தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு    நற்றிணை 17 -மரியா சிவானந்தம் 

20250023220052881.jpg

இருள் கவிய விண்மீன்கள் ஆட்சி செய்யும் இரவு நேரம் அது .

கோட்டையின் காவலை ஒத்த காவல் கொண்ட மாளிகை. அங்கே பதுங்கி பதுங்கி வருகிறான் அக்கள்வன்.

அவ்வீட்டில் வாழும் தன் உள்ளங்கவர் காதலியைக் காணவே அந்த இருளில் வந்துள்ளான். அவன் பாதம் படும் இடம் கூட அவனால் உணர முடியவில்லை .

ஒரே மழை!

மழையும், இருளும் சூழ்ந்த அந்த இடத்தில் அவன் கைகளைப் பற்றி இழுக்கிறது ஓர் உருவம்.

"யார் ?" என்று திகைக்க அவன் முன் வருகிறாள் அவள் காதலியின் தோழி.

"இந்த இரவு நேரத்தில் நீ இங்கு என்ன செய்கிறாய்? நாளை பகல் பொழுதில் வந்து தலைவியைச் சந்தித்துக் கொள்" என்று உரிமையுடன் அறிவுறுத்துகிறாள் அத்தோழி.

நற்றிணை விவரிக்கும் இக்காட்சியின் விளக்கம் இதோ!

நள்ளிரவில் வந்து நிற்கும் தலைவனை நோக்கி தோழி சொல்கிறாள்.

" பெருமலைகள் மிகுந்த பகுதிக்குத் தலைவனே!

நீ இவ்வாறு இரவில் வந்துச்செல்வது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

கட்டுக்காவல் மிகுந்த எம் இல்லத்தின் காவலை எல்லாம் கடந்து, இருளில் உன் பாதம் வைக்கும் இடம் அறியாமல், ஒதுங்கிச் சென்று கவனமாக அடி எடுத்து வைத்து இங்கு வந்திருக்கிறாய். உன் பேரன்பு உயர்ந்தது.

கொறுக்கச்சி என்னும் நாணற்புல் முளைத்து அடர்ந்த பெருமலைப்பாதையில் அமைந்த கிராமத்து மக்கள் கள் பருகுபவர்கள் மட்டுமல்ல , அவர்கள் அதிக கோபம் கொள்பவர்கள். அவர்கள் உன் வரவைப் பற்றி தூற்றி பேசுவார்கள்.

இம்மலை முகட்டில் மழை மேகம் வந்து தங்கி உள்ளது . பேரொலியுடன் இடி இடித்து , மலைக்குகைகளில் எதிரொலிக்கிறது.

மழை சூழ்ந்த இரவு வேளைகளில் , எங்கள் நலம் அறிய நீ வீட்டுக்கு வர வேண்டாம்.

நாளை பகல் நேரத்தில் நீ எங்களை சந்திக்கலாம்.

நாங்கள் உன் புகழையும், உன் மலையின் புகழையும் பாடிக் கொண்டு, தினைப்புனத்தில் காவல் இருப்போம்.

நீ அங்கு வந்து உன் காதலியைச் சந்திக்கலாம், அதனால் பல சிக்கல்களை தவிர்க்கலாம் " என்றாள் தோழி

அந்த நற்றிணைப் பாடல் இதுவே.

நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்
பேர் அன்பினையே பெருங் கல் நாட
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்
சிறு தினை காக்குவம் சேறும் அதனால்
பகல் வந்தீமோ பல் படர் அகல
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடு இமிழ் விடர் முகை முழங்க
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே

(நற்றிணை-156)

கண்ணங் கொற்றனார் எழுதிய குறிஞ்சித்திணைப் பாடல், ஒரு அழகான காட்சியை சித்திரமாக காட்டுகிறது.

மேலும் ஓர் அழகான பாடலுடன் அடுத்த இதழில் சந்திப்போம்.

-தொடரும்