தொடர்கள்
பொது
பெண்களே சற்று பொறுங்கள் - மரியா சிவானந்தம்

20250024180238800.jpeg

உலக மக்களின் கனவு தேசம் அமெரிக்கா. திறமை மிக்க இளைஞர்கள் கால் பதிக்க விரும்பும் நாடு. "யு எஸ்" என்னும் இரண்டெழுத்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் மந்திரமாகவே இருக்கிறது.

வளம் கொழிக்கும் நாடாக கருதப்படும் அம்மண்ணில் வேரூன்றி, கிளை பரப்பி வசதிகளுடன் வாழ விரும்பும் ஆவல் நம்மவர்களுக்கு இன்று நேற்றல்ல மூன்று நான்கு தலைமுறைகளாகவே இருக்கிறது. படிப்பு, வேலை என்று அமெரிக்கா செல்பவர்கள், அங்கு குடியுரிமை பெற்று வசதியான வாழ்க்கை அமைத்துக் கொள்வதுடன் அமெரிக்க அரசியலிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்க வாழ் ஆசியர்களில், இந்தியர்களே எண்ணிக்கையில் முதலிடம் பெறுகிறார்கள். ஒரு கணக்கீட்டின் படி 4.4 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்திய வம்சாவளியினர் தொழிற்நுட்பம், கணினி, பொறியியல், நீதித்துறை,மருத்துவம் போன்ற துறைகளில் தலைமைப் பதவிகளை அலங்கரித்து காலம் காலமாக அமெரிக்காவின் பொருளாதார மேம்பாட்டுக்குத் துணை நிற்பவர்கள். அமெரிக்க நாடும் "இந்திய அமெரிக்கர்"களுக்கு பொருளும், அங்கீகாரமும் மரியாதையும் தந்து உயர்த்தி உள்ளது.

அரசியல் செல்வாக்கும், புகழும் இந்தியர்களைத் தேடி வந்துள்ளது. 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப் படிக்க சென்ற சியாமளா கோபாலனின் மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்க குடியரசின் முன்னாள் துணை அதிபர். இந்நாள் துணைஅதிபரின் துணைவி உஷா வான்சே ஆந்திர மாநிலத்து மகள்.

சமீபத்தில் அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்ட கையோடு ஓர் அதிரடி அரசாணையில் கையொப்பம் இட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை அமெரிக்க குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை இருந்த விதிகளின்படி H-1B விசா( for Specialty Occupation )போன்ற தற்காலிக விசாவில் இருக்கும் அயல்நாட்டவருக்கு அமெரிக்க மண்ணில் குழந்தை பிறந்தால் அக்குழந்தை 'அமெரிக்க குடிமகன்' என்ற உரிமை இருந்தது.குடியுரிமை பிறப்புரிமையாக இருந்து வந்தது.

20250024180310621.jpeg

அமெரிக்க குடியுரிமை சட்டத்தின் 14 ஆம் சட்டத்திருத்தம் , “All persons born or naturalized in the United States, and subject to the jurisdiction thereof, are citizens of the United States and of the State wherein they reside.”என்று சொல்கிறது.

தற்போது அந்த உரிமையில் மாற்றம் செய்வதாக ட்ரம்ப் அரசாணை பிறப்பித்துள்ளார். இனி அமெரிக்காவில் பிறப்புரிமையை வைத்து யாரும் குடியுரிமையைப் பெற முடியாது என்று அவர் அறிவித்துள்ளார். H-1B மட்டும் அல்ல, வணிகம், விளையாட்டு, சுற்றுப்பயணம், கம்பெனி மாறுதலில் செல்பவர்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட தற்காலிக விசாக்களில் அமெரிக்கா செல்பவர்களின் குழந்தைகளும் இனி குடியுரிமை கோர முடியாது.

இந்த அரசாணை அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. அங்கு வாழும் இளம் இந்தியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஒரு பிரளயமே வந்தது போல கவலையில் மூழ்கி உள்ளனர். ட்ரம்ப் கையெழுத்து இட்ட சில மணி நேரத்தில் அதை எதிர்த்து நியூ ஹாம்ஷயரில் உள்ள குடியேற்ற வக்கீல்கள் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 22 மாகாணங்கள் சார்பில் பாஸ்டன் மற்றும் சியாட்டிலில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு விட்டன.

அமெரிக்காவின் வளர்ச்சிக்குத் திறமையான வெளிநாட்டவரின் பங்களிப்பு தேவை என்பதால் H-1B விசா நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் என்று ட்ரம்ப் தொடர்ந்து அறிக்கை விடுகிறார். இந்த விசாவில் சென்று இருப்பவர்கள் அதிர்ச்சியும், மன உளைச்சலும் கொண்டுள்ளனர்.

அரசாணை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் இச்சட்டம் அமல் படுத்தப்படுவதால் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையை மொய்க்கிறார்கள். பிரசவ தேதிக்கு முன்பே சிசேரியன் வழியாக அவசரமாக குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவர்களை அணுகுகிறார்கள்.

மகப்பேறு மருத்துவர், டாக்டர் S.D சர்மா தன் மகப்பேறு மருத்துவமனையில் இவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்ள வரும் பெண்கள் கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள வரிசையில் இருப்பவர்களில் ஏழு மாத கர்ப்பிணிகளும் இருப்பதாக சொல்கிறார். இது எத்தனை அபத்தம் ! குழந்தையின் வளர்ச்சி முழுமையாகும் முன்பே பெற்றுக் கொள்வது தாய்க்கும், சேய்க்கும் உடல், மன நலத்தில் ஆபத்தைக் கொண்டு வரும் அல்லவா?

20250024180339248.jpeg

இந்த குடியுரிமை திருத்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோபெனுர் இப்போது இடைக்கால தடை விதித்துள்ளார். இந்த அரசாணை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். 'பிறப்புசார் குடியுரிமை' மறுக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்காது. அவர்கள் பெரியவர்கள் ஆனால் வாக்குரிமை, வேலை வாய்ப்பு போன்ற உரிமைகளும் பறிபோகும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த இடைக்காலத்தடை குழப்பமும், கவலையும் கொண்ட அமெரிக்கா வாழ் இந்திய கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு ஆறுதலைத் தந்துள்ளது. பிரசவ தேதி வரை பொறுமை காக்க வழி பிறந்துள்ளது.

வழக்கு விசாரணை தொடரும் என்பதால், உலகின் கோடிக்கணக்கான கண்கள் அமெரிக்காவை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசாணைக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் , ட்ரம்ப் நாடாளுமன்றங்களின் இரு அவைகளின் சம்மதம் பெற்று பிறப்பு சார் குடியுரிமையை தடை செய்ய முடியும்.