1991இல், மங்களூரில் ஒரு பெரிய தாதாவின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் விழாவில்,ஒரு இளம் ஜோடிக்கும் தாதா மகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில், எதிர்பாராமல் தாதா மகன் இறந்து போக,
காதல் ஜோடி தப்பித்து ஓடி, கேரளாவின் வயநாட்டுப் பக்கத்துக் காட்டிலுள்ள பழமையான ஓரு கிளப்பில் தஞ்சம் அடைய நேரிடுகிறது.
ஏகப்பட்ட நவீன துப்பாக்கிகள்,அடியாட் கள் சகிதம்,தாதாவின் குழு வயநாட்டின் நடுக்காட்டில் உள்ள இவர்களை அழிக்க கிளப் மேல் படையெடுக்கிறது.
துளிக் கூட சமம் இல்லாத ரெண்டு பார்ட்டிக்குள் சண்டையா? என்று நினைக்காதீர்கள்.
அந்த கிளப்பின் பெயரே ரைஃபிள் கிளப் தான்!! பரம்பரை பரம்பரையாக அங்கு வசிக்கும் ஆண்,பெண், எல்லாரும் தீபாவளி பட்டாசு சுடுவதைப் போல துப்பாக்கி,வெடிகுண்டு, எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக, சுட, வெடிக்கக் கூடியவர்கள். மிகக் கை தேர்ந்தவர்கள்.
"எங்க துப்பாக்கிக்கு விலை கிடையாது. வாரிசுதான் உண்டு." என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள்.
எல்லோரும் நடுக்காட்டில் வாழும், வேட்டையை சுவாசிக்கும்,அனுபவிக்கும், பூஜிக்கும் , நாகரீகமான வேட்டைக்காரர்கள்.
நம் காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுக்கும் கிளப் வாசிகள், தாதாவின் படையுடன் சண்டையிட,.... துப்பாக்கி வியாபாரிகளான தாதாவின் சைடு ஜெயிக்கிறதா?, துப்பாக்கியுடன் வாழ்பவர்களான கிளப் வாசிகள் ஜெயிக்கிறார்களா?.....என்பது தான் படத்தின் கரு.
அந்தக்காலத்து கிளிண்ட் ஈஸ்ட்வுட்- செர்ஜியோ லியோனியின் ஹாலிவுட் வெஸ்டர்ன் ட்ரைலஜி( Trilogy ) படங்கள் போல, பின்னணி இசை,கேமரா, சண்டை, எல்லாம் கனகச்சிதம்.
அங்கங்கே நகைச்சுவை பொங்குகிறது.
விருந்தினரான பிரபல நடிகர் ஒருவருக்கு, கிளப் பெண்மணி ஒருவர் முள்ளம்பன்றிக் கறியை அன்புடன் பரிமாறும் போது நடிகர்" இது நீங்கள் செய்ததா? " என்று உபசாரத்துக்காகக் கேட்
கிறார்.
"இல்லை இல்லை. செய்தது சமையல்காரி தான். ஆனால் முள்ளம்பன்றியை சுட்டுக் கொன்றது இவள் தான்." என்று அந்த வீரப் பெண்மணியை நோக்கி கையைக் காட்டுகிறார்,அவரது வேட்டைக்காரக் கணவர்.
வீராவேசமாக தாதா ஆட்களுக்கும்,
ரைஃபிள் கிளப் ஆட்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடக்கும் போது இரு கிளப் பெண்களான நாத்தனார்- மதினிக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.
எதற்கு?... "என் புல்லட்டை நீ எப்படி எனக்கு தெரியாமல் எடுக்கலாம்?.திருப்பிக்கொடு." ....என்று தான் சண்டை!!
இப்படி நிறைய....
"இது மாதிரி எல்லாம் கூட நடக்க முடியுமா என்ன?" என்று எண்ணக்கூடிய ஒரு கதையை யோசித்து படமாக்க, ஏரா ளமான கற்பனையும்,தில்லும் வேண்டும்.
அது மலையாள சினிமாவில் நிறைய இருக்கிறது.
இந்தக் கதையோடு நகைச்சுவையும் புத்திசாலித்தனமும் சேர்த்து,படமாக எடுப்பது என்பது இலகுவான காரியம் இல்லை. அதையும் நன்கு செய்திருக்கிறாரர்கள்.
நிறைய கதாபாத்திரங்கள். ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் தனியாகக் கிடையாது. ஆனால்,பாத்திரத்துக்கு வெகுவாகப் பொருந்தும் நடிகர்கள்.
திலீஷ் போத்தன், அனுராக் தாக்கூர். விஜயராகவன், வாணி விஸ்வநாத் தொடங்கி எல்லாருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.
நேர்த்தியான திகில் பின்னணி இசை.
நிஜமா? இல்லை சினிமா ஷூட்டிங்கா? என்று புரியாத அளவுக்கு சிலிர்க்க வைக்கும் காட்டுப்பன்றி,புலி, வேட்டை நாய்,சம்பந்தப்பட்ட வேட்டைக் காட்சிகள்.
சில கேள்விகள் படம் பார்க்கும்போது நமக்கு தோன்றும் வாய்ப்பு உண்டு.
இந்த மாதிரி படத்துக்கு பாடல்கள் எதற்கு?
இவ்வளவு முட்டாள்களாக தாதாக்கள் இருந்தால் அவர்களும், அவர்கள் செய்யும் தொழிலும், உருப்பட முடியுமா?
பள்ளிக்கூட வகுப்பு அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர் போல, இவ்வளவு கதாபாத்திரங்கள் அவசியமா.?
வயநாட்டுக் காட்டில் இஷ்டப்படி துப்பாக்கி சண்டை நடக்கிறதே?. கண்ட மிருகங்களையும்( குரங்கு உள்பட) ரைஃ பிள் கிளப் ஆளுங்க சகட்டு மேனிக்கு சுட்டுக்கொன்று விட்டு, ஃபிரை பண்ணி வேற தின்றாங்களே?
கேள்வி கேட்க,போலீஸோ, காட்டு இலக்காவோ எதுவுமே அங்கு கிடையாதா?
என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தோன்றும்.
ஆனால், ஸ்டைலும்,நகைச்சுவையும் படத்தில் அழகாகக் கலந்து,வன்முறைக் காட்சிகளின் தாக்கத்தை பின்னுக்கு தள்ளும் போது மேற்கண்ட எந்த கேள்வியும் ஒரு பொருட்டாகத் தோன்றுவதில்லை.
இயக்குனர் ஆஷிக் அபு தலைமையில் சிறப்பான டீம் ஒர்க்.
படத்துக்கு,மூன்றரை நட்சத்திரங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்.
இந்தப் படத்தை நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி யில் காணலாம்.
Leave a comment
Upload