் இருக்கும் பகுதி கேரளாவில் உள்ளது.
மதிய உணவுக்குப் பின் கோயில் பின் பகுதி கேரள மாநிலத்தின் உள் வழியாக மாலை ஏழு மணிஅளவில் எரிமேலி வந்தடைந்தோம்.
அங்கு வீற்றிருக்கும் கிராத சாஸ்தாவை அப்போதே சீவேலில் உலாவில் கண்டு வணங்கினோம்.
மறு நாளும் அதிகாலையிலேயே தலையில் இருமுடியைத் தாங்கியவாறு பெரு வழிக்காக கிளம்பி கிராத சாஸ்தாவை நிர்மால்ய தரிசனம் முதற்கொண்டு நாங்கள் படைத்த அபிஷேக திரவியங்களில் சீராடி வேட்டி மாலைகளில் அலங்காரமாய் நின்றார். சபரிமலை செல்லும் பக்தர்கள் சரண கோஷமிட்டவாறே தரிசனம் செய்து பயணம் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
பேட்டை சாஸ்தா கோயிலில் ஆரம்பித்து எரிமேலி கிராத சாஸ்தா கோயில் வரையுள்ள அந்த கால் கி.மீ தொலைவு தூர இடைவெளியில் முதல் மூன்று மலை செல்லும் அய்யப்பமார்கள் தமது குருசாமிகளுடன் பேட்டைத்துள்ளலில் மும்முறமாய் இருந்தனர்.
ஆதவனின் ஒற்றைச் சக்கரத்தேர் உக்கிரமாகும் முன் கணிசமான தூரத்தைக் கடக்கும் நோக்கில் எங்களது பெரு வழி பயணம் ஆரம்பமானது.
சுமார் நான்கு மணி நேர பாத யாத்திரையாக பேரூர் தோடு, காளைகட்டி க்ஷேத்ரம் வழியாக காட்டுப் பகுதியில் உள்ள வாழைத் தோப்பு என்ற இடத்தில் அன்றிரவு தங்கிட திட்டமிட்டோம்.
பல காலமாக ஆன்சி மாத்யூ தம்பதியினரின் இல்லத்தில் தான் தங்குவது வழக்கம். அவர்களது பரந்த வீடு உள்ளேயும் மொட்டை மாடியிலும் சுற்றியுள்ள தோட்ட இடங்களும் அங்கு வரும் அய்யப்ப பக்தர்கள் தங்குவதற்கு வசதிகளுடன் வாடகைக்கு கிடைக்கிறது. அவர்களது உபசரிப்பு அபரிதமானது.
அங்குள்ள வீடுகள் இந்த மண்டல காலத்தில் பக்தர்களின் வசதிக்கு விடப்படுகிறதைப் பார்க்கலாம். வீட்டின் பின்புறம் அழுதா நதி ஓடுகிறது. அந்த புனித நதியில் நீராடினோம்.
புராண வரலாற்றின் படி மணிகண்டன் காளை கட்டி க்ஷேத்ரத்தில் மகிஷியுடன் போரிட்டு அந்த அரக்கியை அழித்தார். அதை நேரில் காண வந்த பெற்றோர்களான சிவனும் பார்வதியும் தங்களது வாகனமான காளையைக் கட்டி வைத்த இடமே காளை கட்டி க்ஷேத்ரமாகும்.
மறுநாள் அழுதா மலை ஏற்றம். 2017 சுப்ரீம் கோர்ட்டின் பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பிலிருந்தே சர்ச்சை உருவாகியது. மறு வருஷம் ஏற்பட்ட பெரு வெள்ளம் என பெரு வழியில் பக்தர்களின் வருகை குறைந்தது. 2020 கொரோனா மஹாமாரியென அடுத்தடுத்த வந்த இடைஞ்சல்களால் நிலைமை இன்னும் மோசமானது.
இந்த கால கட்டத்தில் அந்த வழியாக சென்றவன் என்கிற வகையில் சொல்லவேண்டுமானால் தற்போது 100க்கு 30-40 பேர்கள் கூட இவ்வழியாக செல்ல மினவதில்லை. போதாக்குறைக்கு இந்த ஆள் நடமாட்டம் இந்த நவம்பர் – ஜன்வரி காலம் மட்டுமே. இதனால் புலி சரணாலயமான இக்காடுகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகி கட்டுக்கு அடங்காமல் போனது. ஆதலால் அன்றிலிருந்தே வனத் துறை அதிகாரிகள் காடுகளில் காலை 7 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் மட்டுமே நடக்க அனுமதி போன்ற நிறைய கட்டுப்பாடுகள் விதித்தனர். அந்த கால கட்டத்துக்குள் வனத்துறை வேலியிட்ட பகுதிக்குள் அடங்கிவிட வேண்டும். அவர்களும் ஆங்காங்கே கூடவே பக்தர்களுடன் வருவர். தடையில்லா காடுகள் என்ற சுகம் கண்ட யானைகள் ஒற்றையாக வந்ததானால் நிலைமை மோசமாகும். அப்போது வனத்துறை அதிகாரிகள் பக்தர்களை அப்படியே நின்றுவிட எச்சரிப்பார்கள். ஓடவும் முடியாது. துணைக்கு இருப்பது ஸ்வாமியே சரணம் அய்யப்பா என்ற சரணம் ஒன்று தான். இதற்கு மறுப்பே இல்லை.
இந்த முறை அழுதா மலை ஏற்றத்தின் காட்டுப் பகுதி வாயில் காலை ஏழு மணிக்கு திறந்தாலும் அடுத்த அரை மணி நேரத்தில் வனத்துறயினரின் கடும் எச்சரிக்கயில் குழு பிரிந்து விட்டது. எங்களது குழுவிலும் அடுத்த 35 கி. மீ தொலவு முழுவதும் பிரிந்து சென்றுவிட்ட எங்களில் ஒருவரைத் தேடியபடியே கல்லிடங் குன்றம் (அழுதா மலை உச்சி, இங்கு தான் மகிஷியின் தலை மணிகண்டனால் துண்டுக்கப்பட்டு வீசியபோது இங்கு வந்து விழுந்தது. இந்த பாதை வழியாக வரும் பக்தர்கள் அழுதையில் குளித்து கல்லெடுத்து இங்கு வந்து வைத்து விட்டு செல்லும் பழக்கம் இன்றளவும் உள்ளது) தாண்டி கீழிறங்கி முக்குழி தேவியை அடைந்தோம்.
பிரிந்தவர் கிடைக்காது போகவே மேலும் பூங்காவனம் என்னும் சமவெளி காடுகளினூடே சென்று கருவிளாந்தோடு என்ற அடர்ந்த காட்டுப் பகுதியின் தங்கும் இடத்திற்கு வந்து விட்டோம். இன்னும் பிரிந்தவர் கிடைக்காது போகவே கடினமன கரிமலை ஏறி உச்சியை அடைந்தோம். சூரியனும் தன் உக்கிரத்தைக் காட்டினான்.
பிரிந்தவர் கிடைத்த பாடில்லை. எனவே சற்றே இளைப்பாறி பின்னர் வழுக்குப்பாறை வழியாக கீழிறங்கி பெரியான வட்டத்தையடைய அந்த முகப்பில் பிரிந்தவர் பட படத்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார். குழு மீண்டும் பொலிவடைந்தது. அன்றிரவு அங்கேயே பம்பை நதிப் படுகையில் எழுப்பப்பட்டிருந்த விரிகளின் ஜாகையிட்டோம்.
அன்னதானத்திற்கு அங்கு குறைவே கிடையாது. இந்த இடம் யாகங்கள் ஹோமங்கள் என புனித வேள்விகள் இந்த காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் வேத விற்பன்னர்கள் நடத்துவார்கள். கூடவே பெரு வழியாக பசித்து வரும் ஐய்யப்ப பாதசாரிகளுக்கு மூன்று வேளையும் அன்னதானம் தவறாது நடைபெறும். இந்த நிலையில் சென்ற 2024 நவம்பர் – ஜனவரி காலத்தில் தடை விதிக்கப்பட்டு கேடு விளைத்தனர் போலீஸ்.
கீழே இருக்கும் லிங்க் எனது சென்ற வருட அனுபவ கட்டுரை பல பல இன்னல்களுடன் இதை விளக்கும்
மாலை வேளைகளில் குருமார்களின் பிரவசனம் நடைபெரும். கன்னி அய்யப்பன்கள் கூடி இயற்கை கழி, இலைகள் பலூன்கள் உதவியுடன் அலங்காரமாக விளக்கு அலங்காரம் செய்து பம்பை விளக்கு என்று பம்பை ஆற்றில் விட்டு மகிழ்வர்.
12 ஆம் தேதி எங்களுக்கு விர்சுவல் க்யூ பாஸ் கிடைத்த தினம். அதிகாலையில் பம்பையில் குளித்து கிளம்பி பம்பா கணபதியை அடைந்தோம். எங்களது பாஸைக் காண்பித்துவிட்டு நீலிமலை அப்பாச்சி மேடு சரம் குத்தியால் வழியாக சன்னிதியடைந்தோம். வலிய கடுத்த ஸ்வாமி கருப்பாயீ சமேத கருப்பண்ண ஸ்வாமி சன்நிதிகளைத் தொழுதுவிட்டு படித் தேங்காயை எறிந்துவிட்டு புனித பதினெட்டு படிகளைக் கடந்தோம். கொடிமரம் கண்டோம்.
அங்கு ஆத்ம சுற்று வைத்துவிட்டு சந்நிதியை வலம் வரும் பாலத்தில் ஏறி சந்நிதியின் இடப்புறமாக ஐய்யனின் அருகே சன்னிதி வாயிலருகே தலையில் இருமுடி தரித்தவாரே செல்கையில் தயாராக இழுத்துப்போட நிற்கும் போலீஸின் கைகளின் பிடி தொடும் முன்னர் இடைப்பட்ட அற்ப க்ஷணங்களில் மண்டல விரதம் நேர்ந்து அந்த காலம் முடிவில் அவனைக் காணும் ஆவலுடன் இருந்த உள்ளமும் மெய்யும் அந்த நேர அவனின் திரு உருவ அலங்காரத்தை கண்களின் ஷட்டர்களில் அடக்கிக்கொண்டு நகர்த்தப்பட்டோம். நானும் கண்டேன் அவனும் கண்டான். ஐய்யனை க்ஷண நேர தரிசனம் கண்டு உளமும் உடலும் பூரித்தோம். இது தான் நிதர்சனம்.
அப்படியே கன்னிமூல கணபதி, நாகராஜா சந்நிதிகளையும் மனதில் பாத யாத்திரை இனிது நடந்ததற்கு சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு மாளிகைப்புரத்திற்கு சென்றடைந்தோம்.
அங்கு சிறிய கொடுத்த ஸ்வாமி, நாகராஜாக்கள், கேரளஆரிய வர்மனின் ஜீவ ஆத்ம சமாதி அமைந்திட்ட மணிமண்டபத்தைத் தரிசித்தவாரே நவகிரஹங்களின் சந்நிதிகளை வலம் வந்து வணங்கினோம்.
பின்னர் மாளிகைப் புரத்தம்மனை தரிசித்தோம்.
பிறகு நாங்கள் தங்க இருக்கும் நம்பியார் (நமது தமிழ் நடிகர், பெரிய குருஸ்வாமி) விரியினைஅடைந்து மற்ற குழு யாத்ரிகர்களோடு குழுமினோம்.
மறுநாள் நெய்யாபிஷேகம், 14த் உத்தராயண ரவி சங்க்ரமண தர்ப்பணம் செய்தோம்.
அன்று மாலை கிழக்கு திசையில் வானில் மும்முறை தோன்றிய மகர ஜோதியைக் கண்டு சிலிர்த்தோம்.
ஜோதி தரிசனத்திற்காக காத்திருக்கும் போது நடந்தவைகளை கீழேயுள்ள ஃபோட்டோக்கள் விளக்கும்
[மகர ஜோதி தோன்றும் காந்த மலை]
யாத்திரை தடையின்றி முடிந்ததை பதினெட்டு படியருகே மீண்டுமொருமுறை படித்தேங்காயை எறிந்து விட்டு கீழிறங்கி வந்தோம்.
இடையில் சென்ற மூன்று வாரமாக நமது விகடகவியில் வெளிவந்த சபரிமலையைப் பற்றி நேர்காணல் தந்த அரவிந்த் சுப்ரமணியத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
திருவாபரணத்தோடு ஐயப்பனை தரிசனம் செய்தோம். ஆங்காங்கு அரை டஜன் ஷாமியானாக்கள் ஐய்யப்ப பக்தர்களுக்கு தங்கி முத்திரைத் தேங்காய்களை உடைத்து நெய்யை பிரித்து அபிஷேகத்திற்கு தயார் செய்ய உதவியாக இருப்பது நாம் மேற்கோள் காட்டிய கட்டுரையில் இருந்த சங்கடங்களில் ஒன்று சிறிதளவிலாவது நிறைவேற்யது என்றாலும் மற்ற சங்கடங்கள் இன்னும் தீர்ந்த பாடில்லை.
ஒரு செய்தியின் படி இந்த வருடம் இந்த புண்ணிய மண்டல, மகர காலத்தில் சுமார் 53.10 லட்ச பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும், 400 கஒடிக்கும் மேலாக உண்டியல் மூலம் வருமானம் வந்ததாக தெரிகிறது.
மாநில அரசும் திரிவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் பக்தர்களின் இடைஞ்சல்களை கிடைக்கும் உண்டியல் பணத்தைக்கொண்டு விரைந்து களைந்திட வேண்டும்.
அடுத்த மகர ஜோதிக்காக ஏங்க ஆரம்பித்துவிட்டது மனம்.
சுவாமியே சரணம் அய்யப்பா.
Leave a comment
Upload