தொடர்கள்
தொடர்கள்
மருத்துவச் சுற்றுலா-2- கேபிஎஸ்

2024918181334330.jpeg

அது ஒரு கொரோனா காலம்.மாஸ்க் இல்லாமல் வெளியே போக முடியாத நிலைமை.ஒருக்கால்...என் ஒரு கால் பிரச்சினை தீருமா?.. என்றால் ஒருக்காலும் அது நடக்காது என்ற அச்சம் தான் தலை தூக்கி நின்றது.

சித்த மருத்துவம் ஒத்து வராததால், இங்கிலீஷ் மருத்துவம் போகலாம் என்று முடிவு செய்து சென்னையில் ஒரு கார்ப்பரேட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தேன்.நமக்கு உடலில் ஒரு பிரச்சனை என்றால் ஆலோசனை கூற நூறு பேர்கள் உற்சாகமாக முன்வருகிறார்கள். இதில் பாதி சொந்தம்,மீதி நண்பர்கள்.இந்த டாக்டர் தான் பெஸ்ட் என்று பலர் சிபாரிசு செய்தனர். அந்த கார்ப்பரேட் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தேன்.

அது ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனை. உள்ளே நுழைந்ததும் அழகான பெண்களின் ஆளுமையில் ஒரு வரவேற்புக் கவுண்டர்.

ஆர்த்தோ டாக்டர் பெயரை சொல்லி எப்படி போக வேண்டும் என்று கேட்டேன்.

"நூறு ரூபா கட்டிட்டு இந்த படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். பின் ஐந்தாம் மா டிக்குப் போய் காத்திருங்கள்." என்றாள்.

"100 ரூபாய் தானா?"

" இது பதிவுக் கட்டணம்.டாக்டர் ஃபீச அவருடைய உதவியாளர் சொல்லுவாங்க."

என்று சொல்லி ஒரு படிவத்தை நீட்டினாள்.

ஒரு வழியாக பணத்தைக் கட்டி விட்டு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின் என் பெயரை எழுதி ஒரு

ஃபோல்டரை கொடுத்தார்கள்.

ஐந்தாவது மாடியில் நான்கு, கால் சிகிச்சைக்கான டாக்டர்கள், அடுத்தடுத்த அறையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள்.

இது ஒரு மாதிரி சுயம்வரம் போல தோன்றியது.ஒரு மணி நேரம் கழிந்த பின் என் டாக்டரிடம் இருந்து அழைப்பு வந்தது.அனேகமாக அந்த மருத்துவமனையில் இருந்த எல்லோரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள்.

மூன்று பக்கம் கண்ணாடியால் தடுக்கப்பட்டுள்ள ஒரு கேபினுக்குள் ஒரு டாக்டர் முகக்கவசம் அணிந்து அமர்ந்திருந்தார்.சற்று தள்ளிப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.

"என்ன பிராப்ளம்?" என்றார்.

"இந்த வலது கால் வலிக்கிறது நடப்பதற்கு சிரமமாக இருக்கிறது." என்றேன்.

"அதோ அந்த ஜன்னல் வரை நடந்து காண்பியுங்கள்."

எனக்கும் அழகிகள் போட்டியில் கேட் வாக் செய்வது போல் நடப்பதற்கு ஆசைதான்.ஆனால் கால் ஒத்துழைக்க மறுத்து விட்டது.

நான்கு பல்லிகள் ஒரே சமயத்தில் "த்சவ், த்சவ் " என்று கத்தினால் என்ன சத்தம் வருமோ அந்த அளவுக்கு டாக்டர் "த்சவ், த்சவ் " கொட்டிவிட்டு, " ரொம்ப மோசமா இருக்கே. எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டு வாங்க.இங்கே நாலு ரூம் தள்ளி எக்ஸ்ரே எடுப்பாங்க."

என்று சொல்லிவிட்டு ஒரு துண்டு சீட்டில் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்தார்.

எக்ஸ்ரே கவுண்டரில் 1200 ரூபாய் கட்ட சொன்னார்கள்.

"அதிகமா இருக்கே" என்றேன் பலவீனமாக

"இந்தத் தொகையில் டாக்டர் ஃபீசும் அடங்கும்" என்றார்கள்.

டாக்டர் எக்ஸ்ரேய பார்த்துவிட்டு "சாரி உங்களுக்கு osteoPorosis வந்து இருக்கு.

கால் எலும்புகள் பலவீனமாக இருக்கு. இதை முழுசாக குணப்படுத்த முடியாது.

வலி நிவாரண மாத்திரைகள் தருகிறேன். முதல் மாடியில் பிசியோதெரபி மையம் இருக்கு. அங்கே போய் ஒரு 15 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் மசாஜ் செய்ய வேண்டி இருக்கும்." என்று சொல்லிவிட்டு அடுத்த நோயாளியை அழைத்தார்.

முதல் மாடியில் பெரிய மைதானம் போல் இருந்தது உடற்பயிற்சி சிகிச்சை மையம்.அதற்கு உள்ளே நுழையும் முன்னேயே நானூறு ரூபாய் கட்டி விட வேண்டும்.என்னை விடக் கேவலமாக பலர் அங்கே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

அந்த மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் எழுதிக் கொடுத்த சீட்டை பார்த்து

"சார்!தினமும் இங்கே வந்து பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களா?அல்லது ஒரு பயிற்சியாளரை உங்கள் வீட்டுக்கே அனுப்பி அங்கே பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யட்டுமா?" என்றார்.

"வீட்டுக்கே அனுப்பி விடுங்கள்". என்றேன்.

"தினமும் ரூபாய் 500 ஆகும். தொகையை அவரிடமே கொடுத்து விடலாம்." என்று கூறிவிட்டு என் விலாசத்தை வாங்கிக் கொண்டார்.

"நாளை முதல் காலை எட்டு மணிக்கு வந்து விடுவார்."

மறு நாள் காலை 8 மணிக்கு பயிற்சி கொடுக்க ஒரு பயில்வனை எதிர்நோக்கி இருந்த எனக்கு பெருசா ஏமாற்றம்.வந்தவர் சுமார் 60 வயதில் எலும்பும் தோலுமான தோற்றத்தில், தூக்க முடியாமல் ஒரு சூட்கேசை தூக்கிக்கொண்டு வந்தார். அதில் ஒரு கயிறு,இரண்டு தைல பாட்டில்கள், முரட்டு கைதிகளுக்கு போடுவது போல் இரண்டு கால் விலங்குகள் (ஒவ்வொன்னும் ஒரு கிலோ).

பாவம்இவருக்கே உடற்பயிற்சி தேவைப்படும் போலிருக்கிறதே என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது

எனதுசிகிச்சை ஆரம்பமானது.

அடுத்து ஒரு மணி நேரம் நான் குயவன் கை களிமண் போலஆகிப்போனேன்.

எப்படி இந்தப் பெரியவரிடம்இவ்வளவு சக்தி இருக்கிறது.? அவருடைய விரல்கள் இரும்பினால் செய்யப்பட்டதாக எனக்கு தோன்றியது.

கால்களில் அவருடைய இரும்பு கரங்களால் நீவி விடும்போது நான் கூச்சத்தால் சிரித்துக் கொண்டிருந்தேனா? அல்லது வலியால் அழுது கொண்டிருந்தேனா?..இப்பவும் என்னால் கணித்து சொல்ல முடியவில்லை.

ஒவ்வொரு காலிலும் ஒரு கிலோ விலங்கை கட்டிவிட்டு" இந்தக் காலைத் தூக்கு "என்ற அவரது வெண்கலக் குரல் கட்டளைகளை மீறவும் முடியாமல் நிறைவேற்றவும் முடியாமல் நான் மலங்க மலங்க விழிப்பதை பார்த்து அவர் முகத்தில் தோன்றிய ஒரு வெறித்தனமான மகிழ்ச்சியை நான் காணத் தவறவில்லை.

"சரி இதோட விட்டுடுவாரு" என்று நம்பி இருந்த என் ஆசைக்கு அணை போட்டு பெட்டியில் இருந்த கயிறு போன்ற ஒரு நீண்ட எலாஸ்டிக் நாடாவை எடுத்து என்னை பார்த்து குரூரமாக சிரித்தார் அந்தப் பெரியவர்.

"இது ரொம்ப சிம்பிள்.வெறும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிதான்." என்று சொல்லிவிட்டு அந்த நாடாவின் ஒரு முனையை என் காலிலும் இன்னொரு முனையை தள்ளி இருந்த மேஜையின் காலிலும் கட்டிவிட்டு "இழு! இழு!"என்று அதட்ட நான் ரோமானிய அடிமைகள் பாறையை இழுப்பது போல் இழுத்துப் பார்த்தேன்.இழுத்து இழுத்து என் காலின் நீளம் சற்று அதிகமாய் இருக்குமோ என்ற கவலை எனக்கு வந்து விட்டது.

கடைசியாக ஒருமுறை மீண்டும் ஆயில் மசாஜ்.!

சற்று கடினமாக, தொடையிலிருந்து உள்ளங்கால் வரை சூடு பறக்க வேகமாக அவர் உருவும் போது ஒரு கட்டத்தில் எனக்கு சொரணையே போய்விட்டது போல் தோன்றியது.அவர் வேறு யாருடைய காலையோ மசாஜ் செய்து கொண்டிருப்பது போல் தோன்றியது.

முதல் நாள் பயிற்சி முடிந்து "இன்னும் 14 நாட்கள் தாங்க வேண்டுமே? நடப்பது நடக்கட்டும்." என்று விட்டுவிட்டேன்.

15 நாள் சிகிச்சைக்குப் பின் ஒரு நிவாரணம் இருந்தது உண்மைதான்.ஆனாலும் முழுமையாக பழையபடி நடக்க இன்னும் ஆயிரம் நாள் பயிற்சியாவது தேவைப்படும் என்றே தோன்றியது.

(தொடரும் )