தொடர்கள்
வலையங்கம்
இப்படி பேசலாமா ?

தமிழக முதல்வர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது மக்கள் தொகை அடிப்படையில் இன்று பாராளுமன்ற தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும் போது ஏன் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும். நாமும் பதினாறு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லக்கூடிய நிலை வந்துள்ளது என்று பேசி இருக்கிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் தற்போது எதிர்காலத்திற்கான பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற உள்ளது என்று பேசி இருக்கிறார்.

இருவரின் கருத்துக்களும் குடும்ப கட்டுப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கள். இதற்குக் காரணம் மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகள் வரையறை செய்ய இருக்கிறார்கள். வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் அங்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுதலாக வரையறை செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் கேரளம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் பாராளுமன்றத்தில் தங்கள் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற ஆதங்கத்தில் குடும்ப கட்டுப்பாடு வேண்டாம் என்று பேசி இருக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகம் என்பது பொருளாதாரத்தில் பின்தங்குவதற்கான ஒரு முக்கிய காரணியாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனால் தான் வடக்கில் பட்டினி மற்றும் கல்வியில் பின்தங்கியோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தென் மாநிலங்களில் கணிசமாக அந்த எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். எனவே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பதை விட மக்களின் வாழ்வாதாரம் முக்கியம் என்ற அளவில் மாநில முதல்வர்கள் சிந்திக்க வேண்டும். எனவே குடும்ப கட்டுப்பாடு தளர்வு என்ற பேச்சு வேண்டாமே !!