தொடர்கள்
அரசியல்
அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல்- கோமதி

2024919002611615.jpg

அமெரிக்கா என்றாலே ஆதிக்கம் என்னும் அளவிற்கு, உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் நாடு. அமெரிக்க தேர்தல் என்றால் உலக அரங்கில் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் நோக்கில், அனைவராலும் கூர்ந்து நோக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வு. இந்த ஆண்டு நவம்பரில் நிகழப்போகும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் பல கோணங்களில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் போட்டி இடுவது, பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டி இடுவது என பல நிகழ்வுகள் பரபரப்பை கூட்டியுள்ளது. மயிலாப்பூர் மாமி என்றும், தஞ்சையின் தங்க மகள் என்றும் மார்தட்டி கொள்ளும் அமெரிக்கா வாழ் இந்தியர்களும் சரி, நமது இந்தியாவில் வாழும் தாத்தா பாட்டிகளும் சரி இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

டிரம்ப் என்றால் சர்ச்சை என்று கூறுமளவிற்கு அவரது தாக்கம் எல்லா திக்குகளிலும் பரவி வருகிறது . குறிப்பாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட், தனக்கு ஆதரவு அளிப்பதாக அவர் வெளியிட்ட செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து ஸ்விப்ட், தான் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர் ஒரு உறுதியான திறமையான தலைவி என்று தான் எண்ணுவதாகவும் கூறியுள்ளார். மேலும், குழப்பம் இல்லாமல், அமைதியாக நடத்தப்பட்டால், இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என தான் நம்புவதாகவும், டிம் வாலஸ் அவர்களை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டிரம்ப் தான் டெய்லர் ஸ்விப்ட்டை வெறுப்பதாக பகிரங்கமாக அறிவித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஒஹாயோ மாநாட்டில் டிரம்ப் அவர்கள் தனது உரையில்,ஸ்ப்ரிங் பீல்டில் குடியேறியவர்கள் நாய்கள், பூனைகள் மற்றும் தனது செல்ல பிராணிகளை சாப்பிடுகிறார்கள் என்று கூறி மற்றுமொரு விவகாரத்தில் நுழைந்தார். இதன் அடிப்படையில் உருவான மீம்ஸ் வலைத்தளங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அரோராவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் சட்ட விரோத குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், இதனை துணை முதல்வர் கமலா ஹாரிஸ் ஆதரிப்பதாகவும் பகிரங்கமாக கூறியுள்ளார். இதோடு மட்டுமல்லாது, அவர் ஒரு குற்றவாளி என்றும், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகள், விலங்குகள் என்றும், நவம்பர் மாத தேர்தலில் நான் வெற்றி பெற்றால் சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவேன் என்றும்

முழக்கம் செய்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள 24.6 கோடி வாக்காளர்களில் 3.62 கோடி பேர் ஹிஸ்பானிக் சமூகத்தினர், 3.4 கோடி ஆப்பிரிக்கர்களும், ஆசியாவை சேர்ந்த 1.5 கோடி பெரும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கமலா ஹாரிஸை ஆதரிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட பல சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் செயல்கள் மூலம், டிரம்ப்பின் எதிரிகள் பெருகி கொண்டுள்ளனர் என்றே கூற வேண்டும் . அக்டோபர் 4 ஆம் தேதி மூன்றாவது முறையாக டிரம்ப்பை கொல்ல கொலை முயற்சி நடந்துள்ளது. கோசெல்லாவில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற பொழுது, அங்கு போலி பாஸ் மற்றும் துப்பாக்கியுடன் வந்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். 49 வயதான இந்த நபர், ஒரு முதுகலை பட்டதாரியும் கூட. வலது சாரி அரசாங்க எதிர்ப்பு குழுவில் முக்கிய நபராக செயல்படுவதாகவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அமெரிக்க தேர்தல் சூடு பிடிக்க துவங்கிவிட்டது என்றே கூற வேண்டும். ஒவ்வொரு நாளும் சுவாரசியம் நிறைந்த செய்திகள், டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு இடையேயான கருது மோதல் என இந்த தேர்தல் மாற்றத்தை விளைவிக்குமா. பொறுத்திருந்து பாப்போம் !