தொடர்கள்
கதை
ரிடையர்டு கேப்டன் – சிறுகதை – பா.அய்யாசாமி

2024919024605479.jpeg

நகரப்பூங்கா, வழக்கமான கூட்டமின்றிருந்தது. ஆங்காங்கே சிலர் நடைபயிற்சியில் இருக்க, குழந்தைகள் சறுக்கு மரமேறி இறங்கி விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்து சிவராமன் சார் தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி அமர்ந்திருந்தார்.

சிவராமன் வயது எண்பதைக்கடந்து ஆறு மாதமாகிறது.
மனைவியை இழந்தபின்னே மூத்த மகளுடன் வசிக்கிறார். இளையமகள் சென்னையில் இருக்கிறார். இவர் அங்கும் இங்குமாக இருப்பார். ஆண் வாரிசு இல்லாவிட்டாலும் பெண்கள் இரண்டும் தன்னைக் கைக்குள் வைத்து காப்பதும், மாப்பிள்ளை இருவரும் நன்கு மரியாதையுடன் இருப்பதையும் தம் வாழ்க்கையில் கிடைத்த ஒரு வரமாகவே பார்க்கின்றார்.

என்ன சார், நடக்கலையா ? எனக் கேட்டபடி வந்த ஆசிரியர் முருகேசன் அருகில் அமர்ந்தார்.

இருவரும் பூங்காவில் நண்பர்கள் ஆனவர்கள், இன்னும் ஒரு வருட வேலை இருக்கு முருகேசன் சாருக்கு.

ஏன் நீங்க நடக்கலை ? என்றார் சிவராமன்.

இல்ல சார், மனசு சங்கடமா இருக்கு ஏன் என்று தெரியலை.

உங்களுக்கே தெரியாமா அப்படி என்ன சார் சங்கடம் ? என்றார் சிவராமன்.

அது இல்ல சார், பிரச்சினை என்னன்னு தெரியுது ஆனா மனசு கேட்க மாட்டேங்குதுஎன்றார்.

உங்களுக்கு பிரச்சினை தெரிஞ்சதினாலே அது ஒன்றும் பிரச்சினையே இல்லை போங்க! பாதிபேரு பிரச்சினையே என்னன்னு தெரியாமல்ல அலையறாங்க! என்று சிலேடையாகப் பேசினார்.

உங்களுக்கென்ன சார்?! மாப்பிள்ளை இரண்டு பேரும் தங்கமா அமைஞ்சுட்டாங்க! ஒரு பையனை வச்சுகிட்டு நான் படற பாடு இருக்கே, நாய்ப்பாடு என்றார் விரக்தியாக.

சொல்றதை எதுவும் கேட்கிறதில்லை,என் வீட்டுக்காரிக்கும் மருமகளுக்கும் ஒத்தே போக மாட்டேங்குது. வீட்டுக்குள்ளே வந்தாலே ஏதாவது குத்தம், குறைன்னா எப்படி சார்என புலம்பினார்.

நானும் இதெல்லாம் கடந்துதான் சார் வந்தேன். எல்லார் வீட்லேயும் நடக்கிறதுதான். ஆனா நமக்கு நடக்கும் போது பூதாகரமாக தோன்றும். இதற்கு பதட்டமே படாதிங்க! அணுகு முறையை மாத்தினாலே போதுமானது என்று தத்துவம் பேசியவர், என்னைப் பிரச்சினை உங்களுக்கு ? சொல்லுங்கள் என்றார்.

எம் பையன் என் பேச்சை கேட்கிறதே இல்லை என்றார்.

ஏன் கேட்கனும்னு எதிர் பாக்குறீங்க ?

சார் நான் அவனின் அப்பா ! நல்லது கெட்டது எனக்குத் தெரியாதா?

அது சரி. ஆனால், அவன் உங்களின் மகன்.

இரண்டும் ஒன்றுத்தானே சார்.

உறவு முறைக்கு ஒன்றுதான். நடைமுறைக்கு அவன் உங்கள் மகன்.


அவனுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கு, அதை அவனை வாழவிடாம நீங்களே சில முடிவுகளை எடுத்து அவனிடம் நடக்கச் சொன்னால், அது சரியாகவே இருந்தாலும், இது அப்பா எடுத்த முடிவு என ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் மகன்களின் இயல்பு.

அதுக்கு நான் என்ன செய்ய ?

ஒன்றுமே செய்யவேண்டாம், நாமதான் சுமக்கிறோம் என்ற நினைப்பை விட்டுவிட்டு,பொறுப்புக்களைத் துறந்து விடுங்கள் தானாகச் சரியாகிடும்..

அய்யா உங்களுக்கு பெண் பிள்ளைகள். அதனாலே பிரச்சினை தெரியலை. ஆண் பிள்ளைங்க நம்மை வீட்டில் அலட்சியமாக நடந்துக்கிறதைப் பார்த்தால் தாங்க முடியலை,

ஆணோ,பெண்ணோ அவர்கள் வாழ்க்கை அவர்கள் வாழ

நல்லது, கெட்டது எது என சொல்லி நாம் துணை நிற்க வேண்டுமே தவிர ஒருபோதும் முடிவுகளை திணிக்கக்கூடாது என சொல்லி முடித்தார்.

அப்போது சிறுவர்கள் விளையாட்டில் சண்டையிட்டுக்கொண்டு இருக்க, என்ன பசங்களா என்ன தகராறு என்று கேட்டார் சிவராம்ன்


தாத்தா.. இவன் நான் சொல்றதையே கேட்க மாட்டேங்கிறான்,

அதான் ..


உங்களில் கேப்டன் யாரு?

அப்படியெல்லாம் யாரும் இல்லை தாத்தா என்றனர்.

அதை முதலில் முடிவு செய்யுங்கள், பின் அவன் சொல்படி கேட்டு பின் விளையாடுங்கள் என்றார். அதன் பிறகு அமைதியாக விளையாடி மகிழ்ந்தார்கள்.

அய்யா இப்போ சொன்னிங்களே,பசங்களுக்கு, இதேதானே வீட்டில் சொல்கிறோம்.வீட்டில் நாம்தானே கேப்டன் என்று மடக்கினார் முருகேசன்

ஆமாம். ஆனால் இது விளையாட்டு ஒத்த வயது பிள்ளைகளுக்கு.

அது வாழ்க்கை, வயது வந்த பிள்ளைகளுடன்... நீங்கள் ஓய்வு பெற்ற கேப்டன் மாதிரி..என்றார்

முடிவா என்னத்தான் சொல்றீங்க,எல்லாத்தையும் விட்டுட்டு அமைதியாக இருன்னு சொல்றீங்க அதானே ?

பார்வையாளனாக மட்டும் இருங்கள் என்று சொல்கின்றேன்.

தானாகவே சரியாகிடும் என்று கூறி முடித்தார்.

மாலை நேரம் மயங்கி பூங்காவில்.. இருள் சூழ்ந்தது.
முருகேசன் முகத்திலும், மனதிலும் வெளிச்சம் வந்தது.