தொடர்கள்
அரசியல்
மழை பெய்யட்டும் 2..-விகடகவியார்

2024919010342588.jpeg

ரெட் அலர்ட் என்றதும் விகடகவியார் மழை கோட் அணிந்து கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தார்.தமிழகத்தில் பெய்யும் மழை விஷயத்திற்கு வருவோம் என்று சொல்ல ஆரம்பித்தார்.

தமிழ்நாட்டுக்கு மழை கண்டிப்பாக தேவை. அரசாங்கம் எந்த கட்சி அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் செய்வது மழை வெள்ள அபாய எச்சரிக்கையின் போது மக்களை பாதுகாப்பாக சமூக கூடங்களில் பத்திரப்படுத்துவது தக்காளி சாதம், தயிர் சாதம், குழந்தைகளுக்கு பால் விநியோகம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, இது தவிர அமைச்சர்கள் அதிகாரிகள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு என்று கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன செய்தோம் என்று ஊடகங்களுக்கு பேட்டி. இதுதான் எப்போதும் நடப்பது.

இப்போதும் முதல்வர் துணை முதல்வர் மேயர் அமைச்சர் எல்லோரும் அதையே தான் செய்கிறார்கள்.

சென்ற முறை வேளச்சேரியில் வெள்ளம் வந்தபோது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதால் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தினார்கள். அதாவது மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இருசக்கர வாகனங்களை மொட்டை மாடியில் வைத்து பாதுகாத்தார்கள்.

ஆனால், அரசாங்கம் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் இல்லை உடனுக்குடன் நடவடிக்கை என்று வீடியோ ஆதாரத்தை வெளியிடுகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்க வில்லை என்று அதற்கும் ஒரு வீடியோ. முதல்வர் துணை முதல்வர் எல்லோரும் ஒரே மாதிரியாக இந்த முறை வெள்ள பாதிப்பு மக்களுக்கு இல்லவே இல்லை என்கிறார்கள். ஆனால் மக்கள் அதை நம்புகிறார்களா என்பது தெரியவில்லை.

நடுத்தர மக்கள் குடிசைவாசிகளை பொருத்தவரை மழை அவர்களுக்கு பழக்கப்பட்டது தான். வெள்ளம் அவர்களுக்கு பழகிப் போய்விட்டது. அவர்களது எதிர்பார்ப்பெல்லாம் வெள்ள நிவாரணம் எவ்வளவு தருவார்கள் எப்போது தருவார்கள் என்பது தான்.

அரசாங்கம் திருப்புகழ் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மழை வெள்ளத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனை சொல்ல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவும் அறிக்கை தந்தது.

முதல்வர் இப்போது அந்தக் குழுவின் ஆலோசனை பெயரில் தான் வெள்ள தடுப்பு பணிகள் நடக்கிறது என்கிறார். ஆனால் முதல்வர் மறந்தது இப்போதெல்லாம் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்கிறது. சென்றாண்டு பருவமழை 80% சதவீதம் கூடுதலாக பெய்தது என்று வானிலை நிலை அதிகாரிகள் புள்ளி விவரத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த முறையும் அதேபோல் கூடுதலாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் அந்தத் தண்ணீரை சேமித்து வைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறோம் என்பது பற்றி இதுவரை முதல்வர் அல்லது துணை முதல்வர் பேசியதே கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மக்களுக்கு நிவாரண பணிகள் என்ற அளவில் திருப்தி அடைகிறார்கள். அவர்களால் முடிந்தது அவ்வளவுதான் என்பதும் உண்மை.

தமிழ்நாடு இயற்கையாகவே ஏரிகள் குளங்கள் நிறைந்த மாநிலம். தஞ்சாவூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஒரு காலத்தில் ஏரிகள் மாவட்டம் என்று சொல்வார்கள். அங்கெல்லாம் ஏரிகளும் குளங்களும் நிறைய இருந்தன. தமிழ்நாட்டில் மொத்தம் 42,000 ஏரிகள் இருந்தன. இப்பொழுது 39 ஆயிரம் ஏரிகளாக சுருங்கி விட்டது என்று அரசாங்கமே நீதிமன்றத்தில் ஒரு புள்ளி விவரத்தை சொல்லி இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 3000 ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் வேடிக்கை அரசாங்கமும் இந்த ஏரிகளை ஆக்கிரமித்து காவல் நிலையம் உட்பட அரசு அலுவலகங்களை கட்டி இருக்கிறது. இதையும் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக கொஞ்சமும் கூச்சப்படாமல் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது .இருக்கின்ற ஏரிகளை குளங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுத்து ஆண்டுதோறும் உரிய முறையில் தூர்வாரி நீர் வரத்து கால்வாய்களை நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டாலே அந்த ஏரிகளின் கொள்ளளவு மழை நீர் மூலம் நிரம்பும். கடலுக்கும் அந்த தண்ணீர் போகாது. ஆனால் அது பற்றி இந்த அரசு பேசுவது கிடையாது.

இந்த மழை தான் அடுத்த ஒரு வருடத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும். இந்த மழை தான் நமது குடிநீர் பிரச்சனையை தீர்க்கும். தமிழக அரிசி உற்பத்தி, காய்கறி விளைச்சல் எல்லாமே இந்த பருவமழையை நம்பி தான். இந்த மழை தான் நமது நிலத்தடி நீருக்கான ஆதாரம்.

2024919003350912.jpeg

தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பிட்டு சொல்லும் படி எந்த ஜீவ நதியும் இல்லை மதராஸ் மாகாணம் பிரிக்கும் போது அந்த ஜீவ நதிகள் எல்லாம் ஆந்திரா கர்நாடகா, கேரளாவுக்கு போய்விட்டன. இருக்கின்ற பாலாறு தாமிரபரணி வைகை இவை எல்லாம் சிறு சிறு ஆறுகள் இவற்றையும் நாம் சரிவர பேணி பாதுகாப்பதில்லை என்பது உண்மை.

தமிழகம் வற்றா நதிகள் கொண்ட மாநிலம் அல்ல நிறைய ஆறுகள் நிறைந்த பூமி அல்ல என்பதை மாநில அரசு புரிந்து கொள்ளட்டும். மழை பெய்யட்டும் அது நமக்கு தேவைதான்.

அதேசமயம் வெள்ள நிவாரணம் மழைக்காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் என்பதை தாண்டி.

மழை நீரை எப்படி சேமிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த அரசு யோசிக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு தேவை மீன் அல்ல, மீன் பிடிப்பதற்கான தூண்டில்தான் என்பதை அந்த அரசு புரிந்து கொள்ளட்டும்.