தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை -8 - மரியா சிவானந்தம்

202491816525969.jpg

எண்ணங்கள் வலிமையாக இருக்கும் போது அவை கனவுகளாக உருப்பெறுகின்றன .

மனதின் அடியாழத்தில் நிலை கொள்ளும் நினைவுகளே கனவுகள் பிறக்கின்றன .

காதலில் விழுந்தவருக்கு காதலும் ,காதல் தரும் இனிமையும் கனவுகளாக முகிழ்கின்றன .

நம் நற்றிணை நாயகி ஒருத்திக்கு எப்போதும் காதலன் நினைவுகளே

காதலன் வினை பொருட்டு பிரிந்து சென்ற போது அவள் தடுமாறுகிறாள் .

தலைவனைப் பிரிந்த அத்தலைவி அன்று ஒரு கனா காண்கிறாள்

அக்கனவைத் தன் தோழியிடம் விவரிக்கிறாள்

"நான் ஒரு கனவு கண்டேன் தோழி ,கேள்

ஊரின் நடுவே உள்ள மாமரத்தில் , முள் போன்ற பற்களைக் கொண்ட வெளவால் உயர்ந்த கிளையில் தொங்கிக் கொண்டே உறங்கும்.

அவ்வுறக்கத்தில் வரும் கனவில் கிட்டாத ஒன்றைப் பற்றி வெளவால் கனவு காணும்.

அக்கனவில் அது ஒரு நெல்லிக்கனியைக் உண்பதாகவே இருக்கும் .

அழிசி என்னும் சோழ மன்னனின் காட்டில் விளைந்து தனக்கு கிட்டாத அந்த நெல்லிக்கனியைப் பற்றியே அதன் கனவு இருக்கும்.அக்கனியின் இனிப்புக் கலந்த புளிப்புச் சுவையின் கனவில் அதன் மனம் திளைத்திருக்கும் .

அக்கனவை ஒத்த கனவை நானும் நேற்றிரவு கண்டேன்

என் கனவில் தலைவனுடன் நானும் கூடி மகிழ்ந்திருக்கிறேன். எல்லையில்லா இன்பத்தை நான் அப்போது அனுபவித்தேன்

அந்த பேரின்பம் எப்படி இருந்தது தெரியுமா ?

என் தலைவன் வாழும் நெய்தல் நில பகுதியில் புன்னை மரத்தின் அரும்புகள் மலரும். அவற்றில் இருந்து விழும் மகரந்த தாது அக்கடற் புறத்தில் மேயும் கிளிஞ்சல்களின் ஈரமான முதுகில் விழும் .

அக்கடற்கரை புறத்தில் வசிக்கும் பரதவர்கள் அக்காட்சியை மகிழ்ச்சியுடன் கண்டு ரசிப்பார்கள் .

அவர்களது மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சியை நான் அக்கனவில் அனுபவித்தேன் .

அக்கனவும் முடிந்தது .என் மகிழ்ச்சியும் கலைந்தது ." என்று தோழியிடம் மகிழ்வும், துயரும் ஒன்று சேர கூறி முடிக்கிறாள்

இதோ அப்பாடல்

உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,

வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,

அது கழிந்தன்றே தோழி! அவர் நாட்டுப்

பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,

பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

நற்றிணை 87

ஓர் அழகான கனவைக் கவிதையாக்கி ,அதில் நெய்தல் நிலத்தின் எழிலையும் பொதித்து வைத்துள்ளார் புலவர் நக்கண்ணையார் .

பெண் மனதை வேறு ஒரு பெண்ணால் தான் சிறப்பாக சொல்ல முடியும் .

மேலும் ஒரு நற்றிணை பாடலுடன் சந்திப்போம் .

தொடரும்