முன்பெல்லாம் மதுரை சித்தரை வீதிகளில் கண்ணில் யார் பட்டாலும், ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் ஆக்கி விடுவார் பாரதிராஜா. புதுமுகம் என்ற பெயரில் அவர்களை பெரிய நடிகர்களாக எத்தனையோ பேரை உருவாக்கி இருக்கிறார். வளையல் கடை பாண்டியன் ஒரு சின்ன உதாரணம்.
தலைப்புக்கும் கட்டுரைக்கும் அம்மட்டுமே சம்பந்தம். இனி விஷயம் இது தான்......
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் தற்போது மகா கும்பமேளா விழா மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாசிமணி, ஊசிமணி விற்ற பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, கும்பமேளாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த இளம்பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. பெயருக்கேற்றபடி, அவரும் மோனாலிசா போலவே அத்தனை அழகு.
மோனலிசாவின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பாசிமணி மாலைகளை விற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். அதேபோல் மோனலிசாவும் பாசிமணி விற்பனைக்காக, கடந்த சில நாட்களுக்கு முன் உ.பி-யில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வந்துள்ளார். அவரது அழகை கண்டு ரசித்த பலர், அதை தங்களின் செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர்.
அடித்தது அதிர்ஷ்டம் ! இளம்பெண் மோனலிசாவை பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தனது புதிய படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கூறுகையில், ‘‘இளம்பெண் மோனலிசாவின் உருவ தோற்றம், அவரது அப்பாவித்தனம் என்னை மிகவும் கவர்ந்தது. எனது ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக, ஒரு இளம்பெண்ணை தேடிக்கொண்டு இருந்தேன். மகாகும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனலிசாவின் படத்தை பார்த்ததும், அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வழங்க விரும்புகிறேன். இதில் அவர், ஒரு விவசாயியின் மகளாக நடிப்பதற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருதுகிறேன். மோனலிசாவை விரைவில் சந்தித்து, அவருக்கு நடிப்பு பயிற்சி அளித்து, விரைவில் எனது படத்தில் நடிக்க வைப்பேன்!’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் இதற்கு ஒப்புக்கொள்வாரா, இந்த டீல் நடந்ததா என்று இனிமேல் தான் தெரியவரும்.
மோனாலிசா பெயரை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் சனோஜ் ஜி.
Leave a comment
Upload