பாரதியின் கண்ணம்மா – சிறுகதை – பா.அய்யாசாமி
இங்கே எழுத்துச்சிற்பி வீடு எதுங்க ? என கேட்ட இரு வாலிபர்களை ஏதோ இந்த பூமிக்குச் சம்பந்தமில்லாத ஏலியன் போல் பார்த்தனர் நடைபயிற்சியில் இருந்த நகர்வாசிகள் இருவர்.
என்ன சிற்பியா ? அவர் பேரு என்னங்க ? என்று திரும்பக் கேட்டனர்.
சீ. கிருஷ்ணன், அதாங்க நேற்று இரவு இறந்துட்டாரே அவர் வீடுங்க, என்றதும்,
ஓ அவரா அப்படி கேட்க வேண்டியதுதானே.
இதோ இந்த ரைட்ல போய் அடுத்த ஒரு ரைட் எடுங்க, வாசலிலே சேர் நாலு போட்டிருக்கும் என அடையாளம் காட்டினார்கள்.
சொன்னமாதிரியே, நாற்காலி நாலு போட்டு அதில் அமர்ந்து இருந்தார்கள் .உள்ளே சென்று, அவரது சுவாசித்து ஓய்ந்து போன சடலத்தையும், வாசித்து அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களையும் ஏக்கமாய்ப் பார்த்து மனைவியிடம் ஆறுதல் கூறி அவரது வாசகர் என அறிமுகம் செய்துக் கொண்டு வாசல் வந்து அமர்ந்தனர்.
எழுத்தாளனின் வீடு ஏழை வீடாகத்தான் இருக்கனும். சாயம் பூசப்படாத அவன் எழுத்துக்கள் போலவே வீடும் சாயம் இழந்து காட்சி அளித்தது. எண்ணமும் வறுமையும் தாராளாமாக இருந்த்து தெரிந்த்து.
நகரின் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவர் அங்குமிங்கும் ஓடி ஆடிக் கொண்டு இருந்தார். அவரை அணுகி ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்த்தும் ஏன்? இது எதற்கு? என்றார்.
மாலை வாங்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை, இதை இறுதிச்செலவிற்கு உபயோகபடுத்திக்கொள்ளுங்கள் என சொன்னதும் வாங்கிக் கொண்டார்.
இங்கே வருவதற்கு வழி காட்டியவரகள் யார் என்று விசாரித்ததில் இருவரும் ஆசிரியர்கள், எனவும்,அதுவும் ஆங்கிலத்தில் வழி சொன்னவர் தமிழாசிரியர் என தெரிந்த்தும் சிரிப்புத்தான் வந்தது.
என்ன வாழ்க்கைடா இது ? காசு இருந்தும் வறுமையோட வாழ்ந்து பெருமையாக செத்து இருக்கார். எத்தனை நூல்கள் எழுதி இருப்பார்? ஆனால் அவைகளால் இவருக்கு எந்த பலனும் அடையாளமோ இல்லை.
எழுத்தாளனின் பையில் புதுப் புது எண்ணங்களும் பதிப்பில் ஏறாத எழுத்துகளும்தான் நிறைய இருக்கும் என்றும்,
எழுத்தாளர் என்பவன் ஊரில் உள்ள குளம் மாதிரி, அனைவரும் அள்ளி நீர் குடிக்கலாம், காற்றுக்காக அமரலாம், நீர் வற்றினாலும் அதில் விளையாடலாம் என கவிதையாக பேசிக்கொண்டும்,
ஊரைச் சுற்றிக் கடன் இருக்கு என்று சிலர், என்னமோ அவர்கள் போய் கடனை அடைக்கப் போவது போலும்,
அறிவு ஜீவிக்கும் அல்பாயுசுக்கும் ஏதோ தொடர்பு இருக்கனும் போல என்றும், இப்படி அல்பாயுசிலே போயிட்டாரே என புலம்பியபடி இருந்தது துக்கத்திற்கு வந்திருந்தவர்களின் பேச்சு.
போஸ்டர் ஒட்டலாமா ? என கேட்ட ஊர்காரர்களிடம் அது அவருக்கு பிடிக்காது, போஸ்டர் ஒட்டி பெயரை விளம்பரப்படுத்துவதை விட சாலைக்கு நமது பெயர் நிரந்தரமாக வைக்கும் படி நமது உழைப்பு இருக்க வேண்டும் என்ற அவரது வாசகத்தை நினைவு கூர்ந்தேன்
இரண்டு மணி நேரம் கடந்து இருக்கும், சமூகத்தை பார்த்து கண்ணீர் விடாமல், சொற்ச் சாட்டை எடுத்து விளாசிய அவரது எழுத்துக்களின் முதல் தரிசனம் செய்த அவரது கண்களை பஞ்சை வைத்து அடைத்து விழியை தானமாக எடுத்துக் கொண்டு போனார்கள்,
அடுத்த ஒரு மணி நேரத்தில் பாண்டிச்சேரி மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வந்து கையொப்பம் வாங்கிக்கொண்டு உடலை எடுத்துச்சென்றது, இதுவும் அவரின் விருப்பம் யாரும் தம்மை பின்தொடர்ந்து கொண்டாடுவது அவருக்குப் பிடிக்காது பிணமான பின்பும்.
ஆசிரியனான நான் இறந்த பின்னும் பலருக்கு பாடம் நடத்துவேன் என்று சிலேடையாகச் சொல்வார். இதோ ஒரு ஏழை பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பாடமாகப் போகிறது.
வண்டி கிளம்பியதும் வாசல் வந்த மனைவி விழுந்து வணங்கியதும், வறண்ட அவரது கண்களே காட்டியது எழுத்தாளனின் இல்லற வறுமையையும்,வாழ்வின் வெறுமையையும்.
அனைவரும் கலைந்துச் செல்ல பள்ளி ஆசிரியர், சமூக ஆர்வலர்,
புரட்சி எழுத்தாளர், சொல்சிற்பி என்ற அடையாளங்கள் எல்லாம் மறைந்து பிணம் போன பாதை என தெருவை கழுவி ஊற்றினர்கள் தெரு வாசிகள்.
வீடு அமைதி நிலைக்குத்திரும்ப பதினைந்து நாள் ஆனது.
அம்மா, உங்கள் கணவர் வேலை செய்த பள்ளியின் காவலாளியின் மகன் மற்றும் மகள் நாங்கள் எனவும், நான் அன்று துக்கத்திற்கு வந்தேன், இவள் என் தங்கை முதல் குழந்தை பிரசவமாகி இருபது நாளாகிறது, என அறிமுகப் படுத்தி இன்று தாயும்சேயும் இருவரும் நலமாக இருப்பதற்கும்
ஏன், உயிரோடு இருப்பதற்கும் காரணமே சார் தான் அம்மா,என்றான்
ஆறு வருடங்களிருக்கும் இவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள், இவளின் தோற்றத்தை வைத்து எங்கள் அப்பாவைப் கூப்பிட்டு, இவளுக்கு இரத்த சோகை இருக்கும் போலிருக்கு, அது ஒன்றும் வியாதி இல்லை குறைபாடுதான், ஆகையால் மருத்துவரிடம் சென்று இப்போதே காண்பித்து விடுவது நல்லது, பின்னாளில் பிரசவ காலத்தில் இறக்கக் கூட நேரிடலாம். நான் பயமுறுத்தவில்லை நிதர்சனத்தை கூறுகிறேன் என்று எச்சரித்ததோடு தொகையும் கொடுத்து உதவி செய்தார். பின் அது கண்டறியப்பட்டு அதற்கான மருத்துவம் எடுத்ததால் இன்று சுகப் பிரசவமாகி இருவரும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று மருத்துவர் கூறவும் அய்யாவை பார்க்க வேண்டும் என்றாள் நான்தான் விஷயத்தைக்கூறி அழைத்து வந்தேன் என்று கண் கலங்கினான்.
முதல் முறையாக தன் எழுத்தாளக் கணவனின் உண்மையானப் பலனை நினைத்து அந்த வறண்ட கண்கள் கலங்கின. எழுத்தாளர் சிந்தித்ததை மட்டும் எழுதிவிட்டு செல்வதில்லை.
பாரதி போன்று வருங்கால நிகழ்வுகளை கற்பனையாயினும் உணர்ந்து உதவி செய்ய இன்றைக்கும் பாரதிகள் ஏராளம். செயலின் பயனால் மக்கள் மனத்தில் ஏற்படும் நிம்மதியான உணர்வுதான் இறந்த பின்னும் அவனின் பெயர் வாழ்ந்து புகழ் நிலைத்து நிற்கும். அத்தகைய புகழ் தன் கணவனுக்கும் வாய்த்தது கண்டு முதல் முறையாக கணவனின் வெற்றிடத்தை நினைத்து கதறி அழுதாள் இந்த பாரதியின் கண்ணம்மா.
Leave a comment
Upload