தொடர்கள்
ஆன்மீகம்
பஞ்ச ஆரண்ய ஸ்தல தரிசன பலன்கள்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

பஞ்ச ஆரண்ய ஸ்தல தரிசனம், ஒரே நாளில் உஷத்கால பூஜை(விடியற் காலை) தொடங்கி அர்த்த ஜாம பூஜை வரை(இரவு) ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டு முறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும். பஞ்ச என்றால் ஐந்து, ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது… ஒருகாலத்தில் வனமாகத் திகழ்ந்து, இன்றைக்குக் கிராமங்களாகவும் ஊர்களாகவும் அமைந்திருக்கின்றன,
சிவபெருமான் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் அவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திரு இரும்பூளை (ஆலங்குடி), வில்வவனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களாகும்.
பஞ்ச ஆரண்யத்தேவாரப் பாடல் பெற்ற இத்தலங்கள் ஐந்தும் காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன், ஒரே நாளில் உஷத் கால பூஜை எனப்படும் அதிகாலையில் தொடங்கி ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும்.

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

தஞ்சாவூரைச் சுற்றியுள்ள தொன்மையான இந்த தலங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம். மற்றும் திருக்கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
காலை 5.30 முதல் 6.00 மணி – முல்லைவனநாதர்-திருக்கருகாவூர்
காலை 8.30 முதல் 9.30 மணி- சாட்சிநாதர் சுவாமி - அவளிவநல்லூர்
காலை 11.00 முதல் 12.30 மணி வரை– பாதாளேஸ்வர சுவாமி— அரதைப் பெரும்பாழி [அரித்துவார மங்கலம்]
மாலை 5.30 முதல் 6.00 மணி -ஆபத்சஹாயேஸ்வரர், திருஇரும்பூளை(ஆலங்குடி)
(மாலை 7.30 முதல் 8.30 மணி வரை - வில்வவனேஸ்வரர்- திருக்கொள்ளம்புதூர்.

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

திருகருக்காவூர் – முல்லை வனம் – விடியற்காலை வழிபாடு:
தஞ்சாவூரில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கருகாவூர். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது தலமாகும். இங்கே சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீமுல்லைவனநாதர். அம்பாளின் பெயர் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை.
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் பாதிக்கப்பட்ட நிருத்துவ முனிவரின் மனைவியான வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தைக் காத்து அருள்புரிந்ததால் கருக்காவூர் என்று பெயர் பெற்றது. அம்பாள் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

இத்திருத்தலத்தைப் பிரம்மன், கௌதமர், சந்திரன் ஆகியோர் வழிபட்டனர். இங்குச் சிவனுக்கு அபிஷேகம் கிடையாது, புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைப் பேறு ஆகியவை கிட்டும். மற்றும் கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் உண்டாகும்
இங்கே காலை 5.30 முதல் 6.00 மணிக்குள் உஷத் காலம் எனப்படும் அதிகாலை பூஜையை முதலில் தரிசிக்க வேண்டும்.
ஸ்தல விருட்சம் - முல்லை
ஸ்தல தீர்த்தம் - க்ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம்

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

அவளிவநல்லூர் – பாதிரி வனம் – காலை வழிபாடு:
திருக்கருகாவூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள திரு அவளிவநல்லூரை அடையலாம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 100-வது தலமாகும். இத்தல சிவனார் சாட்சிநாதர் என்றும் அம்பாள் சௌந்தர்யவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இத்தலத்தின் அர்ச்சகரின் மூத்த மகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். ஸ்தல யாத்திரை சென்று திரும்பிய கணவன் இளையவளே தன் மனைவி என்று கூறிய போது சிவபெருமான் அன்னையுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி சாட்சி கூறி ‘அவள்தான் இவள்’ என்று அவளது கணவனுக்கு அடையாளம் காட்டினார். எனவே இவ்வூர் அவளிவநல்லூர் என்றும், சிவபெருமான் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

இறைவனின் ஆணைப்படி அர்ச்சகரின் மூத்த மகள் திருக்குளத்தில் நீராடி கண்பார்வையும், அழகையும் திரும்பப் பெற்றாள். இத்தல சிவனாரை வராக மூர்த்தியும், காசியப்ப முனிவரும் வழிபட்டு பேறு பெற்றனர். இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள்.
இங்கு நடைபெறும் காலை 8.30 முதல் 9.30 மணி வரை காலைவேளை பூஜை நேரத்தில் இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு!
ஸ்தல விருட்சம் - பாதிரி
ஸ்தல தீர்த்தம் - சந்திர புட்கரணி

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

அரதைபெரும்பாழி - வன்னி வனம் - உச்சிக்கால வழிபாடு:
தஞ்சாவூர் திருவாரூர் சாலையில் அம்மாபேட்டை எனும் ஊரிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரதைப் பெரும்பாழி அல்லது அரித்துவார மங்கலம். அரதைப் பெரும்பாழி தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 99ஆவது தலமாகும். இத்தலத்தில் சிவபெருமான் பாதாளேசுவரர் என்ற திருப்பெயரிலும், அம்பாள் அலங்கார நாயகி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டி சிவனின் திருவடியை காணமுற்பட்டார். அவ்வாறு வாரக அவதாரத்தில் திருமால் தோண்டிய பள்ளம் இத்தலத்தில் இன்றும் காணப்படுகிறது. அரி என்னும் திருமால் பூமியைத் துவாரம் இட்ட இடம் ஆதலால் இவ்விடம் அரித்துவார மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

சிவனே இங்கு நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்குத் தனி சந்நிதி கிடையாது. இவரைத் தரிசித்தாலே அனைத்து நவகிரக தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனைத் தரிசித்தால் "ஹரித்துவார்" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈசுவரரைத் தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.
இத்தலத்தில் நடைபெறும் உச்சிக்கால (காலை11.00 முதல் 12.30 மணி வரை) பூஜை நேரத்தில் இங்கு வந்து தரிசிப்பது மிகவும் விஷேசம்.
ஸ்தல விருட்சம் - வன்னி
ஸ்தல தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

ஆலங்குடி - பூளை வனம் மாலை வழிபாடு:
கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கிமீ தொலைவில் ஆலங்குடி என்ற திருத்தலம் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 98-வது தலமாகும். இத்தலத்தின் ஆதிகாலப் பெயர் திருஇரும்பூளை. சிவபெருமான் ஆபத்சகாயேஸ்வரர் பெயரிலும் அம்பாள் ஏலவார் குழலியம்மை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை அருந்தி உலக உயிர்களைக் காத்த இடம் ஆதலால் இவ்விடம் ஆலங்குடி என்றானது.

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்கிறார்கள். ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். இது குரு ஸ்தலம்
முசுகுந்த சக்கரவர்த்தி தன் மந்திரியும், சிவபக்தருமான அமுதோகர் என்பவரது சிவபுண்ணியத்தில் பாதியளவைக் கேட்டு மந்திரி சம்மதிக்காததால் அவரின் தலையைக் கொய்ய உத்தரவிட்டான். மந்திரியின் தலையைக் கொய்தவுடன் அமுதோகர் என்ற சப்தம் இத்தலம் முழுவதும் கேட்டதும் அரசன் தன் தவற்றுக்கு வருந்தி இத்தல இறைவனை வணங்கி சாப விமோசனம் பெற்றார். இத்தலத்தை வழிபடக் கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப் பேறு கிடைக்கும்.
இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலமான மாலை 5.30 முதல் 6.00 மணி வரை இறைவனைத் தரிசிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.
ஸ்தல தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள்.
ஸ்தல விருட்சம் - பூளை

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

திருகொள்ளம்புதூர் - வில்வ வனம் - அர்த்தசாம வழிபாடு:
திருகொள்ளம்புதூர் கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 113-வது தலமாகும். இத்தல சிவபெருமான் வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர் எனும் பெயர்களிலும் அம்பாள் சௌந்தரநாயகி, அழகு நாச்சியார் எனும் பெயர்களிலும் அருளும் ஸ்தலம்.
திருஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் திருகொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக் கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த திருஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். அப்போது சிவபெருமான் காட்சிதர அவரை தரிசித்து பின் ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். (இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது).

Benefits of Pancha Aranya Stala Darshan..!!

விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்தியர், வசிஷ்டர், வாமதேவர், வரகுணபாண்டியன், கோசெங்கட்சோழன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டு மேன்மை அடைந்தவர் ஆவர். சித்தப் பிரமை உள்ளவர்கள், மனக்குழப்பத்தில் தவிப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனத்தெளிவு பிறக்கும். மனநோய் நீங்கும்
இத்தலம் அர்த்தசாமம் எனப்படும் இரவு (மாலை 7.30 முதல் 8.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. பஞ்ச ஆரண்ய தலங்களில் ஐந்தாவதாக இந்தத் தலத்தைத் தரிசித்து, நிறைவு செய்யலாம்
ஸ்தல விருட்சம் - வில்வம்
ஸ்தல தீர்த்தம் - பிரம்மதீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம்(அர்ஜுன தீர்த்தம்), முள்ளியாறு.

இந்த பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசித்து வாழ்வில் எல்லா வளங்களையும், சகல ஐஸ்வரியங்களையும் பெற்று சிவபெருமானின் பேரருளைப் பெறுவோம்!!