தொடர்கள்
அரசியல்
காம்ரேட்கள் மீது முதல்வர் கோபம் -விகடகவியார்

2024919010109807.jpg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் ஆபீஸ் பையன் சூடாக கீரை வடை கொண்டு வந்து வைத்தார். கூடவே' இஞ்சி டீ வருகிறது' என்று சொன்னார். அப்போது அவர் கைபேசியை பார்த்து" இது என்ன சாம்சங் கைபேசியா" என்று கேட்க " நல்லா வேலை செய்யும்" என்று எடுத்துக்காட்டினார் ஆபீஸ் பையன்.

அப்போது சிரித்தபடியே "சாம்சங் தான் இப்போது கூட்டணியிலேயே வில்லங்கம் ஆகிவிட்டது" என்று ஆரம்பித்தார். அப்போது நாம் "சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது ஸ்ட்ரைக் வாபஸ் என்று பத்திரிக்கை குறிப்பு பார்த்தோமே "என்று சொன்னதும் "இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர். ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு சென்று அந்நிய முதலீடுகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்திருக்கிறார் முதல்வர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டு கம்பெனி ஆன சாம்சங் தொழிலாளர்களின் பிடிவாத போக்கால் பிரச்சனையில் இருப்பது தெரிந்து மற்ற வெளிநாட்டு கம்பெனிகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய யோசிக்குமே என்ற பயம் முதல்வருக்கு வரத் தொடங்கியது அதனால் தான் அமைச்சர்கள் ஏவா வேலு, டிஆர்பி ராஜா, த.மோ.அன்பரசன் ஆகியோரை தொழிற்சங்க தலைவர்களிடம் பேச சொன்னார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்கள். சாம்சங் நிர்வாகம் தொழிற்சங்கம் அமைக்க எங்கள் சட்டத்தில் அனுமதி இல்லை. மற்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள். ஆனால் பிடிவாதமாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விஷயத்தில் தீவிரம் காட்டியதை முதல்வர் ரசிக்கவில்லை.

கூட்டணி உடையும் என்ற பேச்சு அடிபடுகிறது என்ற கேள்விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் 2026 தேர்தலுக்கு இப்போதே கைகட்டி வாய் பொத்தி இருக்க முடியுமா முடியுமா என்று பேசியது முதல்வரை எரிச்சல் படுத்தி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் போது பார்த்துக் கொள்வோம் என்று கறுவிக் கொண்டிருக்கிறது திமுக "என்றார் விகடகவியார்.

சரி மழை வெள்ள செய்தி ஏதாவது உண்டா என்று நாம் கேட்டதும் " துணை முதல்வர் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்து வருகிறார்கள். இது துணை முதல்வர் பற்றிய விளம்பரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 24 மணி நேரம் உழைப்பவர் உதயநிதி ஸ்டாலினின் கேமிரா மேன் தான் என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் நக்கல் அடிக்கும் அளவுக்கு அவர் பற்றிய பிரச்சாரம் போய்விட்டது" என்று சிரித்தார் விகடகவியார்.

" வெற்றி கழகம் மாநாடு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது ? என்று நாம் கேட்டோம் .காவல்துறை அப்பப்போது மாநாடு ஏற்பாடுகளை பார்த்து ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு கூடுதலாக இன்னொரு 25 ஏக்கர் இடங்களை ஏற்பாடு செய்யுங்கள் இல்லை என்றால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சொன்ன போலீஸ் யோசனையை கேட்டு அதற்கான ஏற்பாடுகள் விஜய் தரப்பு செய்கிறது என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

இப்போது பாரதிய ஜனதாவில் பேசும் பொருள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான். கோவையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி பற்றி அன்னபூர்ணா அதிபர் சீனிவாசன் பேசியது அதன் பிறகு மன்னிப்பு என்று சர்ச்சையானது. இனிமேல் நிர்மலா சீதாராமன் தமிழகம் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார் என்றார்கள். ஆனால், அதற்கு அப்புறம் தான் அடிக்கடி தமிழகம் பக்கம் வரத் தொடங்கி இருக்கிறார். தென் சென்னையில் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் பங்கேற்றார். உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டுகிறார் நிர்மலா சீதாராமன். கட்சியின் செயலாளர் கராத்தே தியாகராஜன் வீட்டுக்கு சென்று அவரது அறுபதாவது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னார். இது தவிர இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொண்டு முக்கிய கட்சி பிரமுகர்களிடம் ஆலோசனை செய்கிறார் இப்படி தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகிறார். இது தவிர பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் தமிழக அரசியல் உள்விவகாரங்களை அவருக்கு அப்டேட் செய்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்மலா சீதாராமன் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது "என்று சொல்லி முடித்ததும் ஆபீஸ் பையன் மழைக்கு ஏற்றபடி சூடாக இஞ்சி டீ தர சாப்பிட்டுவிட்டு ஜூட் விட்டார் விகடகவியார்.