சபரிமலை நினைவுகள்.
அந்த வருடம் எனக்கு பதினெட்டாம் மலை.
சபரிமலை யாத்திரை செய்பவர்களின் வாழ்வில், பதினெட்டாவது முறையாக மலையாத்திரை செல்வது ஒரு மைல்கல். அவர்கள் கையோடு ஒரு தென்னம்பிள்ளையை கொண்டு சென்று சபரிமலையில் நட்டுவிட்டு வருவார்கள்.
எப்போது மாலைபோட்டு விரதம் தொடங்கி விட்டாலும், வருடாவருடம் அம்மா கையாலும் ஒரு ஸ்படிக மாலையைப் போட்டுக் கொள்வேன்.
அதற்காகத் தான் அந்தமுறை அம்மாவைப் பார்க்க சென்னை வந்திருந்தேன். இரவு உணவுக்குப் பின், அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
“சின்ன வயசிலேயே நீ மலைக்குப் போகத் தொடங்கி, விளையாட்டாக காலமும் ஓடுது பாரு! இப்பவானா பதினெட்டாவது வருஷ யாத்திரைக்கு மாலை போட்டிருக்கே மோகி!”
“ஆமாம் அம்மா! மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“இன்னும் எவ்வளவு தரம் போலாம்னு இருக்கே?” என் பதிலை அறிந்தே கேட்கிறாள்.
“இதென்னம்மா கேள்வி? போய்கிட்டே இருக்கிறதா தான் உத்தேசம்”
“ஆனா இன்னும் எவ்வளவு வருஷம் உனக்கு நான் மாலை போட இருப்பேனோ தெரியலையே மோகி!”
“எல்லாம் இருப்பேம்மா கல்லு குண்டாட்டம்! உன் வயசு மாமிகளெல்லாம் கூட சபரிமலைக்கு கோலாட்டம் ஆடிக்கிட்டு வராங்க தெரியுமா? நீயும் தான் வாயேன். சிரவணகுமாரன் போல என் தோளிலே தூக்கிகிட்டுப் போறேன்”
என் புஜத்தை வருடியபடி சிரித்தாள்…
“உன் கண்ணு வழியா நானு சுவாமியைப் பார்க்கறதே போதும்”
“அம்மா! இந்த வருஷம் பதினெட்டாம் மலைங்கிறதால நானும் ஒரு தென்னம்பிள்ளை எடுத்துகிட்டு போகட்டுமா?”
நேராக என்னைப் பார்த்தாள்.
“எதுக்குப்பா? போற வர்றவங்க எல்லாரும் பதினெட்டாம் வட்ட குருசாமின்னு உன் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணணுமா?”
“சேசே! அப்படி இல்லேம்மா. அது ஒரு சம்பிரதாயங்கிறதாலத் தான் கேட்டேன்”
‘நீ தானே அப்பப்போ இந்த தேவாரம் சொல்லுவியே’ என்றபடி அட்சரம் பிசகாமல் சன்னமாகப் பாடினாள்,
‘மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்’
“இப்போ எதுக்காகம்மா இந்த தேவாரம்?”
“அப்பர் என்ன சொல்றார் பாரு?
‘யாதும் சுவடுபடாமல்’ ஐயாறப்பனைப் பார்க்கக் கோயிலுக்கு போறாராம்.
எந்த தாம்தூமும் பண்ணாமே, காதும் காதும் வச்ச மாதிரி பதவீசா சுவாமி பார்க்க போகணும்.
தென்னங்கண்ணு, ‘இது எனக்கு பதினெட்டாம் மலை’ன்னு பேனர்லாம் கட்டிக்காம சமர்த்தா போயிட்டு வா!”என்றபடி அம்மா எழுந்து உள்ளேபோய் விட்டாள்.
மேற்கொண்டு நான் ஏதும் பேசாமல் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
காதல் மடப்பிடியோடு களிறு வருவதைக் கண்ட அப்பர் என் சிந்தையை ஆக்கிரமித்து கொண்டார். கண்டறியாதனவற்றைக் காண வகைசெய் பரம்பொருளே!
அம்மாவிடம் இந்த சம்பாஷனையைக் கேட்டறிந்த என் மன்னி, “மோகன்! உங்களுக்கு ஏதும் கண்திருஷ்டி பட்டுடும்னு தான் தென்னங்கண்ணு எல்லாம் வேணாம்னு அம்மா சொல்லியிருப்பாங்க!” என்றாள்.
“ஆமாம் மன்னி! புரியுது”
அந்த வருடம் நான் தென்னம்பிள்ளையை எல்லாம் கொண்டு செல்லவில்லை.
காலம்கூட அதன் யாத்திரையைத் தொடர்ந்தே முன்னேறுகிறது…
பத்து வருடங்களுக்கு முன்னால் அம்மா எனக்கு ஸ்படிக மாலையணிவித்து விட்டுச் சொன்னாள், “இது மலையாத்திரையில் உனக்கு நாற்பதாவது வருஷம். நான் கணக்கு கரெக்டா வச்சிருக்கேன்”.
“மலைக்குப் போறதை கணக்குல்லாம் வச்சிக்கக் கூடாதேம்மா. கன்னிசாமியாவே. எப்பவும் பயபக்தியோடு நினைச்சுக்கறேன்”, இது நான்.
வாஞ்சையுடன் என்னைப் பார்த்தாள்.
அதே வருடம் மார்ச் மாதம் ஐயன் பதமலரில் ஐக்கியமானாள்.
நேற்று கனவில் வந்த அம்மா வயதில் இளையவளாக, நெற்றியில் துலங்கும் கெம்ப்பு நிற குங்குமத்துடன் பஞ்சமுக விளக்கேற்றியது போல இருந்தாள்.
“இது உனக்கு ஐம்பதாம் வருஷம் இல்லையோ? தாம்தூம் பண்ணாம நல்லபடியா போயிட்டு வா”
“அம்மா! நீ என்னை விட்டுப்போய் பதினோரு வருஷம் ஆகப் போகுது. இடையிலே இரண்டு மலை தப்பிடுச்சும்மா”
“கணக்கெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ நல்லபடி போயிட்டு வா!”
“சரிம்மா!”
அம்மா தொடர்ந்தாள், “உனக்கு ஞாபகம் இருக்கா மோகி?
‘போறேன்னு நான் சொல்லமாட்டேன். ஜாக்ரதையா போயிட்டு வான்னு நீ சொல்லக்கூடாது. சரியாம்மா? சரணம் ஐயப்பா!’ன்னு என்கிட்ட சொல்லிட்டு விலுக்குன்னு திரும்பிப் பார்க்காம மலைக்கு கிளம்புவே….
நான் நிலைக்கு வர ஒரு நாளாகும்… உம்ம்…” என்று அம்மா பெருமூச்செறிந்தாள்.
கனவிலிருந்து மீண்டேன்.
“நீ கூட சொல்லிக்காமத் தானேம்மா போனே?”
Leave a comment
Upload