தொடர்கள்
கவிதை
கவியரசர்... நிரந்தரமானவன் அவன் அழிவதில்லை..!! கோவை பாலா

2024919024041912.jpeg

காலை கண் விழித்தால்
கடவுளை கை வணங்கும்...!
கடக்கும் நொடி யொன்றும்
கவியரசர் பாடல் தரும்...!

விடியும் பொழுது முதல்,
முடியும் இரவு வரையும்...
காற்றில் கலந்து வந்தே,
காதில் ஒலித்து இருக்கும்...!

எத்தனை ஆயிரம் பாடல்கள்
பித்தனாய் ஆக்கி வைத்தன...!
அத்தனை கேட்டு இருந்தும்,
சித்தம் தேடியது அவனின்
கவிதைகள் வேண்டுமென்று...!

பூத்துக் குலுங்கும் மலர்களாய்
காத்திருக்குது அவன் கவிதைகள்...!
பார்த்துப் பறித்த கவி பூக்களால்
கோர்த்து மாலை சார்த்துகிறேன்..!

சிறகுகள் கிடைத்தால்
பறப்பது மட்டும் வாழ்வல்ல...!
சிலுவைகள் கிடைத்தாலும்
சுமப்பது தான் வாழ்க்கை...!

ஒன்பது ஓட்டைக்குள் ஒருதுளிக்
காற்றை வைத்து சந்தையில்
விற்று விட்டான் ஒருவன்...!
அவன் தடம் தேடி தெரிந்தால்
அவன் தான் இறைவன்...!

பிறப்பால் தொடரும் உறவுகள் அல்லாமல்...
பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதம்...!

குற்றம் புரிந்தவனும் தனக்கு
நியாயம் கேட்கிறான்...!
குற்றத்திற்கு ஆட்பட்டவனும்
நியாயம் கேட்கிறான்...!
நியாயம் யாருக்கென்று பணம்
முடிவு செய்கிறதாம்...!

அழும் போது தனிமையில் அழு...
சிரிக்கும் போது சேர்ந்து சிரி...
கூட்டத்தில் அழுதால் நடிப்பு...
தனிமையில் சிரித்தால் பைத்தியம்...

அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது...!
எல்லாம் இழந்த பின்னே எஞ்சி நிற்பதே...!

அன்னையின் கையில் ஆடுவது இன்பம்...!
கன்னியின் கைகளில் சாய்வதும்
இன்பம்...!
தன்னை அறிந்தால் உண்மையில்
இன்பம்...!
தன்னலம் மறந்தால் பெருகும் பேரின்பம்...!

மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகை உண்டு...!
ஒன்று பெற்றுச் சாவது...!
இன்னொன்று செத்துப் பெறுவது...!
சரித்திரத்தில்......
நூற்றுக்கணக்கானோர் பெற்றுச் செத்தார்கள்...!
ஆயிரக்கணக்கானோர் செத்துப்
பெற்றார்கள்...!

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே...!
ஒருவேளை மாறலாம் என நீ நினைத்தால்...
ஓவ்வொரு மனிதருக்கும் நீ மாறவேண்டி வரும்...!

மானிட இனத்தை ஆட்டி வைத்தான்...!
மாண்டு விட்டாலும் பாட வைத்தான்...!
நிரந்தர மானவன் அவன் அழிவதில்லை...!
எந்த நிலையிலும் அவனுக்கு
மரணமில்லை...!!

பாலா
கோவை