எங்கள் மண்டல மேலாளர் நான் பணிபுரிந்த வங்கிக் கிளைக்கு பதறிக் கொண்டு வந்தார். வாசலிலேயே நின்றிருந்த ஒரு அதிகாரியிடம் ‘மோகன் சாருக்கு என்னாச்சுப்பா?’ என்ற கேட்டபடி கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே நுழைவதைப் பார்த்தேன். அவரை வரவேற்க எழுந்து வந்தேன்.
“மை காட்! யூ ஆர் இன் டாக்ட்! உனக்கு ஒண்ணும் ஆகலையே! உன் பிராஞ்சின் போனை சரிபண்ணி வச்சுக்க மாட்டியா? எல்லோரையும் பதறடிச்சுட்டியே பிரதர்! “
என்றபடி என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார். அவர் முகத்தில் ஒரு பெரிய பிரச்னை சுமுகமாக முடிந்த நிம்மதியும் ஆசுவாசமும் தெரிந்தது.
அவர் சொன்னதில் என் தொலைபேசி வேலை செய்யாதது ஒன்று மட்டுமே எனக்குப் புரிந்தது.
‘என்ன சொல்றீங்க சார்!’ என்று வினவினேன்.
“முதல்லே எனக்கொரு ஸ்ட்ராங்க் காபி வரவழைங்க மோகன்! ….மை காட்!” என்று தலைமுடியை சிலுப்பிக் கொண்டார்.
உன் கிளையை போனில் பிடிக்க போராடிக்கிட்டிருக்கோம். ரிங் அடிச்சா தானே?”
“ சார்! நேற்றிலிருந்து இங்க எங்கேயும் போன் வேலை செய்யல்லை. அதான் உங்களுக்கு லைன் கிடைக்கல்லே. என்னாச்சு சார்? எனி பிராப்ளம்?”
‘செல்’என்றால் தமிழில் ‘போய்யா’ என்றும் ஆங்கிலத்தில் ‘சிறையின் அறை’ என்று மட்டுமே அர்த்தம் இருந்த தொண்ணூறுகளின் காலம்.
“எல்லாமே காலையிலிருந்து பிராப்ளம் தான் மோகன். நீ பெரிய கார் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டதா ஒரு நியூஸ் பரவி, நம்ம ஜி.எம் சார் என்னைப் பதற்றத்தோடு கூப்பிட்டார். உன் கிளையை போனில் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லையாதலால் ‘உடனே மோகன் பிராஞ்சுக்கு ஓடு. என்ன விவரம் என்று கையோடு என்னைக் கூப்பிட்டு சொல்லு. அவனுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்வோம் என்று என்னை விரட்டி விட்டார் மோகன்”
“நான் கல்லு குண்டு மாதிரி இருக்கேனே சார்? எதோ தப்பான நியூஸ்” என்றேன்.
“உடனே என்னோடு கிளம்புங்க. வெளியில் போய் ஜிஎம் சாருக்கு உடனே போன் செய்வோம் வாங்க!” என்றார் அந்த மண்டல மேலாளர்.
போனோம். ஜிஎம் சாரை போனில் பிடித்தேன்.
“என் BPயை ஏத்தி விட்டுட்டியே மோகன்! எனக்கு சென்னை ஸோனல் ஆபிஸில் இந்த விவரம் சொன்னார்கள். அதான் பதறி போயிட்டேன். இனிமே கார்லயே ஏறாதே! முதல்லே உனக்கு சுத்தி போடச் சொல்லு! நல்லா நியூஸ் கொடுக்குறாங்க பாரு!” என்று முடித்தார்.
மேலும் விசாரிக்கையில் அண்மைக்காலம் வரை நான் பணிபுரிந்த கடலூர் கிளையிலிருந்து இந்த விபத்து செய்தி வந்ததாக அறிந்தேன். அங்கு விசாரித்தேன். அந்த மேனேஜரிடம் இந்த செய்தியைச் சொன்னது அந்தக் கிளையின் ஒரு நல்ல வாடிக்கையாளர். அவருடைய பத்து வயசு பிள்ளை என் இளைய மகனுடைய நெருங்கிய நண்பன். ஆஹா!எங்கயோ இடிக்குதே….,
என்ன ஆகியிருக்கும் என்று என் மனைவியும் நானும் குழம்பிக் கொண்டிருக்கையில், நான்கு நாட்களுக்கு முன்பு அந்தக் கடலூர் பயலுக்கு என் இளையவன் கடிதம் எழுதியதாக பெரிய பிள்ளை தெரிவித்தான்.
இளையவன் தன் நண்பனை ‘ஏப்ரல் ஃபூல்’ செய்வதற்காக, இடது கையால் அந்த லெட்டரைக் கிறுக்கியிருக்கிறான். குடும்பத்தோடு காரில் செல்கையில் பெரிய விபத்து நடந்து எல்லோருக்கும் நன்கு அடிபட்டு விட்டது என்றும் வலது கையில் அடிபட்டிருப்பதால் இடது கையில் எழுதுவதாகவும் உடான்ஸ் விட்டிருக்கிறான். அந்தக் கடிதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி கிடைக்குமாறு நான்கு நாட்கள் முன்பாகவே எழுதிப் போட்டிருக்கிறான்!
ஒரு வாரம் கழித்து மீண்டுமொரு கடிதத்தில் ‘ஏமாந்தியா?’ என்று நண்பனை வெறுப்பேற்ற திட்டமிட்டிருப்பதாகவும் அவன் சொன்னான்.
ஆனால் அடுத்த ஒரு வாரகாலம் முழுதும் நான் தான் ஏப்ரல் அசடனாக இளித்துக் கொண்டிருந்தேன். வங்கி நண்பர்கள், விஷயம் கேள்விப்பட்ட கடலூர் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் சரியாகிவிட்ட என் தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பு கொண்டபடி இருந்தார்கள்.
ஒரு உற்ற நண்பனோ, ‘உனக்கு அப்போ ஒண்ணுமே ஆகல்லையாடா? விஷயம் சப்புன்னு முடிஞ்சு போச்சே! எல்லாம் ஜெயந்தியோட தாலிபாக்கியம்’ என்று வெறுப்பேற்றினான். விசாரிப்புகளுக்கு பதில் சொல்லி சொல்லியே ஒரு வழியாகி விட்டேன்.
“உன் மடத்தனமான செயலால் எனக்கு எவ்வளவு பிரச்சனை பாரு” என்று இளைய மகனைத் திட்டினேன்.
அவன் தலையை ஒரு பக்கமாய் சாய்த்துக் கொண்டு, ”நான் லெட்டர் போட்டதால் தான் உன்மேல் எல்லோரும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது இல்லே? என்னைத் திட்டறதை விட்டுவிட்டு எனக்கு நீங்க ட்ரீட் கொடுக்கறது தான் நியாயம்ப்பா! ஹோட்டலுக்கு போலாமா?”
“என்னங்க! உங்க முக்கியமான மற்ற நண்பர்களை ஒருத்தொருத்தரா கூப்பிட்டு, உங்களுக்கு ஒண்ணுமே ஆகல்லேன்னு சொல்லிடுங்க” என்று சகதர்மினி அடுத்த பரிந்துரை செய்தாள்.
நம்ம கெரகம்… சுத்தியடிக்குது!
அடுத்த நாள் எங்க ஜி. எம் சார் கூப்பிட்டார். “அப்புறமா நீ கார்ல ஏறல்லை தானே?”
“ஆமாம் சார்! இப்பல்லாம் ராஜா ராணா பிரதாப் சிங் போல குதிரையேறித் தான் ஊர் சுத்தறேன்”
“நீ செய்தாலும் செய்வே! ராணாவோட குதிரையின் பேரைச் சொல்லு பார்ப்போம்?”
“ தெரியும் சார்! அதும் பேரு லேம்ப்ரட்டா தானே?”
“ சரியாப் போச்சு’! அது சேடக் மோகன்! உனக்கு உன் பிள்ளை செஞ்சது தப்பேயில்லெ!” என்று சிரித்தார்.
ஸ்கூட்டர் ஹெட்லைட் பல்பு எவ்ளோ வாட்ஸ் தெரியுமா?!
Leave a comment
Upload