தொடர்கள்
அனுபவம்
தரை மீண்ட தாஸன் - மோகன் ஜி


20250023221001618.jpg

மகரஜோதி 2025 சபரிமலை யாத்திரை பூர்த்தியாகி தரையிறங்கி விட்டேன்.

ருத்திராக்ஷமும், துளசியும், ஸ்படிகமும், பவிழமும் மாலைகளாய்ப் புரண்ட மார்பு வெறிச்சோடி விட்டது.

மனதுக்குகந்தவர்கள் பலரும் அலைபேசியில் அழைத்துப் பேசுவதும் நல விசாரிப்புகளும் ஆசிகோரலும் நடந்த வண்ணம் நேரம் செல்கிறது.

புத்தகங்கள் கையைப்பிடித்து இழுக்கின்றன.

'கவிதை செய்யலாம் வரியா?' என கண் இமைகள் துடிக்க ஆரம்பித்தாயிற்று.

பொங்கித் ததும்பும் மனதோ ஐயனின் பரவச லாகிரியிலிருந்து மீள ஒப்புவதில்லை. இது நினைவு தெரிந்த நாள் தொட்டு நடக்கிற நாடகம்தானே?

முன்பெல்லாம் மலையிலிருந்து திரும்புகையில் சேலத்தில் வசித்த அக்கா வீட்டுக்குத்தான் நேரே செல்வேன்.

அக்காவின் பிள்ளைகள் தேங்காய் நார், செங்கல், ஸ்பான்ஞ் என்று கையில் கிடைத்ததையெல்லாம் கொண்டு என்னைத் தேய்த்துக் குளிப்பாட்டும் வைபவம் ஒரு ரெண்டு மணி நேரம் நடக்கும்.

பரபரவென்று அக்கா ஏதேதோ சமைப்பாள். மாலையில் மாமாவுடன் ஒரு சினிமா. இரண்டு நாள் சீராட்டிவிட்டு அழுதபடி என்னை வழியனுப்புவாள்.

அங்கிருந்து கடலூரில் எங்கள் வீட்டுக்கு வருவேன். அப்பா இரண்டு நாட்கள் தூங்காமல் காத்திருப்பார். சேலத்தில் ஒரு நாள் இருந்தால் போதாதா என்று அம்மா கடிந்து கொள்வாள்.

வீட்டில் விக்ரஹங்களுக்கெல்லாம் விஸ்தாரமாக அபிஷேகம் செய்து முடிக்கையில் அம்மா இலை போட்டிருப்பாள்.

நினைவு தெரிந்த நாள்முதல் ருசி மாறாத அவளின் கைபக்குவம்.. காணாததைக் கண்டவன் போல் நான் சாப்பிடுவதை அருகிருந்து ரசிக்கும் அப்பா. இங்கென்ன வேடிக்கை என்று அவரை விரட்டும் அம்மா.

தாடிமீசையை எடுக்க சலூனுக்கு விரட்டுவாள். ஏனோ அம்மாவுக்கு தாடி வைத்தாலே பிடிப்பதில்லை. சலூனுக்குப் போய்விட்டு திரும்பவந்து குளித்து வந்தவுடன் அம்மா நெற்றியில் விபூதி இட்டு விடுவாள். திருஷ்டி கழிப்பாள்.

‘என் பிள்ளை மாதிரி அழகனுண்டோ?’ என்ற கர்வம் கண்ணில் காட்டுவாள். காக்கைக்கும் தன் குஞ்சு….

பொல்லாத காலம்….

அக்கா இல்லாத சேலத்திற்குச் செல்ல மனம் ஒப்புவதில்லை.

அப்பா அம்மா இல்லாத கடலூரோ நினைவில் மட்டுமே நிரடுகிறது.

மும்பை திரும்பிய விமானத்தில் அடுத்த இருக்கையில் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தாள். அப்படியே அம்மா ஜாடை.

இரண்டு மூன்றுமுறை என்னைப் பார்த்து புன்னகைத்தவள், என் தலையை வருடி ‘காபி தரவாடா?’ என்று கேட்க மாட்டாளோ?!

வீடு திரும்பி வாசலில் தேங்காய் உடைத்தேன்.

உள்ளே அக்ஷரா காத்திருந்தாள். உள்ளே போய் ஈர டவலும் லிக்விட் சோப் பாட்டிலுடன் வந்தாள். காலை நீட்டச் சொல்லி பாதங்களை மென்மையாகத் துடைத்து விட்டாள்.

அம்மா இல்லை என்று அசடனாகவல்லவோ வெம்பியிருக்கிறேன்?!

சுவாமியே சரணம் அய்யப்பா.