தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் பாவப் பட்ட போலீஸ்

20241127232930772.jpg

இந்தியாவில் ராணுவம் நவீனப்படுத்தப்பட்ட அளவு, காவல்துறை இன்னும் நவீனப்படுத்தப்படவில்லை. இதனால் தான் குற்ற விசாரணையில் Third degree என்று சொல்லப்படும் வன்முறை அணுகு முறையை காவல்துறை பயன்படுத்துகிறது. இதனால் அவர்கள் மீது மனித உரிமை மீறல் என்ற புகார் தொடர்ந்து வருகிறது. இதில் பாதிக்கப்படுவது கீழ்நிலை காவல்துறை பணியில் இருக்கும் போலீசார் தான்.

கடந்த 12 ஆண்டுகளில் மனித உரிமை மீறல் என 4125 பேர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறை ஆய்வாளராக இருந்தபோது அவர்கள் மீது சொல்லப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்றிருக்கும் 50 டிஎஸ்பிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த மனித உரிமை மீறலுக்கு எப்போதும் எந்த உயர் அதிகாரியும் இடை நீக்கம் செய்யப்படுவதில்லை அவர்களுக்கு பெரிய அளவு பாதிப்பும் இல்லை. அப்படியே இடைநீக்கம் செய்யப்பட்டாலும் சில மாதங்களிலேயே அவர்கள் பணிக்கு மீண்டும் நியமிக்கப்படுகிறார்கள். பாதிப்பு எல்லாம் கீழ்நிலை ஊழியர்களுக்கு மட்டும்தான்.

காவல்துறை கீழ்நிலை ஊழியர்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவற்றுக்கு ஆட்பட்டு தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற அரசு ஊழியர்களுக்கு இருக்கும் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடையாது. சலுகை என்று ஏட்டளவில் இருந்தாலும் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர்கள் நேரம் பார்க்காமல் பணி செய்ய வேண்டி இருக்கிறது. பாதுகாப்பு என்ற பெயரில் பல மணி நேரம் அவர்கள் நிற்கவைக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் கூட அவர்களுக்கு குற்றவாளிகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு காரணமாக இருக்கலாம் என்று உளவியல் நிபுணர்கள் கருத்து சொல்கிறார்கள். நவீன மயமாக்கல் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் அரசு காவல் துறையை கண்டு கொள்வதில்லை, இதுதான் காரணம் எனவே அவர்களிடம் கரிசனம் காட்டுங்கள்.