தொடர்கள்
நெகிழ்ச்சி
" குடியரசு விழா.... வெல்லிங்டன் இராணுவ முகாம் ஒரு சிறப்பு பார்வை " - ஸ்வேதா அப்புதாஸ் .

இந்தியாவின் 76 வது குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் தருணத்தில் நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் ராணுவ முகாம் பக்கம் திரும்பி பார்க்கவைக்கிறது .

20250023210913968.jpeg

இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் மிக பெரிய கௌரவத்தையும் ஏற்படுத்தும் கம்பிரமான இராணுவ முகாம் .

பிரிட்டிஷ் காலத்தில் இந்த இராணுவ முகாம் ஆரம்பத்தில் ஜெகதளா என்று அழைக்கப்பட்டது .

ஜெகதளா என்பது இங்கு உள்ள படுக கிராமத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது .

1852 ஆம் வருடம் அன்றைய இராணுவ தலைவர் சர் .ரிச்சர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் ஜெகதளாவை அயர்ன் டியூக் நினைவாக வெல்லிங்டன் என்ற பெயரை மாற்ற உத்தரவிட்டார் .

நீலகிரியில் ஒரு சுகாதார நிலையம் sanatorium துவக்கும் எண்ணமிருந்தது .

1860 ஆம் ஆண்டு சர் சார்ல்ஸ் டிரெவெல்யன் " இந்த இராணுவ முகாமிற்கு வெல்லிங்டன் என்ற பெயர் தான் சரியானது" என்பதை உறுதிசெய்தார் .

வெல்லிங்டன் பேரக்ஸ் இராணுவ முகாம் கட்டுமான பணிகள் 1852ஆம் வருடம் துவங்கி 1860 ஆம் ஆண்டு முழுமையடைந்தது .

1942 முதல் இந்த முகாமை மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் தன் வசம் ஏற்றுக்கொண்டது .

தற்போது வெலிங்டன் பேரக்ஸ் முதல் மெட்ராஸ் ரெஜிமென்டின் ஜெனரல் .எஸ் .எம் .ஸ்ரீநாகேஷ் பெயரை தாங்கி லெப்ட் ரயிட் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது .

வெலிங்டன் இராணுவ முகாமில் மிக முக்கியமான ஒன்று இந்திய இராணுவ பயிற்சி கல்லூரி !. இது இந்தியாவின் மிக பழமையான இராணுவ நிறுவனம் .

1905 ஆம் ஆண்டு நாசிக் அருகில் உள்ள தியோலாலி என்ற இடத்தில் துவக்க பட்டது .

பின்னர் 1907 ஆம் ஆண்டு தற்போது பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவிற்கு மாற்றப்பட்டது .

1947 சுதந்திரத்திற்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து கர்னல் .எஸ் .டி .வெர்மா பிரெக்டெர் பதவி உயர்வை தொடர்ந்து முதல் இந்திய இராணுவ தளபதியாக பொறுப்பேற்றவுடன் தமிழ் நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் இராணுவ முகாமிற்கு இந்திய இராணுவ கல்லூரியை இடமாற்றம் செய்தார் .

முதல் ஊழியர் படிப்பு 1948 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் துவங்கியுள்ளது .

முதல் வருடத்தில் இந்திய இராணுவத்தை சேர்ந்த 46 அதிகாரிகளும் , இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படையை சேர்ந்த 2 அதிகாரிகள் பயின்றனர் .

1949 ஆம் ஆண்டு விமானப்பிரிவு துவக்கப்பட்டது மேலும் 1950 ஆம் வருடம் கடற்படைப்பிரிவு துவக்கப்பட்டது .

இதை தொடர்ந்து பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது ( Defence Service staff college )

டி எஸ் எஸ் சி ஐந்தாம் வருடத்தில் நட்பு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் , ஆறாவது வருடத்தில் அரசுஊழியர்களும் இந்த கல்லுரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் .

பாதுகாப்பு எம் எஸ் சி படிப்பு சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது .

பாகிஸ்தான் , இலங்கை , மொரிஷியா , நேபால் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் மாணவர்கள் இங்கு படிப்பது இந்த கல்லுரியின் முக்கியத்துவம் .

20250023211525815.jpg

இந்த கல்லூரியில் பயின்ற இராணுவ தளபதிகள் பீல்ட் மார்ஷல் சாம் மானெக் க்ஷா .மற்றும் 21 பேரில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஜெனரல் .பிபின் ராவத் அடக்கம் .

20250023211547956.jpg

வெளிநாட்டு தளபதிகளும் இந்த கல்லுரியில் பயின்றவர்கள் .

முகமது புகாரி நைஜீரிய ஜனாதிபதி ,

அட்மிரல் பசில் குணசேகர இலங்கை கடற்படை முன்னாள் தளபதி என்று பலர் பயின்றுள்ளனர் .

தேசிய நெடுஞ்சாலையையும் இராணுவ முகாமை இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாலம் மானெக்க்ஷா பிரிட்ஜ்.

இந்த பாலம் 1858 ஆம் வருடம் கட்டுமானத்தை துவங்கி பாதியில் இடிந்து விட்டது .

பின்னர் 1878 யில்

பர்மா தேக்கு மரத்தால் மைனலை ஆற்றின் மேல் கட்டப்பட்டு கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டதால் கரும்பாலம் ( Black Bridge) என்று தான் அழைக்கப்பட்டாலும் இதற்கு வாட்டர்லூ பிரிட்ஜ் என்று பெயர் சூட்டப்பட்டது .

2009 ஆம் வருடம் இந்த பாலம் கான்க்ரீட் பாலமாக கட்டப்பட்டு பீல்ட் மார்ஷல் சாம் மானெக் க்ஷா பெயர் சூட்டப்பட்டது .

மற்றுமொரு முக்கியமான இடம் சுற்றுலாக்களையும் கவர்ந்துள்ளது அது தான் போர் நினைவு தூண் (War memorial )

1945 இரண்டாம் உலகப்போருக்கு பின் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் நினைவாக இந்த தூண் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு கம்பிரமாக நிற்கிறது இந்த தூண்.

போர் வீரர்களின் நினைவு தினம் அனுசரிக்கும் போது இராணுவ உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது ஒரு சிறப்பான சோக வைபவம் .

20250023212427623.jpeg

பெரும்பாலான இந்திய ஜனாதிபதிகள் வெலிங்டன் ராணுவ முகாம் மற்றும் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு விஜயம் செய்து இராணுவ பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது ஒரு முக்கியமான பணியாக டெல்லியில் இருந்து பறந்து வருவதை மிஸ் செய்வதில்லை .

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நம் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வெல்லிங்டன் இராணுவ கல்லூரிக்கு விஜயம் செய்து முப்படை பயிற்சி அதிகார்களை சந்தித்து கலந்துரையாடி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படிப்பட்ட பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிக்க வெலிங்டன் இராணுவ முகாம் மற்றும் இராணுவ பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு இந்த குடியரசு நாளில் வணக்கமும் சலியூட்டும்...