சீன ஆண்டின் படி இந்த வருடம் பாம்பு வருடம் துவங்குகிறது....
பாம்பு வருடம் எப்படி இருக்கும் என்று ஒரு கணிப்பை பார்க்கலாம்.
(1953, 1965,1977, 1989, 2001, 2013, 2025)
பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கும் பிறக்க இருப்பவர்களுக்கும் இது மாற்றத்திற்கான மற்றும் அதிகாரத்திற்கான வருடமாம். (ஸ்டாலின் பாம்பு வருடம்) தொழிலைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கான வருடம். அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு ரிஸ்க்கான முதலீடுகளை செய்யக் கூடாதாம். நீண்ட கால சேமிப்பு திட்டங்களுக்கு ஏற்ற வருடம். உறவுகள் டென்ஷனாகத்தான் இருக்குமாம். பாம்பு ஆண்டு மனிதர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். அதிக ஓய்வு எடுக்க வேண்டுமாம்.
அதென்ன பாம்பு வருடம்??
முன்னரே சொன்ன கதை தான்.
சீனப் புத்தாண்டைச் சுற்றி ஒரு கதை இருக்கிறது. அதாவது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஜேட் சக்ரவர்த்தி இனி சீன வருடங்கள் மிருகங்களின் பெயரால் அழைக்கப்படும் என்று ஒரு ஆணையிட்டாரம்.
எந்தெந்த 12 மிருகங்கள் முதலில் வருகிறதோ அவை அந்த வரிசையில் இருக்கும் என்றாராம்.
அந்த சமயத்தில் எலியும் பூனையும் நல்ல நண்பர்களாம். பூனை சொன்னதாம் நான் கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கும் ஆசாமி ஆகையால் என்னை எழுப்பி விடு சீக்கிரம் போக வேண்டும் என்றதாம்.
ஆனால் எலி பூனையை எழுப்ப மறந்து விட்டது.
எலி பூனையை எழுப்ப மறந்து போனது மட்டுமல்லாமல் எப்படியாவது முதலில் சென்று இடம் பிடிக்க வேண்டும் என்று விரைந்ததாம். போகும் வழியில் எருது, புலி இதிலெல்லாம் மோதிக் கொண்டு சென்றிருக்கிறது.
எலி பார்த்தது. இவைகளோடு நம்மால் போட்டி போட முடியாது என்று எருதின் மீது ஏறிக் கொண்டது. பேரரசரிடம் நெருங்கும் போது முன்னே குதித்து முதல் ஆளாக இடம் பிடித்து விட்டதாம்.
ஆடி அசைந்து வந்த பன்றி பிடித்ததோ பன்னிரண்டாவது வருடம்.
கடைசியாக வந்த பூனைக்கு தன்னை எலி எழுப்பவேயில்லை என்ற கோபம். அன்றிலிருந்து தான் பூனையும் எலியும் சீமானும் பெரியாருமானதாக கேள்வி.
ஆக சீனப் புத்தாண்டின் மிருகங்களாக
எலி
எருது
புலி
முயல்
டிராகன்
பாம்பு
குதிரை
ஆடு
குரங்கு
சேவல்
நாய்
பன்றி
என்றவை வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மிருகங்களை குறிக்க நீங்கள் பிறந்த சீனப் புத்தாண்டின் வருடம் உங்கள் குணாதிசயங்களை ஒத்திருக்கும் என்பதும் சீனர்களின் நம்பிக்கை.
மேற்சொன்ன எலி பூனை கதை எந்த அளவு நம்பலாமோ இந்த குணாதிசய விஷயமும் அப்படித்தான் என்றாலும், நம்மூர் கொள்கை, கட்சித் தாவும் அரசியல்வாதிகள் அனைவரும் குரங்கு வருடங்களில் பிறந்திருந்தால் ஆச்சரியப்படவேண்டாம்.
சும்மா ஒரு உலூஉலுங்காட்டிக்கு நமக்கு தெரிந்த முகங்களின் சீன ஆண்டை பார்க்கலாம் என்ற ஆசையில்…..
காமராஜர் - 1903 முயல்
ஸ்டாலின். - 1953. பாம்பு வருடம்
சீமான் - 1966 குதிரை வருடம்
ராகுல் காந்தி - 1970 நாய்
மம்தா பானர்ஜீ - 1955 குதிரை ஜனவரி 5 என்பதால் குதிரையில் வருகிறார். 5 நாட்கள் கழித்து பிறந்திருந்தால் ஆடு.
நரேந்திர மோடி - 1950 புலி
(இந்த வருடங்களிலோ அதன் மிருகங்களிலோ என்னுடைய இடைச்செருகல்கள் ஏதும் இல்லை )
மற்ற தலைவர்கள்..? உங்கள் குணாதியசம் அல்லது பிறந்த வருடத்தின் சீன மிருகம் என்ன..? இங்கே பார்த்துக் கொள்ளவும்.
சரி கதையும் நம்பிக்கையும் இருக்கட்டும். எப்படி இந்த மிருகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன எனில்…
எருது, குதிரை, ஆடு, சேவல், பன்றி, நாய் வீட்டு மிருகங்கள்.
எலி, புலி, முயல், டிராகன், பாம்பு, குரங்கு இவையெல்லாம் சீனர்களுக்கு பிடித்தமான மிருகங்கள்.
இதில் மிருகங்களை யின் யாங் என்ற அடிப்படையில், அதாவது ஏறக்குறைய ஆண் பெண் அம்சங்களாக பிரித்து ஒன்றன் பின் ஒன்று வருவது போல பிரிக்கப்பட்டிருக்கிறது.
சீனப் புத்தாண்டு ஜனவரி 1 போல குறிப்பிட்ட நாளில் துவங்குவதில்லை. ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரை அது முன்னே பின்னே செல்லும். சீனர்களின் வருடம் நிலவை மையமாகக் கொண்டது என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான்.
ஆக நம்பிக்கைகள் என்பது தேச எல்லைகள், கலாச்சார எல்லைகள் கடந்து வியாபித்திருப்பது.
சீனப் புத்தாண்டு உலகின் அனைத்து நாடுகளிலும் பிரசித்தி.
இதற்கு முக்கிய காரணம் சீனப் புத்தாண்டின் போது சீனாவில் விடும் ஒரு மாதகால விடுமுறை. குறிப்பாக தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாகாணத்திலிருந்து வருவதால் இந்த விடுமுறை அவர்களுக்கு மிகவும் அவசியம். அந்த ஒரு மாதத்தில் சீனாவில் கோடிக்கணக்கான மக்கள் இடமிருந்து வலமாக, ஒவ்வொரு திசையிலும் தங்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள். இது தான் உலகின் மிகப் பெரிய மனித நாகரீகத்தின் பெரும் பயணமாக பார்க்கப்படுகிறது.
சீனாவிற்கு சுற்றுலாவிற்கு செல்பவர்கள் இந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களை தவிர்ப்பது நல்லது. விடுதிகள் ஏகப்பட்ட விலையில் இருக்கும் என்பதை தவிர உள்ளூர் மக்களின் விடுமுறையால் சுற்றுலாத்தலங்கள் முழுவதும் அநியாயத்திற்கு கூட்டம் இருக்கும்.
இந்த வாரம் துவங்கும் சீனப் புத்தாண்டு நிகழ்வில் முதல் முறையாக மலையாள சங்கம் தங்கள் கலை கலாச்சாரங்களை பறைசாற்றவிருக்கிறது.
தமிழ் பண்பாட்டுக் கழகம் ஹாங்காங் சில வருடங்களுக்கு முன்னர் இதை நிகழ்த்தியிருந்தாலும், இந்த வருடம் மலையாள சங்கம் தமிழ் சங்கத்தை விஞ்சி விடும் எண்ணத்தில் ஏக ஏற்பாட்டுடன் காத்திருக்கிறது.
Leave a comment
Upload