தொடர்கள்
தொடர்கள்
கோல்டன் கைலாஷ் !! மீண்டும் கைலாய பயணம் !! நிறைவுப் பகுதி. 3 - ராம்.

2024919113823994.jpeg

சென்ற முறையை விட இந்த முறை அதிக சிரமமாக இருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். ஒரு வேளை கூட்டமாக இல்லாமல் மூவர் மட்டுமே செல்வதாக கூட இருக்கலாம்.

கூட்டுப் பிரார்த்தனைக்கு பலம் அதிகம் தான்.

இருந்தாலும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த கல்யாணி குழுவினரையும், மற்றும் பஞ்சாபியர் குடும்பங்களையும் சந்தித்ததில் ஏக மகிழ்ச்சி.

2024919021448457.jpeg

(கல்யாணி அவரது குழுவினருடன் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி)

2024919021520716.jpeg

(சித்ரா கந்தாரி, ஸ்ரவந்தி வேதுலா, பத்மஜா பிதூலா, முரளி, அஜய்)

மூன்று பேருக்கு மட்டும் என இந்திய உணவை சமைப்பது எங்கள் திபத்திய ஏஜண்ட்டுக்கு முடியாத காரியம். அதனால் இந்த இந்திய குழுக்களுடன் எங்களை இணைத்ததில் பேராசிரி தம்பதிக்கு ஏக குஷி. எனக்கும் தான்.

சாகாவைக் கடந்து தார்ச்சன் சென்றடைந்தோம்.

மானசரோவரில் இந்த முறை குளிக்க நேரம் இல்லை.

ஆனாலும் இரவில் ரிஷிகள் வருவதைக் காண நள்ளிரவில் சென்று காத்திருந்தோம்.

2024919021541305.jpeg

அங்கே சந்தித்த நண்பர் விர்ஜீனியாவிலிருந்து வந்திருந்த ஶ்ரீதேவி. அந்த நிலவொளியில் கடுங்குளிரில் முகம் கூட சரியாக பார்க்கவில்லை.

கொஞ்சம் தமிழ் பேசினார்.

விடிய விடிய காத்திருந்து பேராசிரி குடும்பம் இரவு 9 மணிக்கே தூங்கும் வழக்கமுள்ளவர்கள். அவர்களுக்கு நடு ராத்திரி என்பது பத்து நாள் முழித்திருப்பதற்கு சமம். பாவம்.

ஶ்ரீதேவியுடன் சுமார் ஒரு ஒன்றரை மணி நேரம் பேசியதில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை. எனக்கு என் குருநாதர் விஜயகுமார் சொன்ன மானசரோவர் கதையெல்லாம் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சுமார் இரண்டு மணி வரை காத்திருந்தோம். முனிவர்கள் தரிசனம் கிடைக்கவேயில்லை.

திரும்ப விடுதிக்கு வந்து விட்டோம்.

ஆனால் நாலரை மணிக்கு ஶ்ரீதேவியிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. நான்கு நட்சத்திரங்களை மானசரோவர் ஏரியில் தரிசனம் செய்தோம். உங்கள் பாஸ் விஜயகுமாருக்கு நன்றி என்று செய்தி அனுப்பியிருந்தார்.

2024919021708637.jpeg

அந்த நள்ளிரவில் எந்த காமிராவும் அதை படம் பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.

ஆக இந்த ஆண்டும் மானசரோவர் ஏரியில் நட்சத்திரங்கள் இறங்கி வருவதைப் பார்க்கும் பாக்க்யம் எங்களுக்கில்லை.

அதிகாலை கைலாய மலை யாத்திரைக்கு யமத்வார் என்ற இடத்தில் ஒரு சிறிய வாயில் அதன் வழியாக புகுந்து திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்று விட வேண்டும்.

நடந்தோம் நடந்தோம் நடந்தோம்..... கயிலை மலை நோக்கி நடந்தோம்.

அப்படியே குதிரை சவாரி செய்து கொண்டு வரும் ஒரு அமெரிக்க இந்திய பக்தையிடம் சின்ன பேட்டி....

ஏதோ நினைவில் பையில் ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தேன்.

பேராசிரி மனைவி சங்கீதாவுடன் எங்கள் சுமை தூக்கும் நபர் முன்னே செல்ல என்னுடைய டயாபடிக் நினைவுகள் பசி வந்தால் என்ன செய்வது என்று நினைவூட்டவும் நடக்க சோர்வும் பயமும் சேர்ந்து கொண்டது.

பத்து கிலோ மீட்டர் நடந்து சென்றதும் ஒரு டீ ஹவுஸ் வர கொஞ்சம் நிம்மதி.

வழியில் திபத்தியர்கள் ஒரு அடிக்கு ஒரு நமஸ்காரம் செய்தபடி செல்ல ஒவ்வொரு முறையும் அவர்கள் கால் தொட்டு கும்பிட நான் மறக்க வில்லை.

சாதாரணமாக நடப்பதற்கே நமக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது குனிந்தால் நிமிரும் போது மூச்சு விட முடியவில்லை. எப்படி இவர்களால் இப்படி நமஸ்கரித்தபடியே நடக்க முடிகிறது

ஏராள உடல் பலமும் மன பலமும். வைராக்கியமும் வேண்டும்.

இந்த ஜென்மத்தில் இதை இறைவன் கொடுக்கப்போவதில்லை.

சுமார் பதினைந்து கிலோ மீட்டர்கள் நடந்து கடந்து அற்புத மலைகளின் தரிசனம் கண்டு இறுதியில் கையிலாய மலையை சென்று சேரும் போது அப்பழுக்கற்ற வானத்தின் பின்னணியில் கைலாய மலை தரிசனம் கண்டதும் மெய் சிலிர்த்தது.

அற்பமான வார்த்தைகள் அந்த அனுபவத்தை விவரிக்கு முடியாதவை.

மூச்சு முட்டியது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. சென்று சேர்ந்த போது சங்கீதா என்னைக் கண்டு பயந்து விட்டார். என்னாச்சு ? ராத்திரியே திரும்பவும் தார்ச்சன் போய் விடலாமா என்று கேட்டார்.

நீங்க வேற இவ்வளவு தூரம் வந்து விட்டு ராத்திரியே தார்ச்சனா ??

இந்த முறை இன்னொரு விஷயம். சரண் ஸ்பர்ஷ் என்று சொல்லப்படும் ஈசனின் காலடியில் சென்று தரிசிக்கும் நடை பயணத்தை தடை செய்து விட்டார்கள்.

காரணம் அங்கு கொட்டியிருக்கும் பனியாம். இரண்டு மூன்று யாத்ரீகர்கள் காணாமல் போய் விட்டதால் இந்த முடிவாம்.

கணீரென்று சிவனை நோக்கி குரல் ஒன்று கேட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.

அவரிடம் சொன்னார்களாம். கைலை மலைக்கு குதிரையில் அமர்ந்து செல்லலாம். அல்லது வேன் வைத்துக் கொண்டும் செல்லலாம்.

நடக்க வேண்டாம். அவர் நூறு முறை சிவ புராணம் சொல்லி விட்டு சிவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

உன்னைப் பார்க்க குதிரையிலும் வர மாட்டேன் வண்டி வைத்துக் கொண்டும் வர மாட்டேன். என்னை எப்படியாவது நடக்க வைத்து கூட்டிச் செல்.

சிவன் பக்தர்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பானா. ??

2024919022328718.jpeg

(தமிழ்ச் செல்வியம்மா. மலேசிய தமிழர். அங்கு சிவத் தொண்டு ஆற்றி வருபவர்.)

மலேசிய தமிழ்செல்வியம்மாவுடன்.

பதினைந்து கிலோ மீட்டர் நடந்து தான், வந்திருக்கிறார். நடந்து தான் திரும்புவார்.

அவரது கணீர் குரலில் ஈசன் அகமகிழ்ந்து போயிருப்பான் சந்தேகமேயில்லை.

இதோ உங்களுக்காக.. இங்கே....

அப்படியே அமெரிக்க பக்தர்கள் ருத்ரம் ஜெபித்ததும் புல்லரிக்கை வைத்தது. பக்திப் பரவச நிலை கைலாய அடிவாரம்.

இரவு நேர கைலாய மலை தகதகத்தது.

2024919022404881.jpeg

அடுத்த நாள் காலை, சரண் ஸ்பர்ஷ் போக முடியவில்லை என்றாலும் தங்க கைலாய மலை பார்க்க வேண்டும் என்று அத்தனை பக்தர்களும் அதிகாலையிலேயே ஆஜர்.

எட்டேகால் மணிக்குத் தான் சூரிய உதயம் என்று போட்டிருந்தாலும் ஏழரை மணியிலிருந்தே காத்திருந்தோம்.

அந்த தருணம் வந்தது......

ஒரு போனில் டைம் லாப்ஸ் போட்டு விட்டு இன்னொரு போனும் கையுமாக காத்திருந்தேன்.

யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டாமா. ?? கைலை மலையிலும் என்ன கைபேசி என்றால், எனக்கு கைலை செல்ல வாய்ப்பு கிடைத்தது இறையருள் என்றால் என்னை சுற்றியுள்ளவர்களும் அந்த தெய்வீக தருணத்தை தரிசிக்க வேண்டாமா ??

விகடகவி வாசகர்களுக்கு அந்த பேரானந்தத்தை பதிவு செய்ய வேண்டாமா ? என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு தரிசனம் செய்தவாரே லைவ் தொலைபேசிகளும் அழைத்து உறவினர்கள் நண்பர்களுக்கு அந்த பொக்கிஷ கணத்தை பகிர்ந்து கொண்டோம்.

2024919022523734.jpeg

கோல்டன் கைலாஷ். இந்த ஒரு காட்சிக்குத் தானே இந்த வருடம் செப்டம்பர் மாதத்தை தேர்ந்தெடுத்தோம்.

சொன்னது போலவே சிவன் குறை வைக்காமல் காட்சி கொடுத்தார். கோல்டன் கைலாஷ் மொமண்ட்.

சூரியன் மொத்தமாக சிவனை ஆலிங்கனம் செய்து கொண்டு தங்க மலை போல ஜொலித்தது கைலாய மலை.

கண்களை அதை விட்டு இன்னமும் நீக்குவது கடினமாகத்தான் இருக்கிறது.

ஐபோன் புண்ணியத்தில் ஒரு கைலாய மலை குளோசப் வீடியோ இங்கே....

தமிழ்ச்செல்வி பெருங்குரலெடுத்துப் பாசுரங்கள் பாட,ஒரு பக்கம் ஓம் நமச்சிவாய என்ற பக்திக் கூக்குரல் எழும்ப அது ஒரு தெய்வீகத் தருணம்.

இந்த நொடி, இந்த நாள், இந்த தருணம் அப்படியே உறைந்து போய் பார்த்துக் கொண்டேயிருக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கும் துல்லிய தெய்வீகக் காட்சி.

பரவச நிலையிருந்து தாஷி தான் தட்டியெழுப்பினார். சந்தோஷத்தில் தாஷியை சிவனாக நினைத்துக் கட்டிக் கொண்டேன்.

உன்னால் தான் உன்னால் தான் இதெல்லாம் கிடைத்தது.

அங்கிருந்த அமெரிக்க இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்தோம்.

சிவபெருமானின் அருளிருந்தால் வருடந்தோறும் உன்னைக் காண வருவோம் என்று உள்ளமுருகிப் பிரார்த்னை செய்து விடை பெற்றோம்.......

பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தோம். நாம் என்ன ஊருக்கு திரும்ப போவோம் என்று நினைப்பது. முதல் நாள் உங்களை மயக்கத்தில் ஆழ்த்தியது என்ன. நம்மை சோதித்தது என்ன.

இன்று அவர் தரிசனத்தில் நம்மை ஆன்மீக மயக்கத்தில் ஆழ்த்தியது என்ன..

அடேங்கப்பா எல்லாம் சிவனின் திருவிளையாடல்.

ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய......

இந்த வருட கைலாய பயணம் நிறைவுற்றது.